நெப்போலியன் படகு நெப்போலியன் படகு 

விதையாகும் கதைகள்: நேரத்தின் பயனறிவர் சாதனையாளர்

சாதனையாளர்கள் நேரம் வரும்வரைக் காத்திராமல், முன்கூட்டியே திட்டமிடுபவர்கள். குறிக்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டு மற்ற நேரங்களை பயனாகப் பயன்படுத்துவது எப்படி என்று அவர்கள் அறிந்து வைப்பவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

புகழ்பெற்ற பிரெஞ்ச் பேரரசர் நெப்போலியன் அவர்கள் சாதாரண படைவீரராக இருந்த சமயத்தில், ஒரு கிராமத்தில் அவரும் மற்ற படைவீரர்களும் முகாம் போட்டிருந்தனர். பகலில் ஓய்வு நேரம் கிடைத்ததால், வீரர்கள் எல்லாரும் கூடாரத்தைவிட்டு வெளியே சென்று, ஆனந்தமாக ஆடிப்பாடி விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நெப்போலியன் மட்டும் கூடாரத்திலேயே தங்கி நல்ல நூல்களைக் கவனமாக வாசித்துக்கொண்டிருந்தார். அந்நேரத்தில் அக்கூடாரம் வழியாக வந்த கிராமப் பெண் ஒருவர் உள்ளே எட்டிப் பார்த்தார். அங்கே நெப்போலியனைக் கண்டு, மற்ற வீரர்களைப் போல வெளியே சென்று விளையாடாமல், பெண் மாதிரி உள்ளேயே உட்கார்ந்திருக்கிறாயே என்று ஏளனமாகச் சொல்லிச் சென்றார். அதற்கு நெப்போலியன் பதிலொன்றும் சொல்லவில்லை. ஆண்டுகள் உருண்டோடின. நெப்போலியன் அவர்கள் பிரெஞ்ச் பேரரசரரானார். ஒரு சமயம் அவருக்கு அதே கிராமத்திற்கு வர வாய்ப்பு கிட்டியது. அப்பெண் பற்றிய பழைய நினைவும் வந்தது. அப்பெண்ணைத் தேடிச் சென்றார். கண்டுபிடித்தும் விட்டார். அப்பெண்ணிடம் பேரரசர் நெப்போலியன் அவர்கள், அம்மா, என்னை நினைவிருக்கின்றதா? என்று கேட்டவுடன், அப்பெண், அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, உடனே பணிந்து, தாங்கள் பிரெஞ்ச் பேரரசர் நெப்போலியனா, இதற்குமுன்பு தங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று சொன்னார், வியப்போடு. ஆமாம் அம்மா, ஒரு காலத்தில் இந்த கிராமத்தில் சாதாரண படைவீரராக தங்கியிருந்தபோது, நான் கூடாரத்தில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து கேலி செய்தீர்களே, நினைவிருக்கிறதா என்று கேட்டார். சிறிது நேர சிந்தனைக்குப்பின் ஆமாம் பேரரசரே என்று தாள்பணிந்தார் அப்பெண். அப்பெண்ணை தூக்கிவிட்டுச் சொன்னார் நெப்போலியன் – அம்மா, அன்று மற்றவர்களைப் போல நானும் விளையாடிக்கொண்டு இருந்திருந்தால், இன்னும் அவர்களைப் போலத்தான் இருந்திருப்பேன் என்று. ஆம். சாதனையாளர்கள் நேரம் வரும்வரைக் காத்திராமல், முன்கூட்டியே திட்டமிடுபவர்கள். குறிக்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டு மற்ற நேரங்களை பயனாகப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து வைப்பவர்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2020, 10:12