Vatican News
நியு யார்க்கில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக நியு யார்க்கில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் - சிறந்ததோர் உலகம் இயலக்கூடியதே

மனிதர்களாகிய நமக்காக இவ்வுலகைப் படைத்த கடவுள், தம் படைப்பின் பாதுகாவலர்களாக வாழும் பணியை கொடுத்திருக்கிறார். ஆனால், இன்று, நம்மில் பலரின் சுயநலத்தால் கடவுளின் படைப்புகள் பெருந்துன்பங்களை அனுபவித்து வருகின்றன.

மேரி தெரேசா - வத்திக்கான்

“காலநிலை நீதி தேவை, நாங்கள் தற்காப்பு கவசங்களை வாயில் கட்டிக்கொண்டே வாழ முடியாது, இன்றுள்ள தலைமுறைகள் செயல்படவில்லையெனில், எப்போது அவர்கள் செயல்படப் போகிறார்கள், எங்களைத் தடுக்க முடியாது, பி என்ற பூமிக்கோளமே கிடையாது மக்களாட்சி எப்படியிருக்கும் என்பதை எங்களுக்குக் காட்டுங்கள்” போன்ற விளம்பரத் தட்டிகளை ஏந்திக்கொண்டு, உலகின் ஐந்து கண்டங்களில், டெல்லி உட்பட 110க்கும் அதிகமான நகரங்களில், வளர்இளம்பருவ மாணவ மாணவிகளின் வழிநடத்துதலில், இலட்சக்கணக்கான மக்கள் செப்டம்பர் 20, கடந்த வெள்ளியன்று, காலநிலை மாற்றத்துக்கு எதிரான பேரணிகள் நடத்தி உலகத் தலைவர்களுக்கு அறைகூவல் விடுத்தனர். காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு, தங்கள் தங்கள் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குரல் எழுப்பினர். நியு யார்க் நகரில் இப்பேரணியை தலைமையேற்று நடத்திய சுவீடன் நாட்டு 16 வயது நிரம்பிய சிறுமி கிரேட்டா துன்பெர்க் (Greta Thunberg) அவர்கள், இப்பேரணியில் இவ்வாறு உணர்ச்சி பொங்கப் பேசினார்.

கிரேட்டா துன்பெர்க்

``இந்த திங்கள், உலகத் தலைவர்கள் அனைவரும் நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐ.நா. காலநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். உலகின் அனைத்து கண்களும் தற்போது அவர்கள் மீதுதான் இருக்கின்றன. தலைவர்கள் அனைவரும் அறிவியலுக்குப் பின்னால் துணை இருப்பதைப்போலக் காட்டிக்கொண்டு, தலைவர் பதவியிலேயே நீடிக்க விரும்புகின்றனர். அவர்கள் உண்மையிலேயே நம் கோரிக்கைகளைக் கேட்பதாக நினைக்கிறார்களா? நீங்கள் சொல்லுங்கள், உண்மையிலேயே அவர்கள் நம் கோரிக்கையைக் கேட்கிறார்களா? எனக் கூட்டத்தை நோக்கி கிரேட்டா கேட்டார். அதற்குக் கூட்டத்திலிருந்து `இல்லை, இல்லை’ என்றே பதில் வந்தது. தொடர்ந்து பேசிய சிறுமி கிரேட்டா, ``நம் கோரிக்கைகளை தலைவர்கள் ஏற்று, நடைமுறைப்படுத்துவதற்காகவே நாம் இந்த போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். பாதுகாப்பான எதிர்காலத்தில் வாழ நமக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. அந்த பாதுகாப்பான எதிர்காலத்தை மட்டுமே நாம் கேட்கிறோம். பள்ளி மற்றும், பணிகளை விடுத்து போராட்டம் நடத்த நாம் வெறும் சாதாரணமானவர்கள் கிடையாது நாம் மாற்றத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். நம்மை யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் மாற்றம் வந்துகொண்டிருக்கிறது, அவர்களை செயல்பட வைப்போம்” என்று பேசினார்.

சிறுமி கிரேட்டாவுக்குப்பின் பேசிய, அர்ஜென்டீனாவைச் சேர்ந்த 19 வயது சூழலியல் ஆர்வலர் புருனோ ரொட்ரிகெஸ் (Bruno Rodriguez) அவர்கள், ``காலநிலை மற்றும், சுற்றுச்சூழல் நெருக்கடி என்பது, நம் காலத்தின் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார நெருக்கடி போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. தற்போதைய தலைவர்கள் உருவாக்கிய பிரச்சனைகளைக் கையாள்வதில், எங்கள் தலைமுறை பொறுப்பேற்கப்போகிறது என்பதைப் பலமுறை கேட்டிருப்பீர்கள், அந்தக் காலம் வரும் என, செயலற்ற முறையில் நாங்கள் காத்திருக்கப்போவதில்லை. இப்போது நாம் தலைவர்களாக வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனப் பேசினார். (உதவி-விகடன்)

அண்மை சில ஆண்டுகளாக, அதிலும் குறிப்பாக, கடந்த பல நாள்களாக, காலநிலை மாற்றத்தால் இந்த பூமிக்கோளம் சந்தித்து வரும் நெருக்கடிகள் பற்றி எல்லா நாடுகளிலும் பேசப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 23, இத்திங்களன்று, நியு யார்க்கில் துவங்கியுள்ள, காலநிலை தொடர்பான ஐ.நா. நிறுவனத்தின் உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் அறுபதுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு, செயல்திட்டங்களை உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் கலந்துகொள்ளும் தலைவர்கள், கவர்ச்சியாகப் பேசுவதைத் தவிர்த்து, புவிமண்டலத்தில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்குத் திட்டவட்டமான செயல்திட்டங்களுடனும், தங்களை அர்ப்பணிக்கும் நோக்கத்துடனும் வருமாறு ஏற்கனவே, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இம்மாநாட்டில், சீனா, இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகள் உரையாற்றவுள்ளன. இதில் அமெரிக்க ஐக்கிய நாடு, பிரேசில், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளவில்லை. உலக நாடுகள், கார்பன் வெளியேற்றத்தை, 2050ம் ஆண்டுக்குள் பூஜ்யம் என்ற நிலைக்குக் கொண்டுவருவதற்கு அர்ப்பணிக்க வேண்டுமென கூட்டேரெஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

பூமியின் வெப்பநிலை

இப்பூமியின் வெப்பநிலை, தொழிற்சாலை காலத்திற்கும் முன்னைய நிலையைவிட, 2015ம் ஆண்டுக்கும், 2019ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில், 1.1டிகிரி செல்சியுஸ் அதிகரித்துள்ளது. உலகில் கடந்த 40 ஆண்டுகளில், பாலூட்டிகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, நிலநீர் வாழ் உயிரனங்கள் போன்ற, பல்லுயிரினங்களில் 60 விழுக்காடு அழிந்துவிட்டது என, WWF எனப்படும் உலக இயற்கை நிதியம், கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்ட Living Planet 2018 என்ற அறிக்கை தெரிவிக்கிறது. 1970ம் ஆண்டுக்கும், 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில், நான்காயிரத்திற்கும் அதிகமான பாலூட்டிகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, நீர்-நிலம் வாழ் உயிரின வகைகள், பூமியிலிருந்து நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டன. இதைத் தொடர்ந்து பத்து இலட்சம் உயிரின வகைகள், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அழிந்துவிடும். ஓர் உயிரினமோ அல்லது உயிரினக் கூட்டமோ, உலகில் இருந்து அற்றுப்போவதும் ‘இன அழிவு’தான். பொதுவாகக் குறிப்பிட்ட ஓர் இனத்தின் கடைசி உயிரினம், அழிந்தபின்னே அந்த இனம் முழுவதும் அழிந்துபோனதாக அறிவிக்கப்படும். அதேநேரம் ஓர் இனத்தின் கடைசி உயிரினம், இறப்பதற்குமுன், மிகக் குறைந்த எண்ணிக்கைக்குச் சுருங்கிவிடும்போது அவற்றால் இனப்பெருக்கம் செய்து, தம் இனத்தைக் காப்பாற்றுவது சாத்தியமில்லை என ஐ.நா.வின் இந்த அறிக்கை எச்சரித்திருக்கிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகில் இருந்து முழுவதும் அழிந்துபோன, தற்போது அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் சில உயிரினங்கள் பற்றியும் இந்த அறிக்கை பதிவுசெய்துள்ளது. இவை அற்றுப்போனதற்கு நிச்சயமாக இயற்கை காரணமில்லை, மனிதர்களே காரணம் எனவும் ஐ.நா. அறிக்கை கூறியுள்ளது. (உதவி-இந்து தமிழ் திசை)

பறவையின அழிவு

வட அமெரிக்காவிலுள்ள பறவைகளில் நான்கில் ஒரு பகுதிக்குமேல், 1970ம் ஆண்டிலிருந்து அழிந்துவிட்டன. அரிதான இனங்களுள்ள பறவையினங்களே அதிகம் அழிகின்றன, இதற்கு பறவை வியாபாரம் ஒரு காரணமாகச் சொல்லப்படுகின்றது. ஆசியாவில், குறிப்பாக, இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பறவை வர்த்தகம் கொடிகட்டி பறக்கிறதாம். ஜாவாவில், ஏறத்தாழ 7 கோடியே 50 இலட்சம் பறவைகள், செல்லப் பறவைகளாக வளர்க்கப்படுகின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு பட்டித்தொட்டியெங்கும் சர்வ சாதாரணமாகக் காணக் கிடைத்த பாறு கழுகுகளை இப்போது காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. இந்தக் கழுகுகள், இன்றைக்கு முற்றாக அழிந்துபோகும் வகையில், அழிவின் விழிம்பில் இருக்கின்றன. இப்பூமி மேலும் மேலும் வெப்பமடைந்து வருவதாலும், மனிதர்களின் கட்டுப்பாடற்ற நடத்தைகளாலும் மனிதரும், பல்லுயிரினங்களும் கடும் அழிவின் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

மனிதர் படைப்பின் காவலர்கள்

மனிதர் மாறுவதற்கான வாசல், எக்காலத்திலும் எப்போதும் திறந்தே இருக்கிறது. இதற்கு முதலில் மனிதர் சுயநலக்கட்டிலிருந்து விடுபட வேண்டும். தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். சுயநலமின்மை, சுயநலம் என்பதைத் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்றார், சுவாமி விவேகானந்தர். கடவுளின் முதல் படைப்பு, காலம். கடவுளின் நிறைவான படைப்பு மனிதர். படைத்தவரைப் பறைசாற்ற அவரது படைப்புக்களே போதும். உன் வழியேதான் கடவுள் உலகை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். படைப்பவர் மட்டுமல்ல கடவுள். படைப்பே கடவுள். படைத்து மகிழவே, மகிழ்விக்கவே மனிதர் படைக்கப்பட்டிருக்கின்றனர். நிலவைப் பார். கடவுளின் அழகு நிரம்பி வழியும். சூரியனைப் பார். கடவுளின் சக்தி புரியும். போய் கண்ணாடியைப் பார். கடவுளின் கைவண்ணம் தெரியும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் படைப்புகள் செய்யும் ஒரு வேலை படைத்தவரை படைப்பது என்றார் அருள்பணி சேவியர் அந்தோனி சே.ச.

மனிதர்களாகிய நமக்காக இவ்வுலகைப் படைத்த கடவுள், தம் படைப்பின் பாதுகாவலர்களாக வாழும் பணியை கொடுத்திருக்கிறார். ஆனால், இன்று, நம்மில் பலரின் சுயநலத்தால் கடவுளின் படைப்புகள் பெருந்துன்பங்களை அனுபவித்து வருகின்றன. இப்போது மண்ணையும் மக்களையும் காப்பதற்கு, உலக அளவில், மாணவ மாணவியர் வீறுகொண்டு எழுந்துள்ளனர். இவர்களின் அறைகூவல்கள், தொழிலதிபர்களை, வர்த்தக நிறுவனங்களை, அரசியல் தலைவர்களை செயலில் இறங்கத் தூண்ட வேண்டும். ஐ.நா.வின் காலநிலை உச்சி மாநாடு, உலகை பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல உதவுவதாக அமைய வேண்டும். காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான, அரசுகளின் அர்ப்பணம், சிறந்ததோர் உலகை உருவாக்க வழியமைக்கும் என்பதே எமது நம்பிக்கை, எமது எதிர்பார்ப்பு.

செயல் நன்று, ஆனால் சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல்செயல்கள் விளையும். சிந்திப்போம். (சுவாமி விவேகானந்தர்)

23 September 2019, 15:44