ஜெர்மனியில் விண்மீன் இசைக் குழுவினர் ஜெர்மனியில் விண்மீன் இசைக் குழுவினர் 

வாரம் ஓர் அலசல் – நம்பிக்கைதரும் தெய்வ தரிசனம்

நம் வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். கடவுளை, வாழ்வின் மையமாக வைக்க வேண்டும்.

மேரி தெரேசா - வத்திக்கான்

ஓர் ஊருக்குப் பதிதாகத் திருட வந்த ஒருவன், அங்கு பாகவதர் ஒருவர், சமய சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து அங்குச் சென்று அமர்ந்தான். பாகவதர், குறிப்பிட்ட ஒரு தெய்வத்தின் கழுத்தில் இருந்த நகைகளை வர்ணித்துக்கொண்டிருந்தார். அதைக் கேட்ட அந்த திருடன், அன்றிரவு பாகவதர் வீட்டில் புகுந்து, அந்த நகைகளை அணிந்திருப்பவர் எங்கிருக்கிறார் என்று கேட்டான். அவரும், அந்தக் கோவிலின் முகவரியைக் கொடுத்தார். சிறிது நாள்கள் சென்று, திருடன் பாகவதரைப் பார்க்க வந்தான். அவரிடம் நிறைய நகைகளைக் கொடுத்து, "இது உம் பங்கு, பாதி'' என்றான், திருடன். பாகவதருக்குப் புரியவில்லை. ''நீர் சொன்ன இடத்திற்குப் போனேன். நகை போட்டுக்கொண்டு அங்கு அவரிருந்தார். அதை எடுத்து வந்தேன்" என்றான். பாகவதர் கண் கலங்கினார். "உனக்கு இருக்கும் பக்தி எனக்கில்லை. நம்பிக்கையோடு போய், கடவுளைத் தரிசனம் செய்து விட்டாய், எனக்கும் காட்டு'' என்று கேட்டார். இருவரும் போனார்கள். தரிசனம் கிடைத்தது. தெய்வம் திருடனைப் பார்த்து "உனக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டார். "நான் தினமும் உன்னை ஒரு முறை தரிசிக்க வேண்டும்'' என்றான் திருடன். தெய்வம் தரிசனம் தந்தபின், திருடனின் மனம் வேறெதையும் நாடவில்லை.

தெய்வ தரிசனம்

தெய்வம், பல்வேறு வடிவங்களில், பல்வேறு சூழல்களில், பல்வேறு நிலைகளில் தம்மை வெளிப்படுத்தி வருகிறார். பக்தர்களின் கனவில், காட்சியில், ஆலயத்தில், இயற்கையில்.. அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். இவ்வாறு ஏறத்தாழ எல்லா மதங்களிலும், தெய்வ தரிசன அனுபவங்களைப் பெற்றுள்ள பலர் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். புனித பவுல், புனித மார்கிரேட் மரியா அலக்கோக் (1673,டிச.27) போன்ற பலருக்கு, இயேசு காட்சியளித்திருக்கிறார். வேளாங்கன்னி, லூர்து நகர், பாத்திமா, குவாதலூப்பே போன்ற பல இடங்களில் அன்னை மரியா காட்சியளித்திருக்கிறார். காரைக்கால் அம்மையாருக்கு, தெய்வம் மாம்பழமாகக் காட்சி அளித்தது. திருமுருகாற்றுப்படை நூலை இயற்றிய புலவர் நக்கீரர், பாண்டிய மன்னர் அவையில் இருந்தபோது, சிவபெருமான், தருமி என்ற ஏழைப் பூசாரிக்கு பாட்டு எழுதிக் கொடுத்தார் எனவும், அந்தப் பாடலில், நக்கீரர் பிழை கண்டதால் இவரை சிவபிரான் நெற்றிக்கண் காட்டி எரித்து, பின்னர் சிவதரிசனம் தந்து, அவரை உயிர்ப்பித்ததாகவும் வாசித்திருக்கிறோம். இயற்கையில் தெய்வத்தைக் கண்டு, கவிபுனைந்த கவிஞர்கள் பலர் உள்ளனர். ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வர்த் அவர்கள், மலை உயிர்பெற்றெழுந்து நகருவதைக் கண்டேன் என்று எழுதியுள்ளார்.

கீழ்த்திசை ஞானிகள்

கிறிஸ்மஸ் குடில்களைப் பார்க்கும்போது, அவற்றில் நம்மைக் கவரும் மனிதர்களில் மூவர், நீண்ட பகட்டான பட்டாடை அணிந்து கைகளில் விலையுயர்ந்த பரிசுப்பொருள்களையும் வைத்திருப்பவர்கள். இவர்கள் இறைமகன் இயேசுவின் தரிசனம் பெற்றவர்கள். இவர்களை, “கிழக்கிலிருந்து” வந்த ஞானிகள். (மத்.2:1) என்று நற்செய்தி கூறுகிறது. இந்த கீழ்த்திசை ஞானிகள், வானில் தோன்றிய விண்மீனைக் கண்டு அதைப் பின்தொடர்ந்து பெத்லகேம் வந்து குழந்தை இயேசுவை தரிசனம் செய்து ஆசீர்பெற்றவர்கள். இந்த ஞானிகளுக்கு இறைவன் தம்மை வெளிப்படுத்திய திருக்காட்சியை, கீழைவழிபாட்டுமுறை கிறிஸ்தவர்கள், கிறிஸ்மஸ் பெருவிழாவாக, சனவரி 7ம் தேதியன்று சிறப்பிக்கின்றனர். வத்திக்கானிலும், இத்தாலியிலும், சனவரி 6ம் தேதி ஆண்டவரின் திருகாட்சிப் பெருவிழா என இந்நிகழ்வு கொண்டாடப்படுகிறது. சனவரி 6, இத்திங்கள் காலை பத்து மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், இப்பெருவிழாத் திருப்பலியை நிறைவேற்றினார். அப்போது, வழிபாடு செய்தல் என்ற தலைப்பை மையப்படுத்தி திருத்தந்தை மறையுரையாற்றினார்.

மறையுரை

“கிழக்கில் அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் (மத்.2,2)” என்று, மூன்று கீழ்த்திசை ஞானிகளும், பெத்லகேமுக்கு வந்ததன் காரணத்தைச் சொல்வதோடு, இப்பெருவிழா திருப்பலியின் நற்செய்தி வாசகம் (மத். 2:1-12) தொடங்குகிறது என்று மறையுரையை திருத்தந்தை துவக்கினார்.  

ஏரோது

மூன்று கீழ்த்திசை ஞானிகள் மேற்கொண்ட அந்த பயணத்தின் இலக்கு வழிபடுதலாகும். உண்மையில், பெத்லகேமில் விண்மீன் நின்றதைக் கண்டதும், அவர்கள், அந்த இடத்திற்குப் போய்க் குழந்தையை, அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள் (மத்.2,11).  வழிபடுதல் என்ற சொல்லைப் பயன்படுத்திய ஏரோது அரசன், ஏமாற்றவே அதைப் பயன்படுத்தினான்.  ஏரோது அந்த ஞானிகளிடம், நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். உண்மையில் ஏரோது தன்னை மட்டுமே வணங்கினான். அதனாலேயே, பொய்யின் வழியாக, அந்தக் குழந்தையை தன்னிடமிருந்து அகற்றிவிட விரும்பினான். எனவே நாமும், கிறிஸ்தவ வாழ்வில் வழிபடுதல் என்ற உணர்வை இழக்கும்போது, நம் இலக்கை இழக்கிறோம். நாம் கடவுளை வழிபடவில்லையென்றால், அந்நிலை, நம்மையே நாம் வழிபடுவதில் கொண்டுபோய் நிறுத்தும். கடவுளுக்குப் பணிபுரியாமல் அவரைப் பயன்படுத்துவது, மிகவும் ஆபத்தானது.

தலைமைக் குருக்கள்

ஏரோதுடன், தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் வழிபடத் திறனற்றவர்களாய் இருந்தனர் என்று, இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இவர்கள் ஏரோதிடம், யூதேயாவின் பெத்லகேமில் மெசியா பிறப்பார் என்பதை, மிகத் துல்லியமாக கூறினர். இவர்கள் இறைவாக்குகளை அறிந்தவர்கள் மற்றும், அவற்றைச் சரியாக மேற்கோள் காட்டத் தெரிந்தவர்கள். எங்கே செல்வது என்று தெரிந்திருந்தும், அங்கே செல்லாதவர்கள். இவர்களிடமிருந்தும் நம் கிறிஸ்தவ வாழ்வுக்குப் பாடம் கற்கிறோம். கிறிஸ்தவ வாழ்வில் அறிவு மட்டும் இருந்தால் போதாது. ஞானிகள் போன்று  முழந்தாளிடத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிடில், இறையியலும், சாரமுள்ள மேய்ப்புப்பணியும் அர்த்தமற்றதாகிவிடும். விசுவாசம் என்பது, சிறந்த கோட்பாடுகளால் ஆனது அல்ல, மாறாக, நாம் அன்புகூர அழைக்கப்பட்டுள்ள உயிருள்ளவரோடு உறவில் வாழ்வதாகும் என்பதை, வழிபடும்போது உணரத் தொடங்குவோம். புதிய ஆண்டைத் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், விசுவாசம், வழிபட நம்மை வலியுறுத்துகிறது என்பதை மீண்டும் கண்டு கொள்வோமாக. வழிபாடு செய்தல் என்பது, நம்மை அல்ல, மாறாக, ஆண்டவரை நம் வாழ்வின் மையமாக வைப்பதாகும். அதாவது, கடவுளுக்கு முதலிடம் அளித்து, மற்றவைகளுக்கு அதனதன் இடங்களைக் கொடுப்பதாகும்.

வழிபடுதல்

வழிபடுதல் என்பது, இயேசுவிடம் கோரிக்கை பட்டியலுடன் செல்லாமல், அவரோடு நிலைத்திருப்பது, அவரோடு ஒன்றித்திருப்பது என்ற ஒரே விண்ணப்பத்துடன் மட்டும் செல்வதாகும். போற்றுவதிலும், நன்றிசொல்வதிலும், மகிழ்வும், அமைதியும் அதிகரிக்கின்றன என்பதை உணர்வதாகும். வழிபடும்போது, இயேசு நம்மைக் குணமாக்கவும், மாற்றவும், நம் இருளின் மத்தியில் ஒளியை ஏற்றவும் அனுமதிக்கிறோம். வழிபடுதலில், பணத்தின் கடவுள், நுகர்வின் கடவுள், புலனுணர்வு இன்பத்தின் கடவுள், வெற்றியின் கடவுள், தன்னலத்தின் கடவுள் போன்ற வழிபடக்கூடாதவற்றைப் புறக்கணிக்க கற்றுக்கொள்கிறோம். வழிபடுதல் என்பது, வாழ்வில் எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதில் அல்ல, மாறாக, அன்புகூர்வதில் உள்ளது என்பதை, எல்லாம்வல்லவரின் பிரசன்னத்தில் கண்டுகொள்வதாகும். இறையன்பில், நாம் எல்லாரும் உடன்பிறப்புகள் என ஏற்பதாகும். வழிபடுதல் என்பது, இறைவார்த்தையின் பிரசன்னத்தில் அமைதியாக இருப்பதும், புண்படுத்தும் சொற்களை அல்ல, மாறாக, ஆறுதலளிக்கும் சொற்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதாகும். வழிபடுதல் என்பது, நம் வாழ்வை மாற்றும் ஓர் அன்புச் செயலாகும். கீழ்த்திசை ஞானிகள் ஆற்றியது போன்று, ஆண்டவரிடம் பொன்னை அர்ப்பணித்து, அவரைவிட விலைமதிப்பற்றது எதுவும் இல்லையெனச் சொல்வதாகும். சாம்பிராணியைக் கொடுத்து, அவரோடு ஒன்றித்திருப்பதில் மட்டுமே என் வாழ்வு விண்ணை நோக்கி உயரும் எனச் சொல்வதாகும். வெள்ளைப் போளத்தை அர்ப்பணித்து, காயமுற்றோருக்கு மருந்திடுவேன், அவர் பிரசன்னமாக இருக்கும் விளிம்புநிலையில் மற்றும், துன்புறும் அயலவருக்கு உதவுவேன் என உறுதியளிப்பதாகும். இவ்வாறு ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நான் வழிபடும் கிறிஸ்தவரா? ஒவ்வொரு நாளின் பணிகள் மத்தியில், வழிபடுவதற்கு நேரம் ஒதுக்குகிறேனா? போன்ற கேள்விகளை ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ளுமாறு கூறினார். நம் வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். கடவுளை, வாழ்வின் மையமாக வைக்க வேண்டும். அப்போது அவர் நம் வாழ்வை ஒளிரச் செய்வதை உணர்வோம்.       

பக்தருக்கு தெய்வ உதவி

அன்று மருத்துவர் ஒருவர், அறுவைச் சிகிச்சை செய்துவிட்டு, தெய்வ தரிசனம் பெறுவதற்காக அவசரமாக கிளம்பினார். நோயாளி மனம் உடைந்தார். மறுநாள் அவருக்குச் சிறுநீர் பிரியாமல் துன்புற்றார். மருத்துவரை நொந்து கொண்டார். அந்நேரத்தில் யாரோ ஒருவர் வந்து படுக்கை அருகில் நின்றார். இவர் கால் கட்டை விரலைப் பிடித்து உலுக்கினார். உபாதை மறைந்து, சிறுநீர் பிரிந்தது. தரிசனம் முடிந்து வந்த மருத்துவர், நடந்தது பற்றிக் கேள்விப்பட்டு, யார் இதைச் செய்தது என்று எல்லாரையும் விசாரித்தார். தெரியவில்லை. அங்கு மாட்டப்பட்டிருந்த ஒரு தெய்வத்தின்  படத்தைக் காண்பித்து, இவரா வந்தார் என நோயாளியிடம் கேட்டார். இவர்தான் வந்தார் என்றார் நோயாளி. ஆம். அன்பு இதயங்களே, பக்தன் விட்டுவிட்டு வந்த நோயாளியைக் கவனிக்க தெய்வம் வந்து தரிசனம் கொடுத்தது எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியது. கடவுள், தம்மை நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடாதவர்.

வாரம் ஓர் அலசல் – நம்பிக்கைதரும் தெய்வ தரிசனம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2020, 15:05