Vatican News
குழந்தைகளுக்கு விளையாட்டு கல்வி குழந்தைகளுக்கு விளையாட்டு கல்வி  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – கடந்தகால கசப்புகளை மறந்து...

கடந்தகால நினைவுகளைவிட எதிர்காலத்திற்காக எடுக்கின்ற முடிவு ஞானமிக்கது. நாம் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், கடந்த காலத்தை நம்மால் மாற்றவே முடியாது. பழையது எதையுமே இயற்கை, திருப்பித் தருவதில்லை

மேரி தெரேசா - வத்திக்கான்

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர், பெற்றோரின் தற்கொலையால் கால்களை இழந்த பெண் குழந்தை ஒன்று, தற்போது மாற்றுத்திறனாளர் நீச்சல் போட்டிகளில் தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றது. ஹேவன் (Haven) என்ற அந்தக் குழந்தைக்குச் சொந்த ஊர், வியட்நாம் நாட்டின் Phuong Twi Do என்பதாகும். இக்குழந்தையின் தாயும் தந்தையும் முறைப்படி திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே இவரைப் பெற்றெடுத்தனர். அதனால் அவர்களை சமுதாயம் ஏற்காது என அஞ்சி, குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர். அவர்கள் தங்களின் உடல்களில் குண்டுகளை கட்டிக்கொண்டு, குழந்தை ஹேவனையும் கையில் வைத்திருந்தனர். இந்தக் குண்டுவெடிப்பில் அவ்விருவரும் இறந்தனர். ஆனால் ஹேவனின் கால்களைச் சுற்றி அந்தக் குண்டுகள் வெடித்ததில், முழங்காலுக்குக் கீழே இரு கால்களையும், குழந்தை இழந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த 56 வயது நிரம்பிய ஷெல்லி மற்றும், 57 வயது நிரம்பிய ராப் ஷெப்பர்ட் (Rob Shepherd) தம்பதியர், 2005ம் ஆண்டில், ஹேவன் பற்றி, வீடற்ற சிறார்க்கென நடத்தும் Touch A Life அமைப்பு வழியாகக் கேள்விப்பட்டனர். அதோடு, இக்குழந்தையின் தாத்தா பாட்டிகள், குழந்தையை வளர்க்க இயலா ஏழ்மை நிலையில் இருந்ததையும் அவர்கள் அறிந்தனர். எனவே, தாங்கள் வாழ்ந்துவரும் மிசவுரி மாநிலத்தில் Carthage நகரிலிருந்து, 8,500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, வியட்நாமை அடைந்து, குழந்தை ஹேவனைத் தத்தெடுத்து அழைத்து வந்தனர். அப்போது ஹேவனின் வயது இருபது மாதங்கள். இந்த ஷெப்பர்ட் தம்பதியருக்கு ஏற்கனைவே இரு ஆண் பிள்ளைகளும், 4 பெண் பிள்ளைகளும் உள்ளனர். இந்த வியட்நாம் குழந்தை, ஹேவனை, ஏழாவது குழந்தையாக, தங்களின் ஷெப்பர்ட் குடும்பத்தில் ஏற்று, மிகவும் அன்போடு வளர்க்கத் தொடங்கினர்.

நீச்சல் வீராங்கணை ஹேவன் ஷெப்பர்ட்

தற்போது 14 வயதை எட்டியிருக்கும் ஹேவன் ஷெப்பர்ட் சொல்கிறார் - வியட்நாமில் வாழ்ந்த நாள்கள் எனக்குப் பெரிதாகத் நினைவில்லை. என்னைத் தத்தெடுத்த குடும்பத்தினர் நன்றாக கவனித்தனர். நான் நினைத்துப் பார்க்க முடியாத மகிழ்ச்சியை எனக்கு அளித்தனர் என்று. ஹேவன் வளர்ந்துவருகையில், உடன்வளர்ந்த சகோதரிகளுடன் ஆரம்பப் பள்ளிக்குச் சென்றார். அச்சமயத்தில் அவரின் தங்கை ஒருவர், நீ இப்படி உனக்காக பரிதாபப்பட்டுகொண்டு வெறுமனே பெஞ்சில் உட்கார்ந்து இருப்பதில் அர்த்தமில்லை. எனவே நீ விளையாட்டில் ஈடுபட வேண்டும் என ஆலோசனை சொன்னார். இதுவே தனக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தைத் தூண்டியதாக ஹேவனே சொல்லியுள்ளார். நீ செயற்கைக் கால்களைப் பொருத்த வேண்டும் என, என்னை தத்தெடுத்த குடும்பம் எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கும். எனது தந்தை ராப் அவர்களும், செயற்கை கால்கள் பொருத்தும் அமைப்பைத் தொடர்புகொண்டு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். அதன்பின்னர் ஹேவன், செயற்கை கால்களின் உதவியுடன் பந்தயங்களில் ஓடினார். முதலில் தோல்வியே கிடைத்தது. எனினும் மனம் தளரவில்லை. சிறப்பு காலணிகளை அணிந்துகொண்டு மீண்டும் விளையாட்டில் பங்கெடுத்தார். வெள்ளி பதக்கம் வென்றார். 12வது வயதிலிருந்து நீச்சல் விளையாட்டில் கவனம் செலுத்திவரும் ஹேவன் அவர்கள், உலக அளவில் நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதி பெற்றுள்ளார். 2020 அல்லது 2024ம் ஆண்டின் மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில், தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஹேவன்.   

ஹேவன் ஷெப்பர்டு அவர்கள் சொல்கிறார் – நான் வளர்ந்த வருகையில் எனது கால்களை இழந்தது பற்றி அறிந்தேன். இது மற்றவருக்கும் நடப்பதுபோன்று எனக்கும் நடந்துள்ளது எனத்தான் நினைத்தேன். ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல, எனது உணர்வு வித்தியாசமாக இருந்தது. இத்தகைய வாழ்வுக் கதையைக் கொண்டிருப்பவர் நான் ஒருவராகத்தான் இருக்க முடியும் என உணர்ந்தேன். இப்போதெல்லாம் மக்களுக்கு எனது உண்மை நிலை பற்றிச் சொல்கிறேன். எனது பெற்றோர்க்கிடையே ஏற்பட்ட உறவில் நான் பிறந்தேன். வியட்நாமில் பெண்கள் திருமணத்தை முறிக்க முடியாது. எனவே அவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆனால் எனது பெற்றோரின் தற்கொலை, எனது கால்களைப் பதம் பார்த்துவிட்டது. இதை ஏற்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனாலும் என்ன செய்வது, நடந்த செயல் பற்றிய உண்மையைச் சொல்லி வருகிறேன். எனது சிறு வயதில், நான் என் சகோதரிகளைவிட வித்தியாசமாக உள்ளேன் என்றார்கள். ஆனால் இப்போது, நான் ஏனையோரிலிருந்து சிறப்பான ஒருவராக உள்ளேன் என உணர்கிறேன். எனது வளர்ப்புக் குடும்பம் எப்போதும் எனக்கு ஆதரவாய் இருக்கிறது. எனது குறிக்கோளில், நான் ஒருநாளும் பின்வாங்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றது. என் செயற்கை கால்களை வைத்துக்கொண்டு உங்களால் நீந்த முடியாது என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால் என் செயற்கைக் கால்களை எடுத்துவிட்டு நீச்சல் கற்கத் துவங்கினேன். செயற்கை கால்கள் இல்லாத நேரத்தை மிகவும் நம்பிக்கையாக உணர்கிறேன். நான் இத்தாலிக்குச் சென்று, அமெரிக்கா சார்பாக, மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டேன். USA என்று போடப்பட்ட தொப்பியை அணிய எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்காவுக்காக டோக்கியோ சென்றது என் வாழ்வில் மறக்கமுடியாத தருணம்.

முன்னாள் சிறார் படைவீரர்Bertine Bahige

Bertine Bahige என்பவர், ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயக குடியரசின் கிழக்குப் பகுதியில் Mai Mai புரட்சியாளர்களிடம் ஈராண்டுகள் சிக்கியிருந்தவர். பின்னர் அவர் அங்கிருந்து தப்பித்து, வெகு தூரத்திலிருந்த மொசாம்பிக் நாட்டில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் புலம்பெயர்ந்தோர் முகாமில் தஞ்சம் புகுந்தார். Bahige அவர்கள், 13வது வயதில் குடும்பத்திலிருந்து புரட்சியாளர்களால் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு, சிறார் படைவீரராக ஆக்கப்பட்டார். 2004ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேரிலாண்டில் குடியமர்த்தப்பட்ட இவர், உணவகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அதேநேரம் கடின உழைப்பு மற்றும் அறிவைப் பயன்படுத்தி, பல்கலைக்கழக உதவித்தொகை பெற்று படித்து, தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். புலம்பெயர்ந்து வாழ்கின்ற சிறார்க்கு தன்னம்பிக்கையை ஊட்டி வருகிறார், Bertine Bahige.   

மாற்றுத்தினாளர் நீச்சல் வீராங்கணை ஹேவன் அவர்கள், கடந்த கால தன் வாழ்வின் மீதோ, தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய பெற்றோர் மீதோ சிறு கசப்புணர்வோ, வெறுப்போ இருப்பதாக ஒருபோதும் சொன்னதில்லை. அதேபோல், சிறார் படைப்பிரிவில் கட்டாயமாக இணைக்கப்பட்டு, பின்னர் பல இன்னல்களைச் சந்தித்து இன்று வாழ்வில் முன்னேறியிருக்கும் Bahige அவர்களும், தங்களது முந்தைய வாழ்வு பற்றிய புலம்பலோ, யார் மீதும் காழ்ப்புணர்வோ கொள்ளவிலை. இவர்கள், தங்களின் கடந்தகால கசப்பு அனுபவங்களை மறந்து வாழ்வில் முன்னேற முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

முன்னிருக்கும் பாதையை நோக்கி..

ஒருசமயம், தனது நினைவுத்திறனை இழந்துகொண்டிருந்த ஒருவர், சிகிச்சைக்காக மருத்துவரிடம் சென்றார். அவருக்குப் பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் அந்த மருத்துவர் அவரிடம், இன்னும் அதிகமாக நீங்கள் நினைவுத்திறனை இழந்துவிடாதபடி, அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த அறுவை சிகிச்சையினால், நீங்கள் உங்கள் கண்பார்வையை இழந்துவிடும் அபாயமும் உண்டு என்றும் கூறினார். அறுவை சிகிச்சை அல்லது கண்பார்வை, இவை இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும்படி அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டது. திரும்பிவந்த அந்த நபர் மருத்துவரிடம், “நான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறேன். எனது நினைவுகளைவிட எனது கண்பார்வை முக்கியமானதாகும். நான் எங்கே சென்றிருந்தேன் என்பதை நினைவில் வைத்திருப்பதைவிட, நான் எங்கே செல்லுகிறேன் என்பதைப் பார்க்கவே விரும்புகிறேன்” என்று கூறினார்

கடந்தவை கடந்தவைதான்

அந்த மனிதர், கடந்தகால நினைவுகளைவிட எதிர்காலத்திற்காக எடுத்த முடிவு ஞானமிக்கது. நம்மில் பலர், வாழ்வின் கடந்தகாலத் தோல்விகளையும், இழப்புகளையும், கசப்பு அனுபவங்களையும் மறந்துவிடாமல் நினைவில் வைத்து சுயபரிதாபத்திற்குள்ளாகி, வாழ்வை மேலும் மேலும் கசப்பானதாக்கி வருகிறோம். நாம் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், கடந்த காலத்தை நம்மால் மாற்றவே முடியாது. கடந்தவை கடந்தவைதான். அவை ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை. மனித வாழ்வில் எதுவுமே நிரந்தரமில்லை. ஓடும் நதி, பழைய நீரைக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு நிமிடமும் புது நீரை அது தருகின்றது. வீசும் தென்றல் பழைய காற்றை வீசுவதில்லை. இப்படி இயற்கை பழையதைத் திருப்பித் தருவதில்லை. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகத் தந்துகொண்டிருக்கின்றது. எனவே உண்மையிலேயே, வாழ்வில் நாம் சாதிக்க வேண்டுமெனில், உள்ளும் புறமும் நிம்மதியோடு வாழ வேண்டுமெனில், கடந்தகால கசப்புகளை உதறித் தள்ளுவோம். கடந்தகால கசப்பு அனுபவங்களை அசைபோடாமல் புதிய முயற்சிகள் பற்றி சிந்திப்போம். கடந்தகால வாழ்வு கற்றுத்தந்த நல்ல வாழ்க்கைப் பாடங்கள்வழி, முன்னேறுவதற்குரிய வழிகளில் நம்பிக்கையுடன் முயற்சிப்போம்.

இயேசுவின் சிலுவைப்பாடுகள், மரணம் பற்றி சிறப்பாகத் தியானிக்கும் இந்நாள்களில், நம்மைத் துன்புறுத்துவோர்க்காகச் செபிப்போம். புண்படுத்தியவர்களை மன்னிப்போம். எல்லாருடனும் சமாதானத்துடன் வாழ்வோம், புதிய மனிதர்களாக மாறுவோம்.   

08 April 2019, 15:55