அஸ்ஸாமில், வறிய குடும்பங்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவு வழங்கி வரும் ஜயந்த போரா அஸ்ஸாமில், வறிய குடும்பங்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவு வழங்கி வரும் ஜயந்த போரா 

விதையாகும் கதைகள் : பின்னே விழும் நிழல், பிணியைப் போக்கட்டும்

முழு அடைப்பு என்ற நிலையால் தங்கள் வேலைகளை இழந்து, உண்ண உணவின்றி தவிப்போருக்கு உதவிக்கரம் நீட்டுவோர் அனைவரும், நம் கதையில் கூறப்பட்டுள்ள மகானின் வழித்தோன்றல்கள்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

அயலவருக்கு நன்மைகள் செய்வதையே தன் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ஒரு மகானுக்கு முன், இறைவன் தோன்றினார். அந்த மகானின் அற்புத வாழ்வுக்குப் பரிசாக, அவர் கேட்கும் ஒரு வரத்தை தான் தர விழைவதாகச் சொன்னார், இறைவன். தனக்கு எதுவும் வேண்டாம் என்று அந்த மகான் மறுத்தார். இருந்தாலும், இறைவன் விடுவதாகத் தெரியவில்லை. மகான் ஏதாவது ஒரு வரத்தைக் கேட்கவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

இறுதியாக, அந்த மகான், "இறைவா, என் நிழலைத் தொடுவோர் அனைவரும் குணமடையவேண்டும். அத்தகைய வரம் தாரும்" என்று கேட்டார். இறைவன் அந்த வரத்தை மகிழ்வோடு தருவதாகச் சொன்னார். உடனே மகான் ஒரு நிபந்தனையைச் சொன்னார். "இறைவா, எப்போதெல்லாம் என் நிழல் எனக்குப் பின்னே விழுகிறதோ, அந்த நிழலுக்கு மட்டுமே, குணமளிக்கும் சக்தியை நீர் தரவேண்டும்" என்று அந்த மகான் வேண்டிக்கொண்டார். இறைவன், அந்த மகான் கேட்டபடியே, அவருக்குப் பின் விழும் நிழலுக்கு மட்டும் குணமளிக்கும் சக்தியைக் கொடுத்தார்.

விளம்பரங்களைத் தேடாமல், பலனையும், புகழையும் எதிர்பாராமல், நன்மைகள் செய்வோர் இவ்வுலகில் எப்போதும் வாழ்ந்துவருகின்றனர். கோவிட்-19 தொற்றுக்கிருமியினால் உருவாகியுள்ள நெருக்கடியில், பல்லாயிரம் உயிர்களைக் காக்க, இரவும், பகலும் போராடிவரும் மருத்துவப் பணியாளர்களும், முழு அடைப்பு என்ற நிலையால் தங்கள் வேலைகளை இழந்து, உண்ண உணவின்றி தவிப்போருக்கு உதவிக்கரம் நீட்டுவோர் அனைவரும், நம் கதையில் கூறப்பட்டுள்ள மகானின் வழித்தோன்றல்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 April 2020, 14:27