புவிவளத்தை விஞ்சிய நாள், ஜூலை 29,2019 புவிவளத்தை விஞ்சிய நாள், ஜூலை 29,2019 

பூமியில் புதுமை – மனிதரின் பேராசையால் சூழலியல்...

ஓராண்டு முழுவதும் இயற்கையால் மறுவளர்ப்புச் செய்யப்படும் மரம், மீன் வகைகள் போன்ற வளங்களை, இந்த 2019ம் ஆண்டில், 209 நாட்களிலேயே மனித இனம் பயன்படுத்திவிட்டது

மேரி தெரேசா - வத்திக்கான்

இப்பூமிக் கோளத்தின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் பருவமழைக் காடுகள், கடந்த மூன்று வாரங்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. இந்த நுரையீரல் காடுகள், நம் வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதவை என்று சொல்லி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உள்ளிட்ட, உலகின் பல தலைவர்கள், அவை பாதுகாக்கப்பட வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் Biarritz நகரில் நடந்துவரும், அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், மற்றும் கானடா நாடுகளைக் கொண்ட ஜி7 கூட்டத்திலும், இது உலக அளவில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டு, இத்தீயை அணைப்பதற்கு உதவிகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தீயை அணைப்பதற்கு, பிரேசில் அரசுத்தலைவர் Jair Bolsonaro அவர்களும், அமேசான் காட்டுப் பகுதிக்கு இராணுவத்தை அனுப்புகிறார். 2019ம் ஆண்டில் இதுவரை, அமேசானில் 75 ஆயிரத்திற்கும் அதிகமான தீ நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, வழக்கமாக, கோடை காலத்தில் ஏற்படும் தீ நிகழ்வு, இவ்வாண்டில் 85 விழுக்காடு அதிகரித்துள்ளது மற்றும், தற்போது 2,500க்கும் அதிகமான இடங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன என்று செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில், இந்து தமிழ் திசை இதழில், பேராசிரியர் ரு.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரை நம்மை மேலும் சிந்திக்க வைக்கிறது. மனித சமுதாயம், இந்த 2019ம் ஆண்டு முழுவதும் பயன்படுத்த வேண்டிய இயற்கை வளங்களை, 209 நாட்களிலேயே பயன்படுத்திவிட்டது என்று, ஐ.நா. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, உலகப் பாதப்பதிவுப் பிணையத்தின் (Global Footprint Network) அறிக்கை தெரிவிக்கின்றது. இதனாலேயே இந்த ஆண்டின் 209வது நாளாகிய, கடந்த ஜூலை 29ம் தேதியை, "புவிவளத்தை விஞ்சிய நாள் (Earth Overshoot Day)" என்று கூறப்பட்டது. மனிதர் பயன்படுத்தும் இயற்கை வளங்களை மறுஉற்பத்தி செய்வதற்கும், மனித நடவடிக்கைகளால் வெளியேற்றப்படும் பல்வகைக் கழிவுகளை உட்கிரகித்து சூழலைப் புதுப்பித்துக் கொள்வதற்கும், இயற்கை ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால், ஓராண்டில் உட்கிரகிக்கப்பட்டு உயிர்ச்சிதைவடையும் கழிவுகள் முழுவதையும் 209 நாட்களிலேயே இயற்கை வெளியேற்றிவிட்டது, அதாவது புவியின் தாங்குதிறனை விஞ்சுமளவுக்கு மனித இனம், பூமியின் இயற்கை வளத்தைக் கொள்ளையடித்து, சூழலையும் கெடுத்துள்ளது. இதனடிப்படையில் கணக்கிட்டால், 2019-ம் ஆண்டின் மொத்த மனிதத் தேவைக்கான இயற்கை மற்றும் சூழலியல் வளங்களைப் பெற நமக்கு மொத்தமாக 1.75 உலகங்கள் தேவைப்படும். இது சாத்தியமில்லை என்றே பெரும்பாலான சூழலியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2019, 15:22