பாகிஸ்தான் எல்லையிலுள்ள ஓர் இந்திய கிராமம் பாகிஸ்தான் எல்லையிலுள்ள ஓர் இந்திய கிராமம் 

பூமியில் புதுமை : சுத்தத்திற்கு பரிசு பெற்ற இந்திய கிராமம்

தெரியாமல் குப்பையைப் பொதுவெளியில் வெளியூர்க்காரர்கள் போட்டுவிட்டால், தயங்காமல் எடுத்துக் குப்பைத் தொட்டியில் கொட்டிவிடுகின்றனர். அதற்காக தண்டனை இல்லை. கேட்டால், ‘தூய்மை உணர்வை, தண்டனை கொடுத்து உருவாக்க முடியாது’ என்கிறார்கள் கிராம மக்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இருந்து 75 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மாவ்லின்னாங் கிராமம். ‘கடவுளின் தோட்டம்’ என்று பெயர்ப்பலகையே இக்கிராமத்தின் புகழ் பாடுகிறது.

ஆசியாவிலேயே தூய்மைக்கான முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்த கிராமம். மூங்கில் கூடைகளால் சேகரிக்கப்படும் வீட்டுக் குப்பைகள், மிகப்பெரிய குப்பைக் குழிகள் தோண்டப்பட்டு சேகரிக்கப்படுகின்றன. பிறகு, அவற்றைத் தரம் பிரித்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப்படுத்தி, விவசாயத்துக்கு உரம் தயாரிக்கின்றனர். பிளாஸ்டிக் பைகளுக்கு இங்கு தடை. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் கிராமமே இணைந்து மரக்கன்றுகளை நடுகிறது. அதேபோல், வெளியூர்க்காரர்கள் யாரேனும் தெரியாமல் குப்பையைப் பொதுவெளியில் கொட்டிவிட்டால், தயங்காமல் எடுத்துக் குப்பைத் தொட்டியில் கொட்டிவிடுகின்றனர். அதற்காக எந்தத் தண்டனையும் கிடையாது. கேட்டால், ‘தூய்மை உணர்வு முழுமனதுடன் வரவேண்டும். தண்டனை கொடுத்து அதை உருவாக்க முடியாது’ என்கிறார்கள் கிராம மக்கள். நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் துளி பாசியோ, குப்பையோ இல்லாமல் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். நடைபாதையின் இருபுறமும் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மாவ்லின்னாங் கிராமத்தில் சிமென்ட், கான்க்ரீட் வீடுகள் மிகக்குறைவு. பழைமை மாறாத மண்வீடுகளையும், மூங்கில் வீடுகளையுமே அதிகளவில் இக்கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். விவசாயம் இங்கு முக்கியத் தொழில். ஆரஞ்சும், எலுமிச்சையும், அன்னாசியும் துளிகூட இடைவெளிவிடாமல் வளர்ந்து படர்ந்து பார்ப்பவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

சுற்றுலா செல்ல முடிவெடுப்பவர்கள், தயங்காமல் மாவ்லின்னாங் சென்று வரலாம். ஊருக்குள் நுழையும்போதே சுத்தமான பராமரிப்பு பற்றிய அறிவுரை சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. கூடவே அன்பும், பரிவுமான பேச்சும், மொழி தெரியாவிட்டாலும் நம்மை அவர்களுடன் மனதளவில் இணைத்துவிடுகிறது.! (நன்றி : விகடன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2019, 14:51