அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்ட கோதுமைப் பயிர்கள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்ட கோதுமைப் பயிர்கள் 

பூமியில் புதுமை.........: நிரந்தர வேளாண்மை

வேளாண்மை என்பது தொழில் அல்ல, அது இந்த உலக மக்களின் கலாச்சாரம், அதுவும் நிரந்தரமான கலாச்சார முறை ஆகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக்கொண்ட பில் மொலிசன் (Bill Mollison) என்பவர், டாஸ்மானியாவின் அருகிலுள்ள ஸ்டேன்லி என்ற சிற்றூரில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வாழ்ந்து வந்தவர். தினமும் கடல், மீன், மேலே வானம் என சலிப்பேற்பட்டதால், பல இடங்களைக் காண விரும்பி, தன் 48ம் வயதில், சரக்கு வாகன ஓட்டுனராக மாறினார். இப்படி ஓட்டுனராகச் சென்றபோது, சாலையின் இருபுறங்களில் இருக்கும் காடு, மலை, விவசாய பூமிகளைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. அதில் மனம் செல்ல, தாவரவியல் படித்து அதனை அறிய ஆவல் கொண்டார். தாவரவியல் படிப்பின் ஒரு பகுதியாக, சூழலியல் பற்றி அறிய ஒரு மலை கிராமத்தில் தங்கியிருந்தபோது, அவர்கள் செய்யும் விவசாய முறை அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. அந்த மலைவாழ் மக்கள் மிகவும் எளிமையான, மரத்தினாலான பொருட்களைக்கொண்டு விதைப்பது, உழுவது போன்ற வேலைகளைச் செய்வதைப் பார்த்தார். ஆனால் அதேகாலத்தில் சமவெளியில் உள்ள பெரும் பண்ணைகளில், பெரிய இயந்திரங்கள் கொண்டு உழுவதையும், அறுவடை செய்வதையும் நினைவுகூர்ந்து, இவ்விரண்டில் உள்ள வேறுபாடு தெரியாமல் குழம்பினார். மலைக்கிராம மக்கள், தங்கள் உணவு மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்காகவே பயிர் செய்கின்றனர் என்றும், சமவெளியில் உள்ள விவசாயிகள் பணம் ஈட்டுவதற்காகப் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்கின்றனர் என்றும் அறிந்தார்.

இந்த இரண்டு முறைகளுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பில் மொலிசன் அவர்கள், வேளாண்மை என்பது தொழில் அல்ல, அது இந்த உலக மக்களின் கலாச்சாரம், அதுவும் நிரந்தரமான கலாச்சாரமுறை ஆகும் என்பதை அறிந்துகொண்டார். ஆகவே, தான் கற்றதை பல ஆயிரக்கணக்கான ஏக்கருள்ள விவசாயப் பூமியில் எப்படி செயல்படுத்தலாம் என்பதை அறிய, தன்னுடன் ஒத்த கருத்துள்ள நண்பர்களுடன் இணைந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதன் முடிவில், ஒரு விவசாய பூமி எப்படி அமைய வேண்டும், அதன் பயன் என்ன, அது எப்படி நிரந்தரமானதாகவும், இலாபகரமானதாகவும் இருக்கும் என்பதனை, 'பெர்மாகல்ச்சர்' (Permaculture) என்ற பெயரில், ஒரு நூலாக வெளியிட்டார். அதில் தன் ஆய்வு முடிவுகள், மற்றும், பண்ணை வடிவமைப்பு, தொழில்நுட்பம், அதன் பயன்பாடுகள் என, அனைத்தையும் தொகுத்து மிகவும் விரிவாக விளக்கியுள்ளார், பில் மொலிசன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2019, 14:21