இந்தியாவில் வழிபாட்டுத் தலம் எரிக்கப்பட்டுள்ள காட்சி இந்தியாவில் வழிபாட்டுத் தலம் எரிக்கப்பட்டுள்ள காட்சி 

இந்தியாவில் மதச்சுதந்திரம் அதிகமாகப் பாதிப்பு

மத உரிமைகளுக்கு ஆபத்தாக விளங்கும் பாகிஸ்தான், சீனா, வட கொரியா ஆகிய நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ள வேறு 13 நாடுகளில், இந்தியாவும் இணைக்கப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிறுபான்மை மதத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு, 2019ம் ஆண்டு பெருமளவில் தவறிவிட்டது என்று, மதச் சுதந்திரம் குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டு அவை ஒன்று (USCIRF) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் செயலாற்றும் இந்திய நடுவண் அரசு, சிறுபான்மையினரின், குறிப்பாக, இஸ்லாமியரின் மத உரிமைகளுக்கு எதிராக அரசியல் சட்டங்களை அமல்படுத்தி வருகிறது என்று, இந்த அவை, ஏப்ரல் 28, இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

மத உரிமைகளுக்கு ஆபத்தாக விளங்கும் பாகிஸ்தான், சீனா, வட கொரியா ஆகிய நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ள வேறு 13 நாடுகளில், 2004ம் ஆண்டுக்குப்பின், இந்தியா, தற்போது இணைக்கப்பட்டுள்ளது என்று UCA செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

மதமாற்றத் தடைச்சட்டம் இந்தியாவின் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், இதையொட்டி, இந்து மத அடிப்படைவாதக் குழுக்கள் மேற்கொள்ளும் வன்முறைகளைத் தடுக்கும் முயற்சிகளை காவல்துறையினர் மேற்கொள்வதில்லை என்பதையும், இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.

பாகிஸ்தான், சீனா, வட கொரியா, இந்தியா ஆகிய நாடுகளோடு, மியான்மார், எரித்ரியா, ஈரான், சவுதி அரேபியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், நைஜீரியா, இரஷ்யா, சிரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் மதச் சுதந்திரம் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2020, 14:48