ஆசியா பீபியின் விடுதலையை எதிர்த்து பாகிஸ்தானில் போராட்டம் ஆசியா பீபியின் விடுதலையை எதிர்த்து பாகிஸ்தானில் போராட்டம் 

மரண தண்டனை தீர்ப்பு, நீதியைக் கேலி செய்வதாக உள்ளது

பாகிஸ்தானில் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தெய்வநிந்தனை குற்றச்சாட்டின்பேரில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது, நீதியைக் கேலி செய்வதாக உள்ளது - ஐ.நா. மனித உரிமை வல்லுனர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தெய்வநிந்தனை குற்றச்சாட்டின்பேரில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது, நீதியைக் கேலி செய்வதாக உள்ளது என்று, ஐ.நா. மனித உரிமை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Multanலுள்ள Bahauddin Zakariya பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான 33 வயது நிரம்பிய Junaid Hafeez என்பவருக்கு, டிசம்பர் 21, கடந்த சனிக்கிழமையன்று, முல்டான் நீதிமன்றம், மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு, பாகிஸ்தானிய கிறிஸ்தவர் ஆசியா பீபி அவர்கள் குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, அந்நாட்டுக்கு ஒரு மைல் கல்லாக உள்ளது என்று கூறியுள்ள ஐ.நா. வல்லுனர்கள், பேராசிரியர் Hafeez அவர்கள் பற்றிய தீர்ப்பையும், அரசு மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

பேராசிரியர் Hafeez அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, நீதியைக் கிண்டல் செய்வதுபோல் உள்ளது என்றும், அவர் மீது விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கின்றோம் என்றும், ஐ.நா. வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

தனது சொற்பொழிவுகள் மற்றும், முகநூலில் தெய்வநிந்தனைக்குரிய கருத்துக்களைக் கூறினார் என்று சொல்லி, 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி, பேராசிரியர் Hafeez அவர்கள் கைது செய்யப்பட்டார்.

2014ம் ஆண்டில் அவர் குற்றம் பற்றிய விசாரணை தொடங்கியதிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டார், இது அவரின் மன, மற்றும், உடல் நிலையில் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்று ஐ.நா. மனித உரிமை வல்லுனர்கள் கூறியுள்ளனர். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2019, 15:40