பிரெய்ல் (Braille) எழுத்துக்களின் உதவிகொண்டு வாசிக்கும் இந்திய இளையோர் பிரெய்ல் (Braille) எழுத்துக்களின் உதவிகொண்டு வாசிக்கும் இந்திய இளையோர் 

சனவரி 04, பிரெய்ல் முதல் உலக நாள்

முழுவதும் பார்வையிழந்தவர்களைவிட, ஓரளவு பார்வைக்குறையுடன் வாழ்கின்றவர்கள், வறுமையிலும், வாய்ப்புகளின்றியும் அதிகம் துன்புறுகின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

உலகில் முழுவதும் பார்வையிழந்து அல்லது ஓரளவு பார்வைக்குறையுடன் வாழ்கின்ற ஏறத்தாழ 130 கோடி மக்களுக்கு, பிரெய்ல் (Braille) எழுத்துக்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக, ஐக்கிய நாடுகள் நிறுவனம், பிரெய்ல் முதல் உலக நாளை, சனவரி 4, இவ்வெள்ளியன்று கடைப்பிடித்தது.

இந்த உலக நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், மாற்றுத்திறன் கொண்டவர்கள், சமுதாயத்தில் ஒதுக்கப்படும் நிலைகள் மாற்றப்படுவதற்கும், அவர்களின் உரிமைகள் முழுவதும் மதிக்கப்படுவதற்கும்,  ஆவன செய்யுமாறு, உலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பார்வையிழந்தோரின் அடிப்படை சுதந்திரத்திற்கு முன்நிபந்தனையாக, அவர்களின் எழுத்து மொழி அமைந்துள்ளது என்பதை, உலகினர் எல்லாருக்கும் உணர்த்தும் நோக்கத்தில், கடந்த நவம்பரில், ஐ.நா. பொது அவை, இந்த பிரெய்ல் உலக நாளை உருவாக்கியது.

மேலும், உலக நலவாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முழுவதும் பார்வையிழந்தவர்களைவிட, ஓரளவு பார்வைக்குறையுடன் வாழ்கின்றவர்கள், வறுமையிலும், வாய்ப்புகளின்றியும் அதிகம் துன்புறுவதாகவும், இதனால் அவர்கள், வாழ்நாள் முழுவதும் சமத்துவமற்ற நிலையை எதிர்கொள்கின்றனர் எனவும் தெரியவருகிறது.

உலகில், மூன்று கோடியே தொண்ணூறு இலட்சம் பேர் முற்றிலும் பார்வையிழந்தோர் மற்றும் 25 கோடியே 30 இலட்சம் பேர் பார்வைக்குறையுடன் வாழ்பவர்கள். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2019, 14:54