ஊட்டியில் நெகிழிப்பொருள்கள் ஊட்டியில் நெகிழிப்பொருள்கள்  

பூமியில் புதுமை: நெகிழிப்பொருள்கள் தடைக்கு உதவும் 'கூகுள்'

சுற்றுலா பயணியரை ஈர்க்கும் ஊட்டியை, நெகிழிப் பொருள்களற்ற சுற்றுலா மையமாக மாற்றுவதற்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகம் 'கூகுள்' நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

மேரி தெரேசா – வத்திக்கான்

தமிழகத்தில் ஆண்டுக்கு 35 இலட்சம் சுற்றுலா பயணியர் செல்லும் ஊட்டியை, நெகிழிப் பொருள்களற்ற சுற்றுலா மையமாக மாற்றும் முயற்சியில், 'கூகுள்' நிறுவனமும், நீலகிரி மாவட்ட நிர்வாகமும் ஒன்றிணைந்துள்ளன. ஊட்டிக்கு வருகைதரும் சுற்றுலா பயணியர்,   நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதிகளில் வீசியெறியும் நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. மேலும், வன உயிரினங்களும் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் 21 வகையாக நெகிழிப் பொருட்களுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து, நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. எனினும், சுற்றுலா பயணியர் தங்கள் வாகனங்களில் எடுத்துவரும் நெகிழிப் பொருட்களால் சூழலியல் பிரச்சனை தொடர்கிறது. இதனால், சுற்றுலா பயணியர் மத்தியில் நெகிழிப் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் வகையில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் 'கூகுள்' நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்கள், தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், சுற்றுலா பயணி ஒருவர், கூகுளில் 'ஊட்டி, உதகமண்டலம், நீலகிரி, புளூ ஹில்ஸ்' எனத் தேடும் போதும், நெகிழிப் பொருள்கள் தடை குறித்த தகவலை 'பாப்- அப்' செய்யும்படி கூகுளுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளோம், இதை செயல்படுத்த அந்நிறுவனம் நாற்பது நாள்கள் அவகாசம் கேட்டுள்ளது, இந்த முயற்சி வெற்றி பெற்றால், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணியர் நெகிழிப் பொருள்கள் தடை குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இதனால் மாவட்டத்தில் நூறு விழுக்காடு நெகிழிப் பொருள்கள் ஒழிய வாய்ப்புள்ளது என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 November 2019, 15:03