வயது முதிர்ந்தோரைப் பேணுதல் வயது முதிர்ந்தோரைப் பேணுதல் 

இந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில், 2040ம் ஆண்டில், 60 வயதுக்கு அதிகமானோர் 23 கோடியே 94 இலட்சமாக இருப்பார்கள், இவ்வெண்ணிக்கை, 2011ம் ஆண்டில், 10 கோடியே 42 இலட்சமாக இருந்தது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது, இளைய தலைமுறையின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என்று, இந்திய நிதி அமைச்சகம், மக்களவையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"2040ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை: 21ம் நூற்றாண்டுக்கு பொதுநலத்திட்டம்" என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஆய்வின் ஒரு பகுதியாக, 2018-2019ம் ஆண்டு பொருளாதார நிலைமை குறித்து வெளியான புள்ளி விவரங்களில், வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

பல்வேறு முறைகளில் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படுவது பற்றியும், ஓய்வு வயதை அதிகரிப்பது குறித்தும், சிந்திக்க வேண்டுமென்று, வல்லுனர்கள், இந்திய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

2041ம் ஆண்டில், 19 வயதுக்குட்பட்ட இளையோரின் எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காடாக இருக்கும் என்றும், 2011ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 41 விழுக்காடு இது குறைவாக இருக்கும் என்றும், புள்ளி விவரங்கள் எச்சரிக்கின்றன.

வகுப்பறைகள் குறையும் அதேவேளை, அரசுப் பணியாளர்களின் ஓய்வூதிய வயதை அறுபதாக உயர்த்துமாறு பரிந்துரைத்துள்ள வல்லுனர்கள், 2040ம் ஆண்டில், 60 வயதுக்கு அதிகமானோர் 23 கோடியே 94 இலட்சமாக இருப்பார்கள் என்றும், இவ்வெண்ணிக்கை, 2011ம் ஆண்டில், 10 கோடியே 42 இலட்சமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.

1970ம் ஆண்டில், 50 கோடிக்கு மேல், 2011ம் ஆண்டில், ஏறத்தாழ 120 கோடி என இருந்த இந்தியாவின் மக்கள் தொகை, 2019ம் ஆண்டில் 136 கோடியாக உள்ளது எனவும், இவ்வளர்ச்சி, 2021-2031க்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு விழுக்காடாகவும், 2031க்கும், 2041க்கும் இடைப்பட்ட காலத்தில், 0.5 விழுக்காடாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. (AsiaNews / Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2019, 15:10