ஹங்கேரி நாட்டில் 2020ம் ஆண்டு சனவரி முதல் தேதி பிறந்த குழந்தையும், தாயும் ஹங்கேரி நாட்டில் 2020ம் ஆண்டு சனவரி முதல் தேதி பிறந்த குழந்தையும், தாயும் 

2020, சனவரி 1ல் உலகில் 3,92,000 குழந்தைகள் பிறப்பு

உலகில், 2020ம் ஆண்டின் முதல் நாளில் பிறந்த குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர், இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, அமெரிக்க ஐக்கிய நாடு, காங்கோ சனநாயக குடியரசு, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் பிறந்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சனவரி முதல் நாளான இப்புதனன்று பிறந்த 3 இலட்சத்து, 92 ஆயிரத்திற்கு அதிகமான குழந்தைகளை, இந்த உலகம் வரவேற்றது என்றும், இவர்களின் வருங்காலம் பற்றி உலகினர் சிந்தித்துப் பார்ப்பதற்கு, இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும், யூனிசெப் அமைப்பு கூறியுள்ளது.

2020ம் ஆண்டில், முதல் குழந்தை பீஜி நாட்டில் பிறந்துள்ளது என்றும், ஆண்டின் முதல் நாளில் பிறந்த குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர், இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, அமெரிக்க ஐக்கிய நாடு, காங்கோ சனநாயக குடியரசு, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் பிறந்துள்ளனர் என்றும், யூனிசெப் கூறியது.

இந்த ஆண்டின் முதல் நாளும், இதைத் தொடர்ந்து வரும் பத்தாண்டுகளும், நம் வருங்காலத்தின் நம்பிக்கைகள் மற்றும், ஆவல்களை மட்டுமன்றி, நமக்குப்பின் வருகின்றவர்களின் வருங்காலம் பற்றியும் சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளன என்று, யூனிசெப் அமைப்பின் இயக்குனர் Henrietta Fore அவர்கள் கூறியுள்ளார்.

2018ம் ஆண்டில், 25 இலட்சம் குழந்தைகள், பிறந்த முப்பது நாள்களுக்குள்ளே இறந்தன என்றும், இக்குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதி, பிறந்த அன்றே இறந்தன என்றும், Fore அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், ஒவ்வோர் ஆண்டும், 25 இலட்சத்திற்கு அதிகமான குழந்தைகள், இறந்தே பிறக்கின்றன என்றும் கூறிய Fore அவர்கள், கடந்த முப்பது ஆண்டுகளில் குழந்தை இறப்புக்களைத் தடுப்பதில் மிகப்பெரிய முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது எனவும் கூறியுள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2020, 16:12