பிரெய்ல் எழுத்து உலக நாள் பிரெய்ல் எழுத்து உலக நாள் 

பிரெய்ல் எழுத்து உலக நாள், சனவரி 04

இன்று உலகில், ஏறத்தாழ 220 கோடிப் பேர், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மற்றும், பார்வைத்திறனை முற்றிலும் இழந்தவர்கள் - WHO

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பார்வைத் திறனை முற்றிலும் இழந்தவர்கள் மற்றும், பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் வாசிக்க உதவும் பிரெய்ல் எழுத்து உலக நாள், அம்மக்களின் தொடர்பு அமைப்புமுறை மற்றும், அவர்களின் முழுமையான மனித உரிமைகள் பற்றி  உலகினர் உணர்ந்துகொள்வதற்கு உதவுகின்றது என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது.

சனவரி 04, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட இரண்டாவது பிரெய்ல் எழுத்து உலக நாள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம், இன்று உலகில், ஏறத்தாழ 220 கோடிப் பேர், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மற்றும், பார்வைத்திறனை முற்றிலும் இழந்தவர்கள் என்று கூறியுள்ளது.

இந்த 220 கோடிப் பேரில், ஏறத்தாழ நூறு கோடிப் பேர், அவர்களின் நிலைமை கண்டுகொள்ளப்படா நிலையில் உள்ளனர் என்றும், கண்பார்வையை முற்றிலும் இழந்தவர்களைவிட, பார்வைத்திறனில் குறைபாடு உள்ளவர்களே, வறுமை, சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை மற்றும், வாய்ப்புகள் அற்ற நிலையை அனுபவிக்கின்றனர் என்றும், WHO நிறுவனம் கூறியுள்ளது.

பிரெய்ல் எழுத்துமுறை, இத்தகைய மக்களின் அடிப்படை சுதந்திரங்களை ஊக்குவிக்கின்றது என்றுரைக்கும் உலக நலவாழ்வு நிறுவனம், ஆறு புள்ளிகளைக் கொண்ட பிரெய்ல் எழுத்து மொழி, எழுத்துக்கள் மற்றும் எண்களின் அடையாளங்களைத் தொடுதல் வழியாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது என்று கூறியுள்ளது.       

பிரெய்ல் எழுத்துமுறையைக் கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்ல் அவர்கள், பிறந்த சனவரி மாதம் 4ம் தேதி, பிரெய்ல் எழுத்துமுறை உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த உலக நாள் 2019ம் ஆண்டில் முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

லூயிஸ் பிரெய்ல் அவர்கள், பிரான்சின் வடக்கிலுள்ள Coupvray  என்ற நகரில், 1809ம் ஆண்டு சனவரி 4ம் தேதி பிறந்தார். இவர் தனது மூன்றாவது வயதில் இடம்பெற்ற ஒரு விபத்தில் இரு கண்களையும் இழந்தார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2020, 15:07