அமெரிக்க ஐக்கிய நாட்டு தெரு ஒன்றில் அமெரிக்க ஐக்கிய நாட்டு தெரு ஒன்றில் 

வறுமை ஒழிப்பு உலக நாள் - ஐ.நா. பொதுச்செயலர் செய்தி

கடந்த 25 ஆண்டுகளில், உலகில், 100 கோடி மக்கள், வறுமையிலிருந்து வெளியேறியிருந்தாலும், 70 கோடிக்கும் மேற்பட்டோர், தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் வழியின்றி உள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வறுமை ஒழிப்பு உலக நாள் முதல் முறை கடைபிடிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவுறும் இவ்வேளையில், உலகில் 100 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேற அரசுகள், பன்னாட்டு அமைப்புக்களும் உதவி செய்துள்ளன என்று ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அக்டோபர் 17, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட வறுமை ஒழிப்பு உலக நாளையொட்டி செய்தி வெளியிட்ட கூட்டேரஸ் அவர்கள், இன்னும் இவ்வுலகில் 70 கோடிக்கும் மேற்பட்டோர், தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் வழியின்றி உள்ளனர் என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2030ம் ஆண்டுக்குள் அடையவேண்டிய இலக்குகளில், வறுமை ஒழிப்பு மிகப்பெரும் சவாலாக உலக அரசுகளுக்கு முன் உள்ளது என்பதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், வறுமையை ஒழிப்பதும், மக்கள் அனைவருக்கும் சம உரிமைகள் கிடைப்பதும் ஒன்றோடொன்று நெருங்கியத் தொடர்பு கொண்டுள்ளன என்று கூறியுள்ளார்.

உலகெங்கிலும் வறுமையை ஒழிப்பதற்கு, 1992ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, ஐ.நா. அவை நிறைவேற்றிய தீர்மானம், 1993ம் ஆண்டு முதல் முறையாக, அக்டோபர் 17ம் தேதி, வறுமை ஒழிப்பு நாளாக சிறப்பிக்கப்பட்டது என்பதும், இவ்வாண்டு இந்நாள், 25வது முறையாக சிறப்பிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன.

மனித உரிமைகள் அறிக்கை வெளியான 70ம் ஆண்டு நிறைவுறும் இவ்வாண்டில் சிறப்பிக்கபப்டும் வறுமை ஒழிப்பு நாளுக்கென, "மிகவும் பின்தங்கியவர்களையும் ஒன்றிணைக்கும் ஓர் உலகை உருவாக்க ஒன்றுபடுவோம்" என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2018, 16:07