இந்தியாவின் கண்ணாடிப் பெண்  தன்யா ரவி இந்தியாவின் கண்ணாடிப் பெண் தன்யா ரவி  

வாரம் ஓர் அலசல் – அச்சம் என்ற உயிர்க்கொல்லியை அகற்ற

என் எலும்புகள் உடையலாம். ஆனால், நான் ஒருநாளும் உடைந்து போகமாட்டேன். வாழ்க்கை என்பது சவால்களும் போராட்டங்களும் பிரச்சனைகளும் நிறைந்ததுதான். அவற்றைப் பார்த்து வாழ்க்கையின் இலட்சியத்தை மறந்துவிடாதீர்கள்

மேரி தெரேசா – வத்திக்கான்

இலங்கையை மட்டுமல்ல, உலகினரின் நெஞ்சத்தைப் பிழிந்து எடுத்த அந்தத் துயர நிகழ்வு நடந்து ஒரு வாரமாகியும், இன்னும் நம்மால் அதை மறக்க இயலவில்லை. வரலாற்றில் குருதியால் எழுதப்பட்டுள்ள நிகழ்வு அது. நீர்கொழும்பு கட்டுவபிட்டியா புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இரத்தத்தால் நனைந்த உயிர்த்த ஆண்டவரின் திருவுருவம் இந்த ஒட்டுமொத்த நிகழ்வுக்கும் சாட்சியாய் நின்றுகொண்டிருக்கிறது. இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான புனித நாளின் கொண்டாட்டம், இப்படி திசைமாறுமென எவராலும் கனவிலும் நினைத்திருக்க முடியாதது. கொழும்புவின் கத்தோலிக்க ஆலயங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படாதவரை, கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் ஞாயிறு திருப்பலிகளை நிறுத்தி வைத்துள்ளார். இதனால் இஞ்ஞாயிறன்று, கொழும்பு பேராயர் இல்லத்தில் கர்தினால் இரஞ்சித் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலி, நாட்டிலுள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அத்திருப்பலியில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதேவேளை, கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக இஞ்ஞாயிறன்று பல்சமயத் தலைவர்களின் சிறப்பு  வழிபாடுகள் இடம்பெற்றன. இந்த பயங்கரவாதத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனில் இளைப்பாற வேண்டும் என, மெழுகுவர்த்திகளை ஏற்றி இந்த வழிபாடுகள் நடத்தப்பட்டன. நாமும் இவர்களின் தொடர் செபத்தில் இணைவோம்.

தீவிரவாதம் என்னும் ஈ

Yuval Noah Harari   எனப்படும் இஸ்ரேல் நாட்டு வரலாற்று பேராசிரியர், Homo Deus: A Brief History of Tomorrow என்ற தனது நூலில், “தீவிரவாதிகள் ஈக்களைப் போன்றவர்கள். அவர்கள் வலிமையற்றவர்கள். அவர்களால் ஒரு தேநீர்க் கோப்பையைக்கூட சேதப்படுத்த முடியாது. ஆனால், அவர்களால் ஒரு பெரிய எருதின் காதுக்குள் நுழைந்துவிட முடியும். அதைத் தன் விருப்பத்திற்கேற்ப ஆட்டுவிக்க முடியும். அதற்குக் கோபத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி சேதம் விளைவிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏப்ரல் 21, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து, விகடன் இதழ் இவ்வாறு கருத்து சொல்லியுள்ளது.

தீவிரவாதம் என்னும் ஈக்களின் அதிகபட்ச ஆசையெல்லாம் மதம், மொழி போன்ற எருதுகளுக்குள் நுழைந்து நாடுகளைச் சிதைப்பதுதான். பயத்தை மனிதருக்குள் ஊடுருவச் செய்வதில் இருக்கிறது அவர்களுக்கான வெற்றி. இதைச் செய்தது இந்தத் தீவிரவாத அமைப்புதான் என உலகெங்கும் செய்தி பரவும்போது, அவற்றின் மீதான அச்சம் அதிகரிக்கிறது. மனிதர்களைக் கொல்லக்கூடிய மிக உயரிய உயிர்க்கொல்லி அச்சம். தீவிரவாதத்தின் பெரும் தோல்வி என்பது, அவர்களுக்குரிய முக்கியத்துவத்தைத் தராமல் இருப்பதுதான். இந்தக் கருத்து சிந்திக்க வேண்டிய ஒன்று. மனிதர்களைக் கொல்லக்கூடிய மிக உயரிய உயிர்க்கொல்லி அச்சம். இது எந்த வடிவில், யார் வழியாக வந்தாலும் துணிந்து எதிர்த்து நிற்க வேண்டும். அப்போதுதான் வாழ்வில் நிம்மதி பெற முடியும், வெற்றி பெற முடியும், மற்றும் சாதிக்க முடியும்.

கோமதி மாரிமுத்து

தமிழக தங்கப் பெண் கோமதி மாரிமுத்து (Gomathi Marimuthu) அவர்கள், கடந்த வார ஊடகங்களில் தலைப்பு செய்தியாக தலைநிமிர்ந்து நின்றார். கோமதி அவர்கள், திருச்சி மாவட்டம், முடிகண்டம் பகுதியைச் சார்ந்தவர். இந்திய தடகள வீராங்கனையான இவர், கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்ற 23வது ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார். முப்பது வயது நிரம்பிய கோமதி அவர்கள், சோதனைகளை நெஞ்சுரத்தால் எதிர்கொண்டு, சாதனை படைத்திருப்பவர் என்ற பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

சோதனைகளை நெஞ்சுரத்தால்..

2013ம் ஆண்டு முதல் பல்வேறு பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்ற கோமதி அவர்கள், தொடக்கத்தில் பல தோல்விகளைச் சந்தித்தாலும், மனம் தளரவில்லை. தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார். குடும்பத்தில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத கோமதி அவர்களின் தந்தை மாரிமுத்து அவர்கள், 2016ம் ஆண்டு, புற்றுநோயால் இயற்கை எய்தினார். அடுத்த சில மாதங்களில், கோமதி அவர்களுக்குப் பயிற்சிகள் அளித்து, ஊக்கத்துணையாக இருந்துவந்த பயிற்சியாளர் காந்தி அவர்களும், திடீர் மாரடைப்பால் இறந்தார். 2016ம் ஆண்டில், கோமதிக்கும் அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார். இத்தகைய சோதனைகள் அனைத்தையும், நெஞ்சுரத்தால் எதிர்கொண்ட கோமதி, இன்று சாதனை படைத்து இருக்கின்றார். ஊடகங்களிடம் தனது சாதனை குறித்துப் பேசிய கோமதி அவர்கள், “தனது அக்காமார்கள் படிக்கவில்லை, அவர்கள் கூலிவேலை செய்து எனது படிப்புக்கு உதவினர். அடுக்கடுக்கான துன்பங்களைக் கண்டு நான் மனம் தளர்ந்து விடவில்லை; என்னுடைய திறமையில் முழு நம்பிக்கை கொண்டு இருந்தேன்; என்னால் சாதிக்க முடியும் என உறுதியுடன் இருந்தேன்; அதன் விளைவே இந்த வெற்றி” என்று சொல்லியுள்ளார். வணிகயியலில் இளம்பட்டதாரியான இவர், பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரியாகவும் திகழ்கின்றார்.

இந்தியாவின் கண்ணாடிப் பெண்

பெங்களூருவைச் சார்ந்த தன்யா ரவி (Dhanya Ravi) அவர்கள், நடைவண்டி பழகவேண்டிய வயதில், சக்கர நாற்காலியில் அமரும் நிலையைப் பெற்றவர். “இதயம் கவர்ந்த இரும்பு மனுஷி” என்ற தலைப்பில், விகடன் இதழில் இவர் பற்றி ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. Osteogenesis Imperfecta அதாவது OI என்று சுருக்கமாகச் சொல்லப்படும் ஓர் அரிய நோயால், பிறவியிலே பாதிக்கப்பட்டிருப்பவர் தன்யா. உடையக்கூடிய எலும்பு நோய் (Brittle bone disease) என்ற மற்றொரு பெயரும் இதற்கு உள்ளது. குணமாக்க இயலாத இந்நோய், மரபியல் கோளாறு காரணமாக ஏற்படுகின்றது. தன்யா அவர்களுக்கு பிறக்கும்போதே இந்தப் பிரச்சனை. பிறந்த குழந்தையை அசையாமல் வைத்திருக்க வேண்டும், லேசாக நகர்ந்தாலும் எலும்பு உடையக்கூடிய ஆபத்து உள்ளது என, இவரது பெற்றோரிடம் மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். தற்போது 29 வயது நிரம்பிய தன்யா அவர்கள், கடந்த 28 ஆண்டுகளில், முன்னூறுக்கும் அதிகமான எலும்பு முறிவுகளால் துன்புற்றிருப்பவர். இந்தியாவின் “கண்ணாடிப் பெண்” என்ற புனைப்பெயருடன் இவர் அழைக்கப்படுகிறார். தனது நிலை பற்றிச் சொல்லும் தன்யா அவர்கள்….

குழந்தைப்பருவம் என்பது எல்லார் வாழ்விலும் மறக்கமுடியாத, முக்கியமான காலக்கட்டம். எனக்கும் அது மறக்க முடியாததாகத்தான் இருந்தது. இருந்தாலும், அம்மா அப்பா, உடன்பிறப்புகள், நண்பர்கள், உறவினர்கள் என எல்லாருடைய அன்பும் ஆதரவும் குறையாமல் கிடைத்தது. ஆரம்பத்தில் எலும்பு முறிவு ஏற்படும் போதெல்லாம் வலி பொறுக்க முடியாமல் அலறியிருக்கேன், அழுதிருக்கேன். நான் ஏன் அழறேன்னே தெரியாம என் பெற்றோர் தவிக்கிறது, இன்னும் வலிக்கும். குறிப்பாக எங்கம்மாவோட அழுகையைப் பார்க்க முடியாம, அவங்க முகத்தைப் பார்க்கிறதையே தவிர்த்திருக்கேன். வலியால நான் துடிக்கும் போதெல்லாம் எனக்கு வலியைக் குறைக்கும் மாத்திரையைக் கொடுக்கிறதைத் தவிர அவங்களுக்கு வேற வழியே இருந்ததில்லை. இந்தப் பிரச்சனை எனக்கிருக்கிறதா உறுதிசெய்யப்பட்ட நாள் முதல், இதுதான் வாழ்க்கைன்னு ஏத்துக்கப் பழகினேன். வாழ்நாள் முழுவதும் என்னால நடக்கவே முடியாது, சக்கர நாற்காலிதான் வாழ்க்கையின் நிரந்தரம் என புரிஞ்சுக்கிட்டேன். வீட்டுப்பள்ளி முறையில்தான் படிப்பை முடிச்சேன். அப்புறம் இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தில், preparatory programmeல் டிகிரி முடிச்சேன். பிறகு இணையதள புதினம் எழுதும்முறையில், சான்றிதழ் படிப்பு முடிச்சேன்’’  

இதயம் கவர்ந்த இரும்புப் பெண்

இவ்வாறு சொல்லும் தன்யா அவர்கள், தற்போது, தான் பாதிக்கப்பட்டுள்ள Osteogenesis Imperfecta நோயைப் பற்றிய விழிப்புணர்வைத் தனிப்பட்ட முறையிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும், முக்கிய வேலையாகச் செய்து வருகிறார். சமூக ஊடகங்களிலும், கிடைக்கும் மேடைகளிலும், தன் கதையைப் பகிர்ந்து வருகிறார். `மனித வாழ்க்கை மகத்தானது' என்று செய்தி சொல்கிறார். தன்யாவின் இந்த முயற்சிகளைப் பாராட்டி, அவருக்கு, இந்தியாவின் ‘Ministry of Social Justice and Empowerment’ சார்பாக `ரோல் மாடல் விருது' இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் ஒரு நொடிகூடச் சிரிப்பதற்கு மறப்பதில்லையாம். freelance content writing, digital marketing என மும்முரமாக இருப்பவர், கிடைக்கும் சிலமணி நேர ஓய்வையும் சேவையிலேயே செலவழிக்கிறார். இதே நோயுள்ள பினு என்ற சிறுவன் பற்றி அறிந்து, அவனது அறுவை சிகிச்சைக்கு நிதியுதவிக்கு இணையத்தில் விண்ணப்பித்திருந்தார் தன்யா. இப்போது பினு நன்றாக இருக்கிறார் என்று சொல்கிறார், தன்னலம் கருதாத தன்யா.

இன்னொரு தலைமுறை இதுபோன்ற பிரச்சனையால் பாதிக்கப்படக் கூடாது. அதைத் தடுப்பதும், நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான், என் பிறவிக்கு அர்த்தம் சேர்க்கும் என்று நம்புகிறேன். என் எலும்புகள் உடையலாம். ஆனால், நான் ஒருநாளும் உடைந்து போகமாட்டேன். வாழ்க்கை என்பது சவால்களும் போராட்டங்களும் பிரச்சனைகளும் நிறைந்ததுதான். அவற்றைப் பார்த்து வாழ்க்கையின் இலட்சியத்தை மறந்துவிடாதீர்கள். இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் ஏதாவது ஒரு விடயத்தைச் செய்ய முடியும். உங்களாலும் முடியும்’’ என்று சொல்கிறார் தன்யா. கண்ணாடிப் பெண் என்று அழைக்கப்படும் தன்யா அவர்களை, இரும்பு பெண் என்று அழைக்கலாம் என்று, விகடன் இதழில் சாஹா என்பவர் எழுதியிருக்கிறார். எனவே, வாழ்வில் அச்சம் தவிர்த்து உயர்ந்து நிற்போம், துணிந்து செல்வோம். கவலை கலக்கும்போது, காற்று நிரம்பிய பலூனாய் மாறாமல், வானைப் பிளந்து செல்லும் விண்கோளாக மாறுவோம். உள்ளே இருக்கும் உலகைத்தேடி, உலகை மணக்க வைக்கும் மலர்தோட்டமாவோம். 

வாரம் ஓர் அலசல்–அச்சம் என்ற உயிர்க்கொல்லியை அகற்ற...

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2019, 14:57