மிக உயர புததர் உருவம் மிக உயர புததர் உருவம்  

விதையாகும் கதைகள் : மகான்களும் அவமதிப்புகளும்

நாம், எதிர்கொள்ளும் அவமதிப்புகளை நினைத்து கவலைப்படுவதை விடுத்து, அந்நேரங்களில் புத்தர் கையாண்ட முறையைப் பின்பற்றலாம்.

மேரி தெரேசா: வத்திக்கான்

புத்தர் ஒருநாள், ஒரு கிராமம் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அந்த ஊர் மக்கள், புத்தரை வாய்க்குவந்தபடி வசைபாடிக்கொண்டிருந்தனர். அப்போது புத்தர், நீங்கள் இன்னும் எதுவும் சொல்வதற்கு விரும்புகிறீர்களா, ஏனெனில் நான் அடுத்த கிராமத்திற்குப் போகவேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு நான் செல்லவேண்டும், அங்கு மக்கள் எனக்காகக் காத்திருப்பார்கள், நீங்கள் எனக்குச் சொல்லவேண்டியிருப்பது இன்னும் மீதமிருந்தால், நான் திரும்பி உங்கள் ஊர் பக்கம் வரும்போது சொல்லுங்கள், நீங்கள் சொல்வதைக் கேட்பதற்கு நேரம் ஒதுக்குகிறேன் என்று சொன்னார். புத்தர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட அந்த ஊர் மக்கள் வியப்புற்றனர். அந்த ஊர் மக்கள் புத்தரிடம், நாங்கள் உங்களை அவமதித்துப் பேசுகிறோம், ஆனால் நீங்களோ, இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டனர். அதைக் கேட்டு புத்தர் புன்னகைத்தார். நீங்கள் திட்டுவதும், அவமதிப்பதும் உங்களுக்கு இருக்கும் சுதந்திரம். ஆனால், அதை ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் எனக்குள்ள சுதந்திரம். இப்போது நீங்கள் பேசிய அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னார். பின்னர் புத்தர் அவர்களிடம், நான் உங்கள் கிராமத்திற்கு வருமுன் நான் கடந்துவந்த கிராம மக்கள், இனிப்பு வழங்கினார்கள். நான் அவர்களிடம், உங்கள் அன்புக்கு நன்றி, நான் இனிப்பு சாப்பிடுவதில்லை, அதனால் இனிப்புகள் எனக்கு வேண்டாம் என்று சொன்னேன். அப்போது அந்த மக்கள், அந்த இனிப்புகளை என்ன செய்திருப்பார்கள் என்று புத்தர் கேட்க, ஒருவர், அவர்கள் இந்த இனிப்புக்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள் என்று பதில் சொன்னார். அதுபோல, நீங்கள் எனக்குத் தந்த அவமதிப்புக்களை, உங்கள் வீடுகளுக்கு திரும்ப எடுத்துச் செல்லவேண்டியதுதான் என்று கூறினார் புத்தர். அந்த கிராம மக்கள் சிந்திக்கத் தொடங்கினர். ஆம். பெரியவர்கள் அவமதிப்புக்களை எதிர்கொண்ட முறை இதுதான். நாம், எதிர்கொள்ளும் அவமதிப்புகளை நினைத்து கவலைப்படுவதை விடுத்து, அந்நேரங்களில் புத்தர் கையாண்ட முறையைப் பின்பற்றலாம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2020, 14:17