ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வயதானப் பெண்மணி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வயதானப் பெண்மணி 

விதையாகும் கதைகள் : 'கடவுளுக்கு' கடிதம்

உதவி செய்யும்போதும், முழுமையான பாராட்டு வந்து சேரும் என்ற உத்தரவாதம் கிடையாது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கிறிஸ்மஸ் விழாவுக்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது. அந்த சிற்றூரின் அஞ்சல் நிலையத்தில் கடிதங்கள் குவிந்திருந்தன. அவற்றைப் பிரித்துக்கொண்டிருந்த பணியாளர், ஒரு கடித உறையின் மேல், 'கடவுளுக்கு' என்று, ஒரு வார்த்தையில் முகவரி எழுதப்பட்டிருந்ததைக் கண்டார். அம்மடலைப் பிரித்தார்.

"அன்புக் கடவுளே, நான் 83 வயதான ஒரு கைம்பெண். எனக்குக் கிடைக்கும் மிகச் சிறிய ஓய்வூதியத்தில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நேற்று, என் கைப்பையை யாரோ ஒருவன் திருடிவிட்டான். அதில், என் ஓய்வூதியம் 100 டாலர்கள் இருந்தன.

அந்தப் பணத்தை நம்பி, இரு நண்பர்களுக்கு கிறிஸ்மஸ் விருந்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டேன். இப்போது, அவர்களுக்கு விருந்து கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. உறவினரும், நண்பர்களும் இல்லாததால் யாரிடமும் உதவி கேட்க இயலாது. எனவேதான் இம்மடலை அனுப்புகிறேன். எனக்கு தயவுசெய்து உதவி செய்வாயா?" என்று அம்மடலில் எழுதப்பட்டிருந்தது.

அம்மடல் அஞ்சல் பணியாளரின் உள்ளத்தைத் தொட்டது. அதை, அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் காட்டினார். அவர்கள் அனைவரும், தங்களிடமிருந்த பணத்தைத் திரட்டி, 96 டாலர்களை அந்தக் கைம்பெண்ணின் முகவரிக்கு அனுப்பிவைத்தனர்.

கிறிஸ்மஸ் முடிந்தபின், அந்த கைம்பெண்ணிடமிருந்து மற்றொரு மடல் 'கடவுளுக்கு' என்ற முகவரியுடன் வந்து சேர்ந்தது. அஞ்சல் நிலையப் பணியாளர்கள், அதை ஆவலுடன் பிரித்துப் படித்தனர்.

"அன்புக் கடவுளே, நீ செய்த உதவிக்குக் கோடான கோடி நன்றி. என் நண்பர்களும் நானும், கிறிஸ்மஸ் விருந்துண்டு மகிழ்ந்தோம். உனக்கு நான் எழுதிய மடலையும், நீ அனுப்பிவைத்த பணத்தையும் பற்றி அவர்களிடம் சொன்னேன்.

கடவுளே, ஒரு விடயத்தை உன்னிடம் சொல்லியே ஆகவேண்டும். எனக்கு வந்த அஞ்சல் உறையில் 4 டாலர்களைக் காணோம். இந்த ஊர் அஞ்சல் பணியாளர்தான் அதை எடுத்திருக்கவேண்டும்" என்று அம்மடலில் எழுதியிருந்தார், வயதான அக்கைம்பெண்.

உதவி செய்யும்போதும், முழுமையான பாராட்டு வந்து சேரும் என்ற உத்தரவாதம் கிடையாது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2020, 15:15