பனை மரங்களின் வரிசை பனை மரங்களின் வரிசை 

பூமியில் புதுமை : பனையைத் துணையாகக் கொள்வர் பயன் தெரிவார்

தமிழர்களின் அடையாளமாக உள்ள பனை மரத்தை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, அதனால் வருமானம் கிடைத்தவரை, பனை மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. அதன்பிறகு, பனை மரங்களைக் கைவிட்டுவிட்டனர் விவசாயிகள். வறட்சி காரணமாக, பனை மரங்களைக் காப்பாற்ற முடியாமல், செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக விற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில், 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிதான் உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன.

பனை ஓலை குருத்துகளைப் பிரித்தெடுத்து, பகலில் வெயிலிலும், இரவில் பனியிலும் பதப்படுத்தும் முன்பாக, ஈக்கியில்லாத ஓலையைத் தனியாகப் பிரித்து எடுத்து, அறிவியல் முறையில் பயன்படுத்தி உள்ளனர். நெல் இதர தானியங்களைக் காற்றில் தூற்றி, தரம் பிரிக்கப் பயன்படுத்துபவை, தூற்றுப் பெட்டிகள் என்றும், தானியங்களைப் புடைத்து எடுக்க சொழகு அல்லது முறம் என்றும், சரக்குகளைக் கட்டி அனுப்ப பனைப் பாய்கள் எனவும் அழைத்து அதனைப் பயன்படுத்தி வந்தனர் நம் முன்னோர். இதைத் தவிர, மட்டையிலிருந்து நார் எடுத்து மெத்தைகள், பிரஷ்கள், ஆடைகள், கால்மிதிகள், வீட்டு அழகு சாதனப் பொருள்களும் தயாரித்தனர். பதனீர் குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் பெருகும், நோய் உண்டாக்கும் கிருமி தொற்றுகளைத் தடுக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.

எந்தவிதச் செலவுமின்றி வளர்ந்து நிற்கும் சில கோடி மனை மரங்களையாவது பாதுகாக்க வேண்டும். பனையின் பயனைப் பெற புதிய வழிகளை உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தமிழர்களின் அடையாளமாக உள்ள பனை மரத்தை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 May 2019, 15:42