வயலில் வேலை செய்யும் கிராமப்புற பெண் வயலில் வேலை செய்யும் கிராமப்புற பெண் 

வாரம் ஓர் அலசல்: கிராமப்புற பெண்களைக் கொண்டாடுவோம்

அக்டோபர் 15, உலக கிராமப்புற பெண்கள் நாள். அக்டோபர் 16, உலக உணவு நாள். அக்டோபர் 17, உலக ஏழ்மை ஒழிப்பு நாள்.

மேரி தெரேசா-வத்திக்கான்

பசி என்பது, உலகப் பொது மொழி. ஒருவருடைய பசியின் மொழியை, அந்த மொழியின் கொடுமையை அனுபவித்தவரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இலங்கை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர், கடலில் அடித்த காற்றில் திசை மாறி, இருபது நாள்கள் தத்தளித்து, கடும் பசியால் வாடி, ஆமை இரத்தத்தால் பசி தீர்த்தனர் என்று இஞ்ஞாயிறன்று செய்திகள் வெளியாயின. இம்மாதம் 18ம் தேதி கடலுக்குச் சென்ற மூவரின் படகில் இயந்திரம் பழுதடைந்ததால், அதில் இருந்தவாறு, கடலில் இருபது நாள்களாக திசையறியாமல் தத்தளித்துள்ளனர். தங்களுடன் பயணித்த சக மீனவரை இழந்த நிலையில், இருவர் பசியாலும் வாடியுள்ளனர். தங்கள் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக படகின் அருகில் வரும் ஆமைகளைப் பிடித்து, அவற்றின் கழுத்தை அறுத்து, அதிலிருந்து வடிந்த இரத்தத்தைப் பருகிய பின்னர், அவற்றினை அவித்து சாப்பிட்டுள்ளனர். தொண்டை மிகக் கடுமையாக காய்ந்த வேளைகளில் கடல் நீரை மிகச் சிறிதளவு பருகியுள்ளனர். ஆம், பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது தமிழ்ப் பழமொழி. பசியால் வாடுபவர், பசியைத் தீர்க்க உணவு கிடைக்காதவேளை, தன்னிடமுள்ள மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, காமம் ஆகியவற்றை இழந்துவிடுவர். பசித்து புசி என்பது முதுமொழி. நலமான வாழ்வு வாழ விரும்பினால், பசித்து புசி என்பதே இன்றும் சொல்லப்படும் அறிவுரை. இன்றைய அவசர உலகில், சிலர், சாப்பிட வேண்டுமே என்ற கடமைக்காக, உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை அவ்வப்போது அவசர அவசரமாக உள்ளே போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதேநேரம், பசிக்கு உணவு கிடைக்காமல் மடிபவர்களும் உள்ளனர்.

உலகில் பசி

இன்றைய நிலவரப்படி, உலகில் நூறு கோடிக்கு அதிகமான மக்கள் பசியால் துன்புறுகின்றனர். அதாவது, இப்பூமியில், ஆறு பேருக்கு ஒருவர், நலமாக வாழ்வதற்குப் போதிய உணவு கிடைக்காமல் உள்ளனர். இன்று உலகில் ஒவ்வொரு வினாடிக்கு ஒருவர் பசியால் இறந்து கொண்டிருக்கின்றார். இந்த ஆண்டில் 3 கோடியே 36 இலட்சம் பேர் பசியால் உயிரிழப்பர் என உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. சிரியாவின் வடகிழக்கில், கடந்த ஆறு நாள்களாக, துருக்கி நாடு நடத்திவரும் இராணுவத் தாக்குதல்களால் ஏறத்தாழ ஒரு இலட்சத்து முப்பதாயிரம் பேர் ஏற்கனவே புலம்பெயர்ந்து விட்டனர். தொடர்ந்து இரத்தம் சிந்தும் போர்களைச் சந்தித்து வரும் சிரியாவில் உரையாடல் வழியாக அமைதி நிலவ, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு திருப்பலியின் இறுதியில், உலக சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.  

இந்த புலம்பெயரும் மக்களும், மத்திய தரைக்கடல் வழியாக ஒவ்வொரு நாளும் இத்தாலி கடற்கரைக்கு வந்துசேரும் புலம்பெயர்ந்தோரும் எதிர்கொள்ளும் பசிக்கொடுமையை, அதேபோல் அனுபவித்தவர்களால் மட்டுமே உண்மையாக உணர முடியும். மக்களின் பசியைத் தீர்ப்பதற்கும், பல நல்ல மனித உள்ளங்கள் ஆங்காங்கே தன்னலமற்ற சேவைகளைப் புரிந்து வருகின்றனர்.

கோவை வெண்ணிலா

தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த லதா என்கிற வெண்ணிலா என்பவர், கோவையின் சாலையோர மனிதர்களை, ஒவ்வொரு நாளும் தேடிச் சென்று உணவளித்து வருகிறார். பொருளாதாரயியலில் பட்டயப் படிப்பை முடித்துள்ள, வெண்ணிலா அவர்கள், ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தன் வருமானத்தை வைத்து மட்டுமே, வறியோரின் பசியைத் தீர்த்து வருகிறார். பசிக்கு, மழையும் வெயிலும் தெரியாது. பசியின் வலியை நானும் சிறிய வயதில் அனுபவித்துள்ளேன். அதனால்தான் என் வருமானத்தில் ஒரு தொகையை ஒதுக்கி, இந்த மக்களுக்காக உணவு சமைத்து வந்து கொடுக்கிறேன்'' என்று சொல்லியுள்ளார் வெண்ணிலா. அவர் மேலும் சொல்கிறார்...

உணவு, உடை என்று யாருக்கு என்ன தேவையோ அதையும் வாங்கிக் கொடுக்கிறேன். வெளியூர்களில் இருந்துவரும் சிலர் முதுமையாலும் மறதியினாலும் வேறு வழியில்லாமல் இங்கேயே தங்கி விடுகிறார்கள். சாப்பாடு கொடுக்கப் போகும்போது அவர்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று உணர்ந்தால், உடனே அவசர மருத்துவ வாகனம் வழியாக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுவேன். என்னால் முடியாத நாள்களில், எனக்குத் தெரிந்த உணவு விடுதிகளிடம் பேசி, இந்த மக்கள் சாப்பிட வழி ஏற்படுத்தி கொடுத்துவிடுவேன். விசேட நாள்களில், என் வீட்டில் என்ன சமைக்கிறேனோ, அதையே இந்த மக்களுக்கும் எடுத்து வருவேன். மழையாக இருந்தாலும் சரி, வெயிலாக இருந்தாலும் சரி, என் பயணம் ஒரு நாளும் நின்றதில்லை. நஞ்சப்பா தெருவில் இருந்த பிரதாப் என்ற வடமாநிலத்தவர், கடின நோயாலும், மனநலத்தாலும் பாதிக்கப்பட்டு இரு ஆண்டுகளாக இருந்தார். அவர் அருகில் செல்லவே எல்லாரும் பயப்படுவார்கள். எழுந்திருக்கவே முடியாத நிலையில் இருந்தவரை தூக்கி உதவி செய்யும்போது சுற்றி நின்ற மக்கள் வேடிக்கைதான் பார்த்தார்கள். அவரை உடனடியாக ஒரு பராமரிப்பு இல்லத்திற்கு அழைத்துச் சென்றேன். இப்போது அவர் அந்த இல்லத்தில் நிம்மதியாக நன்றாக இருக்கிறார்.

சாந்தானு என்ற ஒரு பாட்டி, கோவை நகர பேருந்து நிலையத்தில்தான் இருப்பார்கள். உடல் முழுவதும் தோல் நோயால் பாதிக்கப்பட்டு, புழு வைக்கிற நிலையில் இருந்தார்கள். அவர்களையும் அந்த இல்லத்தில் சேர்த்து மருத்துவம் எல்லாம் செய்த பின்பு இப்போது நலமாக இருக்கிறார்கள். நம் எல்லாருக்கும் மனதும் உயிரும் இருக்கின்றன. இந்த மனிதர்களை அருவருப்பாகப் பார்க்கக் கூடாது என்பதுதான் என் வேண்டுகோள். அவர்களுடைய கதைகளைக் கேட்கும்போது எனது துன்பம் எல்லாம் தூசி என்று தோன்றுகிறது. அதேநேரம் எனக்கும் ஒரு நிம்மதி கிடைக்கிறது. என் சக்திக்கு மீறின உதவியாக இருந்தால், சமுதாய வலைதளத்தில் அதைப் பதிவு செய்கிறேன். என்மேல் உள்ள நம்பிக்கையில் மக்கள் உதவுகிறார்கள் (நன்றி: அவள் விகடன்)

கிராமப்புற பெண்கள், உணவு, ஏழ்மை ஒழிப்பு

அக்டோபர் 13 இஞ்ஞாயிறு, உலக பேரிடர் குறைப்பு நாள். அக்டோபர் 15, இச்செவ்வாய், உலக கிராமப்புற பெண்கள் நாள். அக்டோபர் 16, வருகிற புதன் உலக உணவு நாள். அக்டோபர் 17, வருகிற வியாழன், உலக ஏழ்மை ஒழிப்பு நாள். இந்த உலக நாள்கள் எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. இன்று உலக உணவு உற்பத்தியில் பாதியளவை பெண்கள் ஆற்றுகின்றனர். அதுவும் கிராமப்புற பெண்கள். ஆயினும், வேளாண் நிலத்தில் ஒரு விழுக்காட்டையே இப்பெண்கள் கொண்டிருக்கின்றனர். அதேநேரம், பருவநிலை மாற்றம், மரங்கள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்படுதல், நிலங்கள் தரிசுகளாக மாறுதல், வெள்ளம், தீ, நிலநடுக்கம், புயல்கள் போன்ற இயற்கைப் பேரிடர்களால் முதலில் துன்பங்களைச் சந்திப்பவர்களும் பெண்கள்தான். எனவே கிராமப்புற பெண்களின் வாழ்வு முன்னேற்றம் பெற வேண்டும் என்று பெண்ணுரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.   

கிராமத்தில் பிறந்தால் என்ன, கிராமத்தில் வாழ்ந்தால் என்ன, எங்களாலும் முன்னேற முடியும், நற்செயல்கள் ஆற்ற முடியும் என துணிந்து களத்தில் இறங்கி வெற்றி நடை போடும் துணிச்சல் பெண்களும் இல்லாமல் இல்லை.

 

வெங்கடாசலபுரம் வானதி

திருச்சி மாவட்டம் வெங்கடாசலபுரம் பஞ்சாயத்தில் நடுநிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார் வானதி. 15 ஆண்டுகளுக்கு முன்னர், அவர் அதே பஞ்சாயத்தின் தலைவராக இருந்தார். அரசியல் சூழ்ச்சிகளுக்கும் சாதிய வன்மங்களுக்கும் இவரது கனவுகளும் பணிகளும் பலியாகின. `சாதி எண்ணங்கள் ஒழியாமல் வளர்ச்சி சாத்தியப்படாது' என்று எண்ணியவர், அதற்கான விதையை இளம்பருவத்தில் பள்ளி மாணவர்களிடம்தான் விதைக்க முடியும் என்று முடிவெடுத்தார். அன்றே தன் பதவி விலகலை சமர்ப்பித்துவிட்டு, அந்தக் கிராமத்துப் பள்ளியிலேயே ஆசிரியர் பணியில் சேர்ந்து, இன்று வரை அப்பணியைத் தொடர்கிறார். `கிராமியம்' எனும் அறக்கட்டளை தொடங்கி, தன்னுடைய வருமானத்தைக்கொண்டே, பல்வேறு மாணவர்களின் படிப்புக்கு உதவி வருகிறார். இவர் தன் கடமைகளைச் செய்ய விடாது தடுத்த அதே மக்கள், வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்க, அவர்களுக்கும் சேர்த்தே தன் சேவைகளைத் தொடர்கிறார் வானதி. இவர்,  இலங்கையில் 1967ம் ஆண்டு துவங்கிய கலவரம் காரணமாக, பெற்றோருடன் ஈழத்திலிருந்து இந்தியாவுக்கு வந்து, தந்தையின் பூர்வீகமான வெங்கடாசலபுரத்தில் குடியேறினார். அந்த கிராமத்திலேயே பள்ளிப் படிப்பை முடித்த இவர், மாலை நேரங்களில் வேலை செய்து கிடைத்த பணத்தை வைத்து கல்லூரிப் படிப்பை முடித்தார். திருமணத்துக்குப் பிறகு கணவரின் உந்துதலோடு முதுகலைப் பட்டப்படிப்பும், ஆசிரியர் பயிற்சி பட்டயமும் பெற்றார் இவர். எனினும், குழந்தைகளுக்காக, கிடைத்த கல்லூரி பேராசிரியர் பணியை மறுத்து வீட்டிலிருந்தார்.

ஊர் மக்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க 2002-ம் ஆண்டு பஞ்சாயத்துத் தலைவர் ஆனார் வானதி. பதவியேற்றதும் இவரது அயராத மக்கள் பணியும், அதிரடி நடவடிக்கைகளும், வெங்கடாசலபுரத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றியது. கள்ளச் சாராயத்தை ஒழித்தது, லஞ்சம் தவிர்த்தது, கழிப்பறைப் பயன்பாட்டை மேம்படுத்தியது, தமிழ்நாட்டுக்கே முன்னோடியாக, தெரு விளக்குகளை சோலார் மயமாக்கியது, நீர் மேலாண்மையைக் கடைப்பிடித்தது, மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தது, அரசு நிதிகளை வெற்றிகரமாகக் கிராம வளர்ச்சிக்குப் பயன்படுத்தியது, கிராமத்தில் சாலைகள் அமைத்தது என ஓயாது சுழன்றிருக்கிறார் வானதி. அந்தக் கிராமத்தில் குடிநீர் வேண்டியிருந்தாலும் சரி, குழந்தைகள் கல்வி என்றாலும் சரி, கோயில் திருவிழா என்றாலும் சரி, மக்கள் இவர் வீடு தேடி வருகிறார்கள். எனக்கான கடமை, மக்கள் பணி மட்டுமே என்ற இலட்சியத்தோடு பணியாற்றும் வானதி அவர்கள், நல்விதையை மாணவர்களிடம் விதைக்க வேண்டும் என்று சொல்கிறார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கிய, உலக கிராமப்புற பெண்கள் நாள், 2008ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.  அதன்படி அக்டோபர் 15, 2019 இச்செவ்வாயன்று இந்த உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது. உலகளவில், விவசாயத்தில் மட்டும், கிராமப்புறப் பெண்களின் பங்கு 43 விழுக்காடு. எனவே இப்பெண்கள் நம் இருப்பிற்கே ஆதாரமான இதயங்கள். இந்த நல்ல நாளில் இப்பெண்களை சிறப்பாக இரசித்துக் கொண்டாடுவோம், அவர்களையும், அவர்களின் உழைப்பையும் மதிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 October 2019, 15:27