மியான்மாரின் பொருளாதார நிறுவனம் மியான்மாரின் பொருளாதார நிறுவனம் 

மியான்மாருக்கு ஆயுத விற்பனையை தடை செய்க

Rohingya முஸ்லிம்கள் பங்களாதேஷ் சென்றதிலிருந்து, மியான்மாரின் இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு, 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஐ.நா. மனித உரிமைகள் பணிக்குழு உருவாக்கப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டிற்கு ஆயுத விற்பனை மற்றும், இராணுவத்தோடு தொடர்புடைய தொழில்களுக்குச் செய்யப்படும் நிதியுதவிகளுக்கு தடை விதிக்கப்படுமாறு, ஐ.நா. நிறுவனத்தின் உண்மையைக் கண்டறியும் பணிக்குழு, இத்திங்களன்று அழைப்பு விடுத்துள்ளது.

Tatmadaw எனப்படும் மியான்மார் இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த, ஐ.நா. பணிக்குழு,  இராணுவத்தோடு தொடர்புடைய தொழில்களுக்கு உதவுவது, மனித உரிமை மீறல்களுக்கும், Rohingya முஸ்லிம்களை, Rakhine மாநிலத்தைவிட்டு வெளியேற்றுவதற்கும் வழிவகுக்கின்றது என்று குறை கூறியுள்ளது.

மியான்மாரில், இராணுவம் ஆதிக்கம் செலுத்தும், பொருளாதார அமைப்பு, மியான்மார் பொருளாதார கழகம் ஆகிய இரண்டின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள, ஐ.நா. பணிக்குழு, இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள, குறைந்தது 120 வர்த்தகங்களுடன், ஏறத்தாழ 60 வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பு வைத்துள்ளன என்று தெரிவித்தது.   

இந்த நிதியுதவிகள், மியான்மார் இராணுவத்தின் தன்னாட்சியை வலுப்படுத்தும் எனவும், அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.  

ஏழு இலட்சத்திற்கு அதிகமான Rohingya சிறுபான்மை முஸ்லிம்கள் பங்களாதேஷ் சென்றதிலிருந்து, மியான்மாரின் இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு, 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஐ.நா. மனித உரிமைகள் பணிக்குழு உருவாக்கப்பட்டது. (AP)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2019, 15:19