பாய்மார விரைவுப் படகில் பயணம் செய்து, நியூ யார்க் நகரின் துறைமுகத்தை அடைந்த இளம்பெண் துன்பர்க் பாய்மார விரைவுப் படகில் பயணம் செய்து, நியூ யார்க் நகரின் துறைமுகத்தை அடைந்த இளம்பெண் துன்பர்க் 

படகில், நியூ யார்க் நகரை அடைந்த, சுற்றுச்சூழல் போராளி துன்பர்க்

காற்று, சூரிய ஒளி இவற்றின் உதவியுடன் இயக்கப்படும் Malizia II என்ற பாய்மார விரைவுப் படகில் பயணம் செய்து, நியூ யார்க் நகரின் துறைமுகத்தை அடைந்த இளம்பெண் துன்பர்க்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழலைக் குறித்த போராட்டத்தில் கடந்த ஓராண்டளவாக ஈடுபட்டு, இளையோரிடையே விழிப்புணர்வைத் தூண்டிவரும் 16 வயது இளம்பெண் கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்கள், தன் அட்லாண்டிக் கடல் பயணத்தை நிறைவு செய்து, ஆகஸ்ட் 28 இப்புதனன்று நியூ யார்க் நகரைச் சென்றடைந்தார்.

நியூ யார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா.அவை தலைமையகத்தில், செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள, அவர், கடந்த இரு வாரங்களாக பாய்மாரப் படகு ஒன்றில் பயணம் செய்தார்.

காற்று, சூரிய ஒளி இவற்றின் உதவியுடன் இயக்கப்படும் Malizia II என்ற பாய்மார விரைவுப் படகில் பயணம் செய்து, நியூ யார்க் நகரின் துறைமுகத்தை அடைந்த இளம்பெண் துன்பர்க் அவர்களை வரவேற்க, ஐ.நா.அவை, மேலும் 17 பாய்மாரப் படகுகளை அனுப்பியிருந்தது.

2030ம் ஆண்டுக்குள் உலகில் நிறைவேற்றக்கூடிய 17 நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை குறிக்கும்வண்ணம் இந்த 17 படகுகள் அனுப்பப்பட்டதற்கு, ஐ.நா. அவைக்கு தன் நன்றியைக் கூறுவதாக, இளம்பெண் துன்பர்க் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியில் கூறினார்.

இத்தகையப் போராட்டத்தில் ஈடுபடாமல், ஒரு சாதாரண மாணவியாக பள்ளிக்குச் செல்வதற்கு தனக்கும் விருப்பம்தான், என்று கூறிய துன்பர்க் அவர்கள், முதியவர்கள் செய்துள்ள தவறுகளைச் சுத்தம் செய்ய, இளையோர், இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர, நம் பூமிக்கோளத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லை என்று வலியுறுத்திக் கூறினார்.

செப்டம்பர் மாதம் ஐ.நா. அவையில் நடைபெறும் சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, இளம்பெண் கிரேட்டா துன்பர்க் அவர்கள், கானடா, மற்றும் தென் அமெரிக்காவின் ஒரு சில நாடுகளில் நடைபெறும் கருத்தரங்குகளிலும் பங்கேற்கவிருக்கிறார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2019, 14:40