நீர்நிலைகளைத் தூர்வாரும் கொத்தமங்கல இளையோர் நீர்நிலைகளைத் தூர்வாரும் கொத்தமங்கல இளையோர் 

பூமியில் புதுமை:சொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் இளையோர்

அரசு செய்யவேண்டிய பணிகளை நாம் செய்தால், ஏதாவது பிரச்சனை வருமோ என்று எண்ணிய இளையோர், தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். ஆனால், எந்தப் பலனும் இல்லை

மேரி தெரேசா - வத்திக்கான்

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மக்களை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் சூழலில், இந்திய கெயில் (GAIL) எரிவாயு நிறுவனம், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், விவசாய நிலங்களில், ராட்சதக் குழாய்களைப் பதிக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டது. விளைபயிர்களை அழித்துக் குழாய்கள் பதிப்பதைக் கண்டித்து, விவசாயிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், எந்தப் பலனும் இல்லை என ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இளையோர், அரசை எதிர்பார்த்து, ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளைத் தூர்வாராமல் தாமதித்தால், அடுத்து வரும் பருவமழையிலும் தண்ணீரைச் சேகரிக்க முடியாது. தண்ணீரின்றி ஊரைவிட்டு காலிசெய்யும் நிலையும் உருவாகிவிடும் எனச் சொல்லி, களத்தில் இறங்கியுள்ளனர். அப்பகுதி கிராமங்களில், ஒரு குடம் 10 முதல் 15 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் அவலநிலை உருவாகியுள்ளது. 1,200 அடி போர்வெல் போட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், அப்பகுதி மக்கள் விவசாயத்தையும் கைவிட்டு வருகின்றனர். இந்நிலையில், மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து சிந்திக்கத் தொடங்கிய இளையோர், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே தண்ணீர்த் தட்டுப்பாடு நீங்கும் என அறிந்தனர். எனவே, கொத்தமங்கல கிராம இளையோர், நீர்நிலைகளைத் தூர்வாரி பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று அவற்றைத் தூர்வார முடிவுசெய்தனர். இளையோர் நற்பணி மன்றம் ஒன்றையும், `நீர்நிலைகள் பாதுகாப்பு' என்ற வாட்ஸ்அப் குழு ஒன்றையும், அவர்கள் உருவாக்கியுள்ளனர். அதில் உள்ளூர் இளையோர் தொடங்கி, வெளிநாடுவாழ் இளையோர் அனைவரையும் ஒன்றிணைத்து, எல்லாரிடமும் நிதி வசூல் செய்து, அந்தப் பகுதியில் உள்ள அம்புலி ஆற்றிலிருந்து, குளம், ஏரிகளுக்கு நீர் செல்லும், புதர் மண்டிக்கிடந்த வாய்க்கால்கள் அனைத்தையும், தூர்வாரி அசத்தி வருகின்றனர். (நன்றி விகடன் மணிமாறன்.இரா)

விவசாயத்தைக் காப்பதற்கு இளையோர் எடுக்கும் இம்முயற்சிகள் வெற்றிபெறட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2019, 15:32