வேண்டாம் என்ற பெயர்கொண்ட  பொறியியல் மாணவி வேண்டாம் என்ற பெயர்கொண்ட பொறியியல் மாணவி 

வாரம் ஓர் அலசல் – இளையோரே, நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்

பெண் குழந்தையாகப் பிறந்ததால், 'வேண்டாம்' என பெயர் சூட்டப்பட்ட இளம் பொறியியல் மாணவி, கல்வியால் உயர்ந்து, இன்று ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 'வேண்டும்' என தேர்வு செய்யப்பட்டுள்ளார்

மேரி தெரேசா-வத்திக்கான்

ஒருசமயம், சுவாமி விவேகானந்தர், “என்னை மனிதனாக்கும், பூவுலக மாதாவே” என்ற தலைப்பில், சிறப்புரை ஆற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக, ஒரு பெரியவர், தான் அந்தப் பகுதியிலுள்ள இளையோரை ஒன்று திரட்டி நற்செயல்கள் ஆற்றிவருவது பற்றி பேசினார். நீ ஒரு சிறந்த பொறியாளராக வரவேண்டும், நீ ஒரு சிறந்த மருத்துவராக  வரவேண்டும், நீ ஒரு சிறந்த அறிவியலாளராக வரவேண்டும், நீ ஒரு சிறந்த வழக்கறிஞராக வரவேண்டும்.... இப்படி இளையோரின், தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களின் இலட்சியக் கனவுகளைத் தூண்டிவிடும் விதமாக, உணர்ச்சிபொங்கப் பேசி முடித்தார் அவர். அவரைத் தொடர்ந்து பேசிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், இப்போது பேசிய பெரியவரின் ஆசையை நம் இளையோர் நிறைவேற்றி, உயர்ந்தநிலையை எட்ட வேண்டும் என்பதே எனது வேண்டலும். ஆயினும், இந்த இலட்சியங்களைவிட, மேலான ஒன்றையே நான் முதலில் கடவுளிடம் வேண்டுகிறேன். மேலும், கடவுளைக் காட்டும் பள்ளிகளின் ஆசிரியப் பெருமக்களிடமும் இதையே வேண்டுகிறேன் என்று உரையைத் தொடங்கினார். அவையோர் உற்சாகமானார்கள். அப்போது சுவாமிஜி சொன்னார் – எனது முதல் இலட்சியம், நமது பிள்ளைகள் ‘மனிதர்’ ஆவதுதான். அதற்கடுத்த இலட்சியம்தான், அந்தப் பெரியவர் சொன்னவைகள். ஆம். நமது பிள்ளைகள், மனிதம் நிறைந்தவர்களாய் முதலில் வளரவேண்டும். ஏனெனில் சிறந்த மனிதப் பண்புகளுடன் பணியாற்றும்போது, அவர்கள்  பணியாற்றும் துறைகளும் சிறப்படையும். எனவே, நம் பிள்ளைகள் முதலில் சிறந்த மனிதர்களாக உருவாகட்டும்.

மாணவர்கள் இன்று

ஜூலை 23, கடந்த செவ்வாயன்று, சென்னையில் ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், பட்டாக் கத்திகளுடன், பயணியர் பேருந்து ஒன்றை மறித்து, சக மாணவர்களைத் தாக்கியுள்ளனர். இந்நிகழ்வு, பெற்றோர், பொதுமக்கள் மற்றும், காவல்துறைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இவ்வன்முறையைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை, கல்லூரி மாணவர்களுக்கு இடையே இடம்பெறும் மோதல்களே இதற்கு காரணம் எனக் கண்டறிந்தது. அடுத்து, அந்த மாணவர்களைத் திருத்தும் முயற்சியையும் கையாண்டது காவல்துறை. இதன் பயனாக, ‘இனிமேல், வன்முறை மற்றும் தகராறில் ஈடுபட மாட்டேன், எந்தத் தவறும் செய்ய மாட்டேன்’ என, சென்னை அம்பத்தூர் காவல்நிலைய துணைஆணையர் ஈஸ்வரன் அவர்கள் முன்னிலையில், 54 மாணவர்கள் உறுதி மொழி எடுத்து, பிரமாண பத்திரங்களையும் எழுதி கொடுத்துள்ளனர்.

இன்று உலகில் பெரும்பாலும் எல்லா நாடுகளிலுமே மாணவர்களில் சிலர், இத்தகைய மனிதப்பண்பற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அத்தகைய குற்றங்களுக்கு முக்கிய காரணம், தன் நியாயமான துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள, சரியான நபரோ, களமோ இல்லாததுதான் என்று சொல்கிறார், சென்னை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முனைவர் ரா.வெங்கடேஷ். பாசமான பெற்றோர், உண்மையான நண்பர்கள், அரவணைப்பான சமுதாயம் கிடைக்காதோர்தான், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவர். எந்த அளவிற்கு திறமைசாலிகளாக, சிந்தனை பலம் கொண்டவர்களாக, மாணவர்கள் அறியப்படுகின்றனரோ, அந்த அளவுக்கு, எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக, தீய பழக்க, வழக்கங்களுக்கு அடிமையாகும் பலவீனமானவர்களாக உள்ளனர். தமிழ் சமுதாயம், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, நம் முன்னோர், தாங்கள் அரும்பாடுபட்டு சேர்த்த பணத்தில், கல்லுாரிகள் கட்டி, ஏழை மாணவர்கள், நடுத்தர வர்க்கத்து மாணவர்களைப் படிக்கச் செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினர். எனவே மாணவர்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்க, அனைவரும் இணைந்து வழி காட்டுவோம். மாணவர்களின் மனங்களில் நம்பிக்கையை விதைப்போம், நல்ல மாணவர்களை அறுவடை செய்வோம் என்றும், ரா.வெங்கடேஷ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

'சவால்களை எதிர்நோக்கும் ஆற்றல் பெற்றவர்கள், புதியதை கற்கும் ஆர்வம் கொண்டவர்கள், எதையும் கேட்டு, தெளிவுபெறத் தயங்காதவர்கள், மாறுபட்ட சூழலையும் எதிர்கொள்ளும் துணிச்சல்மிக்கவர்கள், மாற்றங்களை மனமுவந்து ஏற்று, சாதனை படைப்பவர்கள்' என்று, எண்ணற்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர்கள், கல்லுாரி மாணவர்கள். நிறைய படிப்பவர்கள், நல்லொழுக்கம் நிறைந்தவர்கள், மூத்தோருக்கு மதிப்பளிப்பவர்கள், சக மாணவர்களுடன் ஒன்றிணைந்து, ஆக்கப்பூர்வமாக செயல்படுபவர்கள் என்ற எண்ணங்களையும் சமுதாயத்திற்கு அளிப்பவர்கள், மாணவர்கள் (நன்றி தினமலர்). இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக பல மாணவர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் பற்றி இன்று குறிப்பிடுகிறோம்.

வேண்டும் என்ற மாணவி ‘வேண்டாம்’

கடந்த வார இறுதியில், ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்த, “வேண்டாம்” என்ற இயற்பெயர் கொண்ட பொறியியல் மாணவிதான் அவர். பெண் குழந்தையாகப் பிறந்ததால், 'வேண்டாம்' என பெயர் சூட்டப்பட்ட அவர், இன்று கல்வியால் உயர்ந்து, ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில், ஆண்டிற்கு 22 இலட்சம் ரூபாய் ஊதியம் பெறும் வேலைக்குத் தேர்வாகியுள்ளார். வேண்டும் என்று தேர்வுசெய்யப்பட்டுள்ள மாணவி “வேண்டாம்” அவர்கள் பிபிசி தமிழ் ஊடகத்திடம் தனது இலட்சியம் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.

திருத்தணி பகுதியிலுள்ள எனது நாராயணபுரம் கிராமத்தில், 'வேண்டாம்' என பெண் குழந்தைக்கு பெயர் வைத்தால், அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாகப் பிறக்கும் என்ற நம்பிக்கை பின்பற்றப்படுகிறது. ஆனால், எனது குடும்பத்தில் மூன்றாவது பெண் நான். எனக்கு அடுத்தும், தங்கையே பிறந்தார். எனது கிராமத்தில் பள்ளிப்படிப்பு முடியும்வரை, எனது பெயரை யாரும் வித்தியாசமாகப் பார்க்கவில்லை. ஏனெனில் எனது வகுப்பில் இரண்டு மாணவிகளுக்கு 'வேண்டாம்' என்ற பெயர் இருந்தது. ஆனால் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது, மற்றும் பொறியியல் கல்விக்காக கலந்தாய்வுக்குச் சென்றபோது பலரிடம் என் பெயருக்கான விளக்கத்தைச் சொல்லவேண்டியிருந்தது. முதலில் தயங்கினாலும், தற்போது தன்னம்பிக்கையோடு எதிர்கொள்கிறேன். ஆண் படித்தால், குடும்பத்திற்கு வருமானம் வரும், வெளிநாட்டு வேலைக்கு ஆண் துணிந்து செல்வான் என்ற எண்ணம் சமுதாயத்தில் நிலவுகிறது. நான் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் உதவித்தொகை பெற்று படித்தேன். முழு கவனத்துடன் என்னைத் தயார் செய்து, தற்போது நான் விரும்பிய பொறியியல் படிப்பில், குறியீடு தொடர்பான வேலைக்கு ஜப்பானுக்குச் செல்லப்போகிறேன். தற்போது ஜப்பானிய மொழியையும் கற்றுவருகிறேன். எங்கள் கிராமத்தில் பலரும் வியப்புடன் பார்க்கிறார்கள். இனி என் குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வராது. அதேபோல், எங்கள் ஊரில் ஆண் குழந்தை இல்லாத குடும்பங்களில், என்னைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள்.

தற்போது பொறியியல் (எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்) இறுதியாண்டு படிக்கும் 'வேண்டாம்' அவர்கள், 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜப்பானில் உள்ள Human Resocia என்ற நிறுவனத்தில் குறியீடு பொறியியலாளராகச் சேரவுள்ளார். இந்த மாணவியின் முன்னேற்றத்தை கேள்விப்பட்ட, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், உமா மகேஸ்வரி அவர்கள், பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான, ‘பெண்களைக் காப்போம், பெண்களுக்குக் கற்பிப்போம்’ என்ற அமைப்புக்கு, தூதராக அவரை நியமித்துள்ளார். விவசாயம் செய்யும் இவரது தந்தை அசோகன் அவர்கள், 'பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு கல்வி மட்டும்தான் உதவும் என உறுதியாக நம்பினேன். அதனால் நான்கு பெண் குழந்தைகளும் படிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒவ்வொரு குழந்தையும் முன்னேற்ற பாதையில் செல்வதைப் பார்க்கும்போது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது' என்று சொல்லியுள்ளார்.

11 வயது அறிவியலாளர் ஹரிப்பிரியா

பிரிட்டனில் வாழும் 11 வயதான ஹரிப்பிரியா எனும் தமிழ்ச் சிறுமி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் போன்ற உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களைவிட, IQ எனப்படும் அறிவுத்திறன் மதிப்பீட்டில், இரண்டு எண்கள் அதிகமாகப் பெற்று, மிகுந்த அறிவுக்கூர்மையுள்ளவர் எனும் பெருமையை பெற்றுள்ளார் (ஜூலை,29). உலகின் புகழ்பெற்ற அறிவுக்கூர்மை பரிசோதனை கூடங்களில் ஒன்றாகத் திகழும் பிரிட்டிஷ் மென்சாவின், 'காட்டல் III பி (Cattell III B)' எனும் தேர்வில் பங்கேற்ற ஹரிப்பிரியா, அத்தேர்வின் அதிகபட்ச சாத்தியமுள்ள மதிப்பீடான 162 பெற்று சாதனைப் படைத்துள்ளார். அதாவது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் போன்ற பிரபல அறிவியலாளர்களின் அறிவுத்திறன் மதிப்பீட்டைவிட இவர் இரண்டு எண்கள் அதிகமாக பெற்றுள்ளார். அதே போன்று, பிரிட்டிஷ் மென்சாவின் மற்றொரு அறிவுக்கூர்மை தேர்வான 'கல்ச்ர் பார் (Culture Fair Scale)' என்பதிலும், அதிகபட்ச மதிப்பீடான 140ஐ பெற்று அசத்தியுள்ளார். இந்த முடிவு ஜூலை 25, கடந்த வியாழனன்று வெளியானது. கல்வி மட்டுமின்றி, பன்மொழித்திறன், ஆடல், பாடல், இசை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார், ஹரிப்பிரியா. தமிழகத்தின் காரைக்குடியை பிறப்பிடமாகக் கொண்ட இவரின் பெற்றோர், பிரிட்டனில் வாழ்ந்தாலும்,  வீட்டில் தமிழ் பேச வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றனர்(பிபிசி தமிழ்).

கல்வியிலும், நற்பண்புகளிலும் சிறந்து விளங்கும் இளையோரை வாழ்த்துவோம். இதே வழியில் இளைய தலைமுறைகள் உருவாகட்டும். சுவாமி விவேகானந்தர் சொல்கிறார் - உயிரே போகும் நிலை வந்தாலும், துணிச்சலை மட்டும் விட்டு விடாதே! நீ சாதிக்கப் பிறந்தவன், துணிந்து நில், எதையும் வெல் என்று.

வாரம் ஓர் அலசல் – இளையோரே, நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2019, 15:31