சந்தைக்கு போகும் உருளைக்கிழங்கு சந்தைக்கு போகும் உருளைக்கிழங்கு 

பூமியில் புதுமை : உணவைப் பயிரிட, அனுமதி தேவை

பெப்சிகோ நிறுவனம் ஏன் இந்திய உருளைக்கிழங்கு விவசாயிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டும்? விவசாயிகளுக்கு, விரும்பிய பயிரை விளைவிக்க உரிமை இல்லையா?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பன்னாட்டு நிறுவனமான பெப்சிகோ, இந்தியாவின், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, உருளைக்கிழங்கு விவசாயிகள் மீது, கடந்த ஆண்டு, வழக்கு தொடர்ந்தது. பெப்சிகோ நிறுவனம், ஏன், உருளைக்கிழங்கு விவசாயிகள் மீது, வழக்கு தொடுக்கவேண்டும்? விவசாயிகளுக்கு, விரும்பிய பயிரை விளைவிக்க உரிமை இல்லையா? இங்கு பிரச்சனைதான் என்ன?

குளிர்பானங்களை தயாரித்து விற்பனை செய்வதோடு, லேஸ் (Lay's) உள்ளிட்ட பெயர்களில், சிறு தின்பண்டங்களையும் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது பன்னாட்டு நிறுவனமான பெப்சிகோ. லேஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் எப்சி 5 (FC5) எனப்படும் குறிப்பிட்ட இரக உருளைக்கிழங்கை, இந்நிறுவனம் பதிவு செய்து வைத்திருக்க, அனுமதி இல்லாமல், 9 விவசாயிகள் அவ்வகை உருளைக்கிழங்கை பயிரிட்டுள்ளது, காப்புரிமை மீறல் என்று கூறி, 1 கோடியே 5 இலட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தது, பெப்சிகோ நிறுவனம். பெப்சிகோ நிறுவனம், இந்த இரக உருளைக்கிழங்கை, தன்னுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள விவசாயிகளுக்கு வழங்கி, அவர்களை பயிர் செய்ய வைத்து, பின்னர், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு, அந்த விவசாயிகளிடமிருந்து விளைச்சலை வாங்கிக்கொள்கிறது.

இந்நிலையில், வழக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, இந்த வழக்கை எதிர்கொண்டது. அகில இந்திய விவசாயிகள் அமைப்பு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கியது. பொதுமக்களில் பெரும்பாலானோர், குறிப்பாக, இணையவாசிகளில் பலரும், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். இதனால், காப்புரிமை விவகாரத்தில் 9 விவசாயிகள் மீது தொடர்ந்த வழக்கை திரும்ப பெற பெப்சி நிறுவனம் முடிவு செய்தது. பெரும் நிறுவனங்களுக்கு எதிரான விவசாயிகளின் உரிமை போராட்டத்தில், இது தற்காலிக வெற்றிதானோ என அஞ்சத் தோன்றுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2019, 14:59