"மரண தண்டனை மற்றும் சித்ரவதைக்கு எதிரான அன்னையர்" அமைப்பை உருவாக்கிய தமாரா "மரண தண்டனை மற்றும் சித்ரவதைக்கு எதிரான அன்னையர்" அமைப்பை உருவாக்கிய தமாரா 

வாரம் ஓர் அலசல் – நல்லதே செய்தால், நல்லதே நடக்கும்

"மரண தண்டனை மற்றும் சித்ரவதைக்கு எதிரான அன்னையர்" அமைப்பை உருவாக்கிய அன்னை Tamara அவர்கள் சொல்கிறார் - "எல்லாவற்றிற்கும் ஒரு வரையறை உண்டு, இரக்கத்தைத் தவிர" என்று

மேரி தெரேசா – வத்திக்கான்

ஒரு சமயம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வர்த்தக கருத்தரங்கு ஒன்றை நடத்தியவர், உலகில் செல்வமிகுந்த நிலம் எங்கே உள்ளது? என்ற கேள்வியை எழுப்பினார். எண்ணெய் வளம் நிறைந்த அரபு நாடுகள் என்றார் ஒருவர். ஆப்ரிக்காவின் வைரச் சுரங்கங்கள் என்றார், இன்னொருவர். இப்படி சிலர் தங்களின் கணிப்பைச் சொல்ல, நடத்துனரோ, இல்லை, அது கல்லறைத் தோட்டம். ஆம், அதுதான் உலகின் செல்வமிகுந்த நிலம், ஏனெனில் அது, இலட்சக்கணக்கான மக்கள் அடக்கம் பண்ணப்பட்டுள்ள நிலம். இவர்கள் எல்லாரும், வாழ்ந்த நாள்களில் தங்களின் பல மதிப்புமிக்க இலட்சிய கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இந்த கல்லறைகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றனர். அதனால், இவர்களின் கருத்துக்கள் வெளிச்சத்திற்கு வரவுமில்லை, மற்றவர்கள் அவற்றால் பயன் பெறவுமில்லை என்று விளக்கம் சொன்னார். இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட Todd Henry என்ற பேச்சாளர், இந்த சிந்தனையால் உள்ளுயிர் பெற்று, Die Empty என்ற நூலை எழுதினார். நீங்கள் உலகிற்குப் பிரியாவிடை சொல்வதற்கு முன்னே, உங்களில் இருக்கும் சிறந்த படைப்பாற்றல்களை வெளிப்படுத்துங்கள். உங்களில் ஒரு சிறந்த கருத்து உருவானால், அதற்கு உருக்கொடுங்கள். உங்களிடம் அறிவு இருந்தால் அதை அடுத்தவருக்கென பயன்படுத்துங்கள். ஓர் இலட்சியம் இருந்தால் அதை நிறைவேற்றுங்கள். நீங்கள் வெளிப்படுத்தும் நல்ல கருத்துக்கள், உடனடியாக இல்லாவிட்டாலும், சிறிது காலம் சென்றாவது பயன்தரும்..... இவ்வாறு, மக்கள், தங்களின் திறமைகளையும், மாற்றத்திற்கு வித்திடும் கருத்தியல்களையும், வாழும் சமுதாயங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஊக்கப்படுத்தியுள்ளார் Henry.  

பத்மினி பிரகாஷ்

பத்மினி பிரகாஷ் என்ற மூன்றாம் பாலினத்தவர், வாழ்கின்றபோதே, தனது இலட்சியத்தை வெளிப்படுத்தி, சமுதாயத்தில் எதிர்கொண்ட பல நெருப்பு ஆறுகளில் நீந்திக் கரையேறியுள்ளார். இந்தியாவிலேயே, தொலைக்காட்சி அலைவரிசையில் முதல்முறையாக செய்தி வாசிப்பாளர் என்ற பாராட்டையும் இவர் பெற்றுள்ளார். தமிழ் மீது இருந்த பற்றால், முதுகலை படிப்பை முடித்துள்ள இவர், இப்போது, முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார். தன்னம்பிக்கை பேச்சாளர், எழுத்தாளர், பரதநாட்டிய கலைஞர், மற்றும் வீணையும் வாசிப்பவர். இப்படி பன்முகத்திறமை கொண்டதோடு, இவற்றிற்கெல்லாம் உச்சமாக, தற்போது கோவையில் உள்ள தனியார், தொலைக்காட்சி ஒன்றில், செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிறார், பத்மினி பிரகாஷ். இவரின் அழகான தமிழ் உச்சரிப்பு எல்லாரையும் கவர்ந்துள்ளது. மேலும், 'அமுதசுரபி திருநங்கை புனர்வாழ்வு மையம்' என்ற அமைப்பின் மூலம், மூன்றாம் பாலினத்தவரின் உயர்வுக்கும் உதவி வருகிறார். இந்த இனத்தவர், குடும்பம் நடத்தலாம் என்பதற்கு ஏற்ப, பிரகாஷ் என்பவரைத் திருமணம் செய்து, குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மூன்றாம் பாலினத்தவர் வழக்கமாக சந்திக்கும், கேலி, அவமானங்கள் இவரையும் விட்டுவைக்கவில்லை. 'தான் கடந்து வந்த பாதை, கரடு முரடானது, முட்கள் நிரம்பியது, என்றுரைக்கும் பத்மினி அவர்கள், 'நெருப்பாற்றை நீந்தி வந்தேன்' என்ற தலைப்பில், தனது பல்வேறு அனுபவங்களை நூலாக வடித்து, ஜூன் 2ம் தேதி, கோவையில் வெளியிட்டுள்ளார். தன்னைக் கேலி செய்தவர்களே உயர்வாகப் பேசும்படியாக உயர்ந்துள்ளார் இவர். நான் எல்லாரையும் போல, சாரசரி வாழ்க்கை வாழ்ந்து போக விரும்பவில்லை, வாழ்ந்ததற்கான நல்ல அடையாளத்தை, இந்த பூமியில் விட்டுச்செல்ல விரும்புகிறேன். உங்கள் வாழ்த்து, என்னை வழி நடத்தட்டும், நன்றி! என்று சொல்லியிருக்கிறார் பத்மினி பிரகாஷ். (நன்றி-தினமலர்)

மகனின் பெயரால்

Tamara Chikunova என்பவர், "மரண தண்டனை மற்றும் சித்ரவதைக்கு எதிரான அன்னையர்" அமைப்பை உருவாக்கியவர். இவர், உரோம் புனித எஜிதியோ பிறரன்பு அறக்கட்டளையின் ஆதரவுடன், மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும், சிறை அமைப்புகள் மனிதம்நிறைந்து செயல்படவும் அழைப்பு விடுத்து வருகிறார். இவர், மரண தண்டனையை நிறைவேற்றும் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, அதற்கு எதிராகவும் பேசி வருகிறார். இவரது அயரா உழைப்பால், 2008ம் ஆண்டு சனவரி முதல் தேதி, இவரது தாய் நாடான உஸ்பெக்கிஸ்தானில் மரணதண்டனை சட்டம் இரத்து செய்யப்பட்டது. அதன் வழியாக அந்நாடு, உலகில் மரண தண்டனையை இரத்து செய்துள்ள 134வது நாடாக மாறியுள்ளது. அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மரண தண்டனை கைதிகளின் வாழ்வும் காப்பாற்றப்பட்டுள்ளது. அண்மையில் பெலாருஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் Tamara. இவரின் இந்தப் பயணங்களுக்குப் பின்னணியில் ஒரு பெரிய சோகக் கதை உள்ளது.

இவரது 28 வயது நிரம்பிய மகன் Dmitry Chikunova அவர்கள், 2000மாம் ஆண்டு ஜூலை 10ம் தேதி, தாஷ்கன்ட் சிறையில், மிக இரகசியமாக, சுட்டுக் கொல்லப்பட்டார். இது ஏன்? ஏன்? என பலமுறை தன்னைக் கேள்விகளால் துளைத்துக்கொண்டிருந்தார் Tamara Chikunova. இவரது மகனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு நாற்பது நாள்கள் சென்று, இறப்பதற்குமுன் மகன் எழுதிய கடிதம் அவருக்குக் கிடைத்தது. அதில் மகன் இவ்வாறு எழுதியிருந்தார்.

மகனின் கடிதம்

எனதருமை அம்மா, நாம் சந்திப்பதற்கு விதி நம்மை அனுமதிக்காமல் இருந்தால், நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் குற்றம்புரிந்தவன் இல்லை என்பதை நினைவில் வையுங்கள். நான் யாரையும் கொலை செய்யவில்லை. நான் இறப்பதற்குத் தயார்தான். ஆனால், யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. உங்களை அன்புகூர்கிறேன். எனது வாழ்வில் நான் அன்புகூர்ந்த ஒரே ஆள் நீங்கள் மட்டுமே. என்னை தயவுசெய்து நினைத்துக்கொள்ளுங்கள்.

Tamara Chikunova அவர்களும், அவரது மகனும், தாஷ்கன்டில் வேலை செய்து வந்தனர். அச்சமயத்தில், 1999ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி, மூன்று பேர் சாதாரண உடையில், இவரது மகன் அலுவலகத்திற்குச் சென்று, மகனைக் கைது செய்தனர். அந்நேரத்தில் Tamara Chikunova. அவர்களும், அங்கு இருந்துள்ளார். ஏதோ எங்கோ தவறு நடந்துவிட்டது என்பது மட்டும் புரிந்தது Tamaraவுக்கு. இந்த கைது சாதாரணமானதுதான் என்று, அச்சமயத்தில் அதிகாரிகள் சொல்லியுள்ளனர். ஆனால் அன்றிலிருந்து அவரது மகன் சிறையிலேயேதான் வைக்கப்படிருந்தார். இந்த கைது நடந்த சிலமணி நேரங்களுக்குள், Tamara அவர்களும் 12 மணி நேரம் கேள்விகளால் நச்சரிக்கப்பட்டுள்ளார். அவரது மகன் பற்றி கேள்விகள் கேட்டு கேட்டு அடித்துள்ளனர். அடுத்து ஆறுமாதங்கள் சென்று, சிறையில் மகனைச் சந்தித்தபோது, மகன், சித்ரவதைகளால் உருக்குலைந்து அடையாளம் காண முடியாத நிலையில் இருந்துள்ளார்.

சிறையில் சித்ரவதை

இதற்கிடையே, தாஷ்கன்ட் சிறை அதிகாரிகள், Dmitry, இரு கொலைகளைச் செய்ததாக ஏற்குமாறு அவரைச்  சித்ரவதை செய்துள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அவரை அழைத்துச்சென்று, கட்டாயமாக முட்டிபோட வைத்து, இரு கைகளையும் பின்னால் கட்டி, தலையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு, குற்றத்தை ஒப்புக்கொள்ளும் அறிக்கையில் கையெழுத்திட வேண்டும், இல்லாவிடில் சுட்டுவிடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர். அச்சமயத்தில் குற்றத்தை ஏற்க மறுத்துள்ளார் Dmitry. பின்னர், இவரது தாயை அவர்கள் கேள்வியால் துளைத்தபோது, துன்பம் தாங்க இயலாமல் கதறி அழுததை கேட்கச் செய்துள்ளனர். எனவே தனது தாயைக் காப்பாற்றுவதற்காக, கடைசியாக, குற்றத்தை ஒப்புக்கொண்டு, மரண தண்டனை குற்ற அறிக்கையில் கையெழுத்திட்டார், Dmitry. அடுத்து ஏழு மாதங்கள் சென்று சிறையில் மகனைச் சந்தித்தபோது, மகன் மரண தண்டனை கைதிகள் பட்டியலில் இருந்தை அறிந்தார், தமாரா. பின்னர், 2000மாம் ஆண்டு ஜூலை 10ம் தேதி மகனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது நடந்து ஐந்து ஆண்டுகள் சென்று, அன்னையர் அமைப்பின் வற்புறுத்தலால், 2005ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்த வழக்கு தூசு தட்டப்பட்டது. விசாரணையில், இத்தண்டனை அநீதியானது என்று சொல்லி, Dmitry அவர்கள், குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார்.

இது குறித்துப் பேசும் தாய் Tamara அவர்கள், தன் மகன் கடைசியாக எழுதிய கடிதத்தை வாசித்தபோது நான் அனுபவித்த வேதனையை யாராலும் விவரிக்க முடியாது என்று சொன்னார். மகன் கொல்லப்பட்ட பின்னர் இரு ஆண்டுகள் பித்து பிடித்ததுபோல் இவர் இருந்தார்.  அதன்பின்னர், உள்ளுயிர் பெற்ற அவர், கொடூரமான மற்றும் மனிதமற்ற மரண தண்டனை, உலகில் இரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். மரண தண்டனைக் கைதிகளாக உள்ள தங்கள் பிள்ளைகளை, கணவன்களை, சகோதரர்களைச் சந்தித்து வாழ்வுக்காப் போராடுமாறு ஊக்கப்படுத்துங்கள் என்று பெண்களிடம் கூறி வருகிறார் Tamara. தனது அனுபவங்களையும் எடுத்துச் சொல்லி வருகிறார். ஏற்கனவே மரண தண்டனை தீர்ப்பிடப்பட்ட Evgeny Gugnin என்பவர், இவரது கடும் முயற்சியால், 2011ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். Evgeny, சிறையிலேயே திருமுழுக்கு பெற்றுவிட்டதால், தற்போது தாஷ்கன்ட் குருத்துவ கல்லூரியில் அருள்பணியாளராக ஆவதற்காகப் பயிற்சி நிலையில் உள்ளார்.

அன்னை Tamara அவர்கள் சொல்கிறார் - "எல்லாவற்றிற்கும் ஒரு வரையறை உண்டு, இரக்கத்தைத் தவிர" என்று. இவர் போன்று, வாழ்கின்றபோதே உங்களின் உள்ளத்து உயரிய எண்ணங்களை, இலட்சியங்களை வெளிப்படுத்தி செயல்படுத்துங்கள். மலர்களைத் தூவி மாலைகளைப் பெறுங்கள். நல்லது செய்வோம், நல்லவற்றையே பெறுவோம்.

வாரம் ஓர் அலசல் – நல்லதே செய்தால், நல்லதே நடக்கும்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2019, 15:10