வேப்பங்குடி கிராமத்தில் காய்கறித் தோட்டம்   அமைக்கும் இளைஞர் நரேந்திரன்  வேப்பங்குடி கிராமத்தில் காய்கறித் தோட்டம் அமைக்கும் இளைஞர் நரேந்திரன்  

பூமியில் புதுமை : கிராம சமுதாய காய்கறித் தோட்டம்

அமெரிக்காவில் பணியாற்றும் இளைஞர் நரேந்திரன் அவர்கள், தனது வேப்பங்குடி கிராமத்தில் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைத்து, அதை கிராம மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

நரேந்திரன் என்ற இளைஞர், கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கணனி தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். இவர், தனது கிராமத்தைப் பசுமையாக மாற்ற நினைத்து, கிராமம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறார். அதோடு, தன் கிராம மக்களுக்கு உடல் நலன் சிறக்க வேண்டும் என்பதற்காக, கடந்த மூன்று ஆண்டுகளாக வீடுதோறும் பாரம்பரியக் காய்கறி விதைகளைக் கொடுத்து, இயற்கை காய்கறித் தோட்டம் அமைக்க வைத்தார். மேலும், இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைப்பது எளிதானது மற்றும் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியது என்பதை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக, நரேந்திரன் அவர்கள், அந்த கிராமத்தில், ஒன்றரை ஏக்கரில் காய்கறித் தோட்டம் உருவாக்கி, அதை கிராம மக்களுக்கே அர்ப்பணித்திருக்கிறார். அதாவது, அதில் விளையும் காய்கறிகளைக் கிராம மக்கள் இலவசமாகப் பறித்துக்கொள்ளலாம் என்றும் சொல்லியுள்ளார். இந்த கிராம சமுதாய காய்கறித் தோட்டம் பற்றிக் கூறும் இளைஞர் நரேந்திரன் அவர்கள், இது நஞ்சில்லாத உணவு கிடைக்க வழிசெய்யும். கிராமங்களில் வீட்டுத்தோட்டம் போடும் பழக்கமே மறந்து போய்விட்டது. அதை மீட்டெடுக்கவும், சுயச்சார்பு வாழ்வியலை உணர்த்தவும் இந்த முயற்சி ஊக்கப்படுத்தும். ஒரு காலத்தில் வீட்டில் உள்ள காய்கறிகளை, பக்கத்து வீட்டோடு பகிர்ந்து கொடுத்த பழக்கம் இன்று இல்லை. எனவே, சமுதாய காய்கறித் தோட்டத்தால், மனிதாபிமானம், பகிர்ந்து உண்ணுதல், உறவு மேம்படுதல் போன்ற பல பண்புகள் வளரும். இந்தத் தோட்டத்தைப் பராமரிக்க இளைஞர்கள் தயாராக உள்ளனர். எனவே, சாதாரண காய்கறித் தோட்டம் என்று மட்டும் இதைப் பார்க்க முடியாது. இதனால், ஓர் எதிர்காலத் தலைமுறையே உடல், உள்ள நலம் பெறுவது மட்டுமல்லாமல், பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு வளமான வாழ்வு வாழவும் இது வழிவகுக்கும். இப்படி கிராம மக்களுக்காக சமூகக் காய்கறித் தோட்டம் அமைப்பது தமிழகத்திலேயே இதுதான் முதல்முறை. இதுபோல வேறு ஊர்களில் சமுதாயக் காய்கறித்தோட்டம் அமைக்க நினைப்பவர்களுக்கு, நாங்கள் பயிற்சி கொடுக்கத் தயாராக இருக்கிறோம். (நன்றி – விகடன், துரை.வேம்பையன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2019, 14:51