கொள்ளைநோய் நெருக்கடியில் யூனிசெப் கொள்ளைநோய் நெருக்கடியில் யூனிசெப் 

கோவிட்-19 தெற்கு ஆசிய சிறாரின் வாழ்வுக்கு அச்சுறுத்தல்

யூனிசெப் அமைப்பின் கணிப்புப்படி, ஏறத்தாழ 12 கோடிக்கும் அதிகமான சிறார், அடுத்த ஆறு மாதங்களுக்கு, வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக்கூடும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடந்த பல ஆண்டுகளாக முன்னேற்றம் கண்டுவந்த தெற்கு ஆசியாவின் மக்களைக் காப்பாற்றுவதற்கு, உடனடியாக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையெனில், கோவிட்-19 கொள்ளைநோய், அப்பகுதி மக்கள் அனைவரின் நம்பிக்கைகள் மற்றும், வருங்காலத்தை முழுவதும் அழிக்கும் என்று, ஐ.நா. வின் யூனிசெப் அமைப்பு, ஜூன் 23, இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கை எச்சரிக்கின்றது.

தெற்கு ஆசியாவின் கோவிட்-19 நெருக்கடிநிலை, அப்பகுதியில் ஏற்கனவே வலுவற்றுள்ள பல சிறார், உரிமை மீறல்களுக்கு உட்படக்கூடும் மற்றும், வன்முறையால் துன்புறக்கூடும் என்று கூறியுள்ள யூனிசெப் அமைப்பு, சிறாரைப் பாதுகாப்பதற்கு, சமுதாயங்கள் முன்னுரிமை கொடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. 

உலகின் மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினர் வாழ்கின்ற தெற்கு ஆசியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா கிருமி, அப்பகுதி மக்களை, குறிப்பாக, சிறாரின் நலவாழ்வு மற்றும் கல்வியைப் பாதித்துள்ளது என்றும், அந்த அறிக்கை கூறியுள்ளது.

கோவிட்-19ஆல் உருவாகியுள்ள உணவுப் பாதுகாப்பின்மை, நோய்எதிர்ப்புச்சக்தி குறைபாடு, சத்துணவின்மை மற்றும் நலவாழ்வு வசதிகள் இன்மை போன்றவற்றால் ஏறத்தாழ 60 கோடிச் சிறாரின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று, யூனிசெப் கவலை தெரிவித்துள்ளது. 

யூனிசெப் அமைப்பின் கணிப்புப்படி, ஏறத்தாழ 12 கோடிக்கும் அதிகமான சிறார், அடுத்த ஆறு மாதங்களுக்கு, வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக்கூடும். (UN)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2020, 15:25