அமேசான் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் அமேசான் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் 

பூமியில் புதுமை : அமேசானின் பிராஹா பழங்குடி இனம்

இறைவனை வணங்காத, பிறர் பொருள்மேல் ஆசைப்படாத, கண்ணுறங்காத பழங்குடி இனம் ஒன்று, இன்னும் அமேசான் மழைக்காடுகளில் வாழ்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகள் பகுதியில், அமேசான் ஆற்றில் வந்து கலக்கும் மாயிசி ஆற்றின் கரையோரங்களில் பிராஹா பழங்குடி இனம் உள்ளது. கடந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இவர்களின் எண்ணிக்கை 800 என கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பேசும் மொழியின் பெயரும் பிராஹா என்பதுதான். உலகில் பேசப்படும் 6,000 மொழிகளுள் இது அரிதான ஒன்றாகும். இந்த மொழியில் எண்கள் என்பவை, ‘சில’, ‘பல’ என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் அடங்கி விடுகின்றன. மொத்தமே இவர்களின் மொழியில் 8 மெய் எழுத்துக்கள், மற்றும், 3 உயிர் எழுத்துக்கள் மட்டும்தான். வேட்டையாடுதலையே முக்கிய தொழிலாகக் கொண்ட இவர்கள், தங்கள் வாயால் விசிலடித்து விவரங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். இவர்கள், மிகவும் குறைந்த தலைப்புகளில் பேசுகிறார்கள். இவர்களுக்கென்று எந்த தலைவரும் இல்லை. பழங்குடி தெய்வங்கள், மதம் ஆகியவை பற்றி எந்த எண்ணமும் இவர்களுக்கு இல்லை. அவர்கள் சில சமயங்களில், மரங்கள் மற்றும் சில மிருகங்களை, மக்கள் வடிவத்தை எடுத்துச் செல்லும் ஆவிகள் என்று நம்புகிறார்கள். பிராஹா பழங்குடி இனத்தை கண்ணுறங்கா இனம் என்றும் அழைப்பதுண்டு. அவர்கள் இரவு முழுவதும் ஏறத்தாழ 15 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் ஏமாற்றுவதில்லை, மற்றவர்களின் உடைமைகளைப் பறிக்க எண்ணுவதில்லை.. இன்பத்திலும் சிரிக்கிறார்கள், எதிர்பாராத துன்பத்திலும் சிரிக்கிறார்கள். எல்லாவற்றையும் நல்லவைகளாகவே எடுத்துக்கொள்கிறார்கள். ஏனெனில், இவர்கள், வெளி உலக தாக்கமின்றி வாழ்கிறார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2019, 15:40