Vatican News
அத்திக்கடவு சதீஷ் அவர்களுடன் மரங்கள் நடும் சிறார் அத்திக்கடவு சதீஷ் அவர்களுடன் மரங்கள் நடும் சிறார்  

பூமியில் புதுமை - மரங்களின் காவலர் மாற்றுத்திறனாளர் சதீஷ்

கோவை, ஈரோடு மற்றும், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வறட்சிப் பகுதிகளுக்கு பாசன வசதிகளைச் செய்துகொடுப்பதுதான் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன் வழியாக, 74 ஏரிகள் மற்றும், 971 குளங்களுக்கு நீர் விநியோகம் செய்வதோடு, 24,468 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும்

மேரி தெரேசா - வத்திக்கான்

அவினாசி-அத்திக்கடவு திட்டம், அறுபது ஆண்டுக்கால தொடர் மக்கள் போராட்டத்தின் விளைவாகத் தற்போது ஒரு வடிவம் பெற்றிருக்கிறது. அதற்கு மிக முக்கியமான ஒன்றாகக் கூறப்படுவது, 2016ம் ஆண்டு, 14 களப்போராளிகள், 12 நாள்கள் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டமாகும். இந்த 14 பேரில், மாற்றுத்திறனாளர் சதீஷ் குமார் அவர்களும் ஒருவர். திருப்பூரைச் சேர்ந்த சதீஷ் குமார் அவர்களின் கால்கள், மூன்று வயதிலேயே செயலிழந்துபோனதால், ஊன்றுகோல்தான் அவரது மூன்றாவது கால். இவர், 2014-ம் ஆண்டு 'களம்' என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, மரம் நடுதல், அடர்வனம் உருவாக்குதல், சாலையோரப் பூங்கா அமைத்தல், வெட்டப்படவிருக்கும் மரங்களைக் காப்பாற்றி, வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் மறுநடவு செய்து பராமரித்தல் என்று, பல பணிகளைச் செய்துவருகிறார். திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், குறைந்தது பன்னிரண்டாயிரம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார் இவர். அவினாசி மேல்நிலைப்பள்ளி மாணவர்களைக்கொண்டே, அப்பள்ளியின் மைதானத்தைச் சுற்றி, ஏறக்குறைய எழுநூறு மரக்கன்றுகளை இருபுறங்களிலும் நட்டு, நடுவே நடைப்பயிற்சி செய்யும்படியாகத் தடத்தை ஏற்படுத்தி அழகுபடுத்தியிருக்கிறார். இவரது பணிகளில் சிறப்பாக விளங்கும், அடர்வனம் அமைத்தலுக்கு, 'மியாவாகி' ஜப்பானிய முறையைப் பயன்படுத்தியுள்ளார். இங்குள்ள சூழலுக்கேற்ப ஏறக்குறைய அறுபது வகையான நாட்டு மரக்கன்றுகளை நட்ட அவரது புது முயற்சி, பலரின் பாராட்டுக்களைப் பெற்றது. 2016ம் ஆண்டு இவர் ஏற்படுத்திய இந்த அடர்வனம், தற்போது பெரிய காடாகி அங்கு பறவைகள், சிட்டுக்குருவிகள், தும்பிகள், முயல்கள் மற்றும் பல்வேறு உயிரினங்களுக்கு இயற்கை வாழிடமாக அமைந்துள்ளது. வேம்பு, அரசு, பூவரசு, அத்தி, நொச்சி முதலான பல மூலிகைச் செடிகளும் கலந்து நடப்பட்டிருப்பதால் தூய்மையான காற்றும் அக்கிராம மக்களுக்குக் கிடைக்கிறது. இந்தச் செயல்களின் தாக்கத்தால், கோட்டுப்புல்லாம் பாளைய கிராம மக்களும், இதுமாதிரியான அடர்வனத்தை, அமைத்துள்ளனர். அவினாசிக்கு அருகில் உள்ள குள்ளேகவுண்டன் பாளையம் என்ற கிராமத்தில் அந்த ஊர் இளையோர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், புதர் மண்டிய குட்டையைத் தூர்வாரி, கரை அமைத்து, அதன் அருகே இருபது சென்ட் நிலத்தில் ஏறக்குறைய 2,500 மரக்கன்றுகளை நட்டுள்ளார். இளைஞர் சதீஷ் அவர்கள், ஒரு மாற்றத்தை நோக்கி, மாற்றுச்சிந்தனையோடு களமிறங்கியுள்ள மாற்றுத்திறனாளர். யாரும் தன்னைத் தனியாக அடையாளப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் சதீஷ். கொங்கு பகுதியில், 'அத்திக்கடவு சதீஷ்' அல்லது 'களம் சதீஷ்' என்று சொன்னால், அவரை அடையாளம் காணாதவர்களே இல்லையாம். (நன்றி ரா. அரவிந்த்ராஜ், விகடன்)

09 May 2019, 15:14