இயற்கை அங்காடி இயற்கை அங்காடி 

பூமியில் புதுமை: ecoindian.com இயற்கை அங்காடி

வீட்டிலிருந்து சிறிய அளவில் உற்பத்தி செய்யும் சிறு வியாபரிகள், கைவினைக் கலைஞர்கள் மற்றும், மகளிர் சுய உதவிக் குழுக்கள்தான், ecoindian.com இயற்கை அங்காடிக்கு விற்பனைக்குப் பொருள்களை வழங்குபவர்கள்.

மேரி தெரேசா - வத்திக்கான்

தமிழகத்தில் ஆங்காங்கே பல இயற்கை அங்காடிகள் செயல்பட்டு வந்தாலும்,  அவற்றில் பல, விற்பனைப் பொருள்களைப் பொதிந்து கொடுப்பதற்கு, நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்களையும், பாலிதீன் கவர்களையுமே இன்னும் பயன்படுத்தி, வருகின்றன. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த, பிரேம் ஆண்டனி, பிரதீப் குமார் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து, நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்கள் இல்லாத ecoindian.com என்ற, கணனிமய மற்றும் சில்லறை இயற்கை அங்காடியை நடத்தி வருகின்றனர். கடையில், பொருள்களை சேமித்து வைப்பதற்கு, மறுசீரமைக்கும் கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு விற்கப்படும் பொருட்கள் அனைத்தும், இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்படுபவை. அனைத்து வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள், வீடு மற்றும் கழிவறைகளைச் சுத்தம்செய்யும் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள், இரு பாலினத்தவருக்கும் உரிய ஆடைகள் என, அனைத்தும், மக்கிப்போகும் பொருள்களால் செய்யப்பட்டவை. நெகிழி பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையிலும், இயற்கை பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையிலும், விற்பனை பொருள்களைப் பொதிந்து கொடுப்பதற்கு, காகிதங்களும், திரவப் பொருள்களுக்கு கண்ணாடி டப்பாக்களும் மட்டுமே, இக்கடையில் பயன்படுத்தப்படுகின்றன. பொருள்கள் வாங்குவதற்கு, வீட்டிலிருந்து கொள்கலம் கொண்டு வருபவர்களுக்கு, ஐந்து விழுக்காடு வரை சிறப்புத் தள்ளுபடியும், இக்கடையில் உண்டாம். பொதுவாக, வேதியக் கலப்பு இல்லாத இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் என்றாலே, விலை அதிகம் என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும் ecoindian.com கடையில், மற்ற அங்காடிகளுடன் ஒப்பிடும்போது, விலை ஏறக்குறைய பத்து விழுக்காடு வரை குறைவு எனச் சொல்லப்படுகின்றது. அதோடு, பத்து கிராம், ஐம்பது கிராம் என, குறைந்து அளவு பொருள்களையும்கூட தனியாக வாங்கிக் கொள்ளலாம் என்றும் இந்த நண்பர்கள் சொல்கின்றனர். படிப்பு தொடர்பான பென்சில்களில்கூட விதைகள் பொறுத்தப் பட்டிருப்பதால், அவற்றைப் பயன்படுத்தி முடித்தவுடன், தூக்கி எரிந்துவிட்டால் அந்த விதைகளிலிருந்து மரங்கள் வளரும் என்பதே, இந்த நண்பர்களின் திட்டமாம். விவசாயம் சார்ந்த கம்பு, கேள்வரகு, அரிசி என அனைத்தையும், இயன்றவரை விவசாயிகளிடமே நேரிடையாக இவர்கள் கொள்முதல் செய்கின்றனர் (நன்றி - மின்முரசு.காம்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2019, 15:23