ஜெர்மனி காடுகள் ஜெர்மனி காடுகள் 

பூமியில் புதுமை: காடுகள் வளர்ப்பில் பங்கெடுப்போம்

மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து ஏறக்குறைய மூன்று டிரில்லியன் மரங்கள், மனிதரால் அழிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது, ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ 15 பில்லியன் மரங்கள் வெட்டப்படுகின்றன எனவும் கணக்கிடப்பட்டுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான்

'முன்பு எப்போதும் உலகம் கண்டிராத அளவு, மரங்களை வளர்த்து, காடுகளை அதிகரிக்கும் (Afforestation) நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, மாறிவரும் பருவநிலையை சீர்செய்ய வேண்டிய அவசரத் தேவையை (Climate Emergency) நம்மால் நிறைவேற்ற முடியும். அதாவது, தொன்னூறு கோடி ஹெக்டேர் நிலத்தை உலகெங்கிலும் மீட்டு, அவற்றை மீண்டும் காடுகளாக்க வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளையும் நாம் அனுபவித்தே ஆக வேண்டுமென்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, 2011ம் ஆண்டு, ஜெர்மனியும், இயற்கைப் பாதுகாப்பு பன்னாட்டு ஒன்றியமும் இணைந்து, உலகம்‌ முழுவதும் குறைக்கப்பட்ட மற்றும், அழிக்கப்பட்ட 15 கோடி ஹெக்டேர் வனப்பகுதிகளை மீட்டு, காடாக்கும் சவாலை, “Bonn சவால்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தின. இதை 2020ம் ஆண்டுக்குள் முடிக்கவும், 2030ம் ஆண்டுக்குள் 35 கோடி ஹெக்டேர் இலக்கை அடையவும் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, இன்று வரை 16 கோடி ஹெக்டேர் நிலம் காடுகளாக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில், Khyber Pakhtunkhwa என்னும் பகுதியில், 2014ம் ஆண்டு "பில்லியன் மரம் சுனாமி திட்டம்" என்ற பெயரில், கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3,50,000 ஹெக்டர்‌ நிலங்களை மீட்டு, காடாக்கப்பட்டுள்ளது. அதோடு, பருவநிலை மாற்றத்துக்கான முக்கிய அமைச்சகத்தை, பாகிஸ்தான் அரசு முதன் முதலாகப் அமைத்து, 'பசுமைநிறை பாகிஸ்தான் (Clean Green Pakistan)' என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.

ஆப்ரிக்காவில் சஹாரா பாலைநிலத்தின் தென்முனையில் உள்ள சாகேல் பகுதியில், எட்டாயிரம் கிலோ மீட்டர் இயற்கை அதிசயம் .(Great green wall) என்ற திட்டத்தில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், ஒரே நாளில் 35 கோடியே 30 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வரலாறு படைக்கப்பட்டது.

ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, ஐரோப்பாவில் இரண்டாயிரமாம் ஆண்டுக்கும், 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும், ஆண்டு ஒன்றுக்கு 22 இலட்சம்  ஹெக்டேர் நிலம் காடாக்கப்பட்டுள்ளதையும், இஸ்பெயின் நாட்டில் 1900மாம் ஆண்டில் 8% ஆக இருந்த வனப்பகுதி, இன்று 25% ஆக உயர்ந்துள்ளதையும் குறிப்பிடுகிறது.

உலகில், 90 கோடி ஹெக்டேர் நிலபரப்பைக் காடுகளாக்குவதன் மூலம், 205 பில்லியன் டன் கார்பனை நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஒரு மரத்தில் உள்ள பழங்களை எண்ணிவிடலாம். ஆனால், ஒரு பழத்தால் உருவாகப் போகும் மரங்களை எண்ண முடியாது. அவ்வாறு அமையாவிடில் மானுடம் இனி தழைக்கவும் முடியாது.(உதவி-விகடன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2019, 15:21