பாகிஸ்தானில் வெள்ளம் பாகிஸ்தானில் வெள்ளம் 

ஆசிய, பசிபிக் பகுதிகளில் இயற்கைப் பேரிடர்கள்

2018ம் ஆண்டில் உலகளவில் இடம்பெற்ற 281 இயற்கைப் பேரிடர்களில், ஏறத்தாழ பாதி, ஆசிய-பசிபிக் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. இவற்றில், 10, மிகக் கடுமையானவை

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஆசியா மற்றும், பசிபிக் பகுதிகளில் இடம்பெறும் இயற்கைப் பேரிடர்களின் மிக கடும் விளைவுகள் மற்றும், அவை இடம்பெறும் முறைகளைக் காண்கையில், இத்தகைய பேரிடர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிக்கும் முயற்சிகளில் சிக்கல்கள் உருவாகின்றன என்று, ஐ.நா. அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

ஆசியா மற்றும், பசிபிக் பகுதிகளின், ஐ.நா.வின் பொருளாதார மற்றும், சமுதாய அமைப்பு (ESCAP), ஆசியா மற்றும், பசிபிக் பகுதிகளின் பேரிடர்கள் குறித்து, ஆகஸ்ட் 22, இவ்வியாழனன்று  வெளியிட்ட அறிக்கையில், சூழலியல் மாசுகேடு மற்றும், காலநிலை மாற்றத்தால், இயற்கைப் பேரிடர்கள் மேலும் தீவிரமடைகின்றன என்று கூறியுள்ளது.

இப்பேரிடர்கள் குறித்து, முன்னெச்சரிக்கைகளை மட்டுமன்றி, வரவிருக்கும் நிகழ்வுகள் குறித்தும் அறிவிப்பதில் சங்கடங்கள் உள்ளன என்றுரைக்கும் அவ்வறிக்கை, அப்பகுதிகளில், இயற்கைப் பேரிடர்களால், ஆண்டுக்கு, ஏறத்தாழ 675 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த இழப்பு, உள்நாடுகளின் மொத்த உற்பத்தியில், ஏறத்தாழ 2.4 விழுக்காடாகும் என்றுரைக்கும் அவ்வறிக்கை, மனித இழப்புகள் மட்டுமன்றி, கஷ்டப்பட்டு முன்னேற்றப்படும் பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்றும் கூறியுள்ளது.

ஆசிய-பசிபிக் பகுதிகளில், 1970ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் இயற்கைப் பேரிடர்களால், ஏறத்தாழ 14 கோடியே 20 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2019, 14:04