சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வைக்கோல் சவர்களால் உருவான வீடு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வைக்கோல் சவர்களால் உருவான வீடு 

பூமியில் புதுமை – புவி வெப்பமயமாதலுக்கு நம் வீடுகளும் காரணம்

"எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம், நம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுச் செல்கிறோம் என்பதற்கான சாட்சி, நாம் வாழும் வீடுகள். அவை, இயற்கையுடன் இயைந்ததாக இருக்கவேண்டும்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

புவி வெப்பமயமாதல், மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஆகிய பிரச்சனைகளுக்கு, நாம் கட்டும் வீடுகளும் ஒரு காரணம் என்ற புதிரானக் கூற்றுடன் துவங்கி, வியக்க வைக்கும் மாற்று வீடுகள் குறித்து, நியாஸ் அகமது என்பவர், பிபிசி தமிழ் இணையத்தில், வழங்கியுள்ள விளக்கங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. அவர் வழங்கிய எண்ணங்களில் சில இதோ:

வீடு கட்ட நாம் பயன்படுத்தும் சிமெண்ட், மற்றும், செங்கற்கள், அதிக அளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துவதால், நாம் வாழும் வீடுகள், புவி வெப்பமயமாதலுக்கு ஒரு வகையில் காரணமாகின்றன என்கிறார்கள், சுழலியலாளர்கள்.

உலகளவில் உற்பத்தியாகும் சிமெண்ட் மற்றும் செங்கற்கள் ஆசியாவில்தான், அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. செங்கல் சூளைகளுக்காக அதிகளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன.

சிமெண்ட், செங்கல் இல்லாமல், அல்லது, அவற்றை குறைவாக பயன்படுத்தி, வீடுகளைக் கட்டும் முயற்சிகள் உலகெங்கும் நடந்துவருகின்றன. சூழலியல் செயற்பாட்டாளர், பியூஷ் மனுஷ் (Piyush Manush) அவர்கள், "வீடுகள் எப்படி கட்ட வேண்டுமென்பதை நாம் பழங்குடியினரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இயற்கையாக என்ன பொருள் கிடைக்கிறதோ, அதனைக் கொண்டு மட்டுமே அவர்கள் வீடு கட்டுவார்கள். காற்றோட்டமான, வெளிச்சம் புகும் வீடுகள் அவர்களுடையது" என்று கூறுகிறார்.

நகரத்தில் அத்தகைய வீடுகளை கட்டுவதில் சில இடர்பாடுகள் உள்ளன என்று கூறும் பியூஷ் மனுஷ் அவர்கள், சிமெண்ட், மண், செங்கல், இரும்புகளை பயன்படுத்தாத மாற்று வீடுகள் இப்போதைய உடனடி தேவை என்றும், இதற்குத் தேவையான தொழில்நுட்பத்தில், அரசு அதிக அளவு முதலீடு செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

"வீடு என்பது வாழ்க்கை முறையைச் சார்ந்தது. எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம், நம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுச் செல்கிறோம் என்பதற்கான சாட்சி, நாம் வாழும் வீடுகள். அவை, இயற்கையுடன் இயைந்ததாக இருக்கவேண்டும்" என்கிறார் கேரளாவின் வயநாடு பகுதியை சேர்ந்த சிவராஜ். மூங்கில் பயன்பாட்டை பரவலாக்க 'உறவு' எனும் அமைப்பை நடந்தி வரும் சிவராஜ் அவர்கள், மூங்கில் வீடுகள் கட்டுவது தொடர்பாக பயிற்சியும் அளிக்கிறார்.

தான் வாழும் பகுதியில் என்ன மூலப் பொருட்கள் கிடைக்கிறதோ, அவற்றைக் கொண்டு கட்டுவதுதான் நிலத்திற்கு ஏற்ற வீடு என்கிறார், தருமபுரியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் சுரேஷ்.

களிமண், அவர் வாழும் பகுதியில் கிடைக்கும் கற்கள், சுடாத செங்கற்கள் கொண்டு வீடு கட்டியிருக்கும் சுரேஷ் அவர்கள், "காற்று, வெளிச்சம் அதிகம் புகுவதாக வீடுகள் இருக்கவேண்டும். இயற்கை வழங்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொண்டாலே, மின்சார பயன்பாட்டைத் தவிர்க்கலாம். மின்சார பயன்பாடு குறைந்தால், நிலக்கரி பயன்பாடு குறையும். பருவநிலை மாற்றத்தில் அது செலுத்தும் தாக்கமும் குறையும்" என்கிறார். (பிபிசி தமிழ்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2019, 14:41