விளையாட்டில் கூட கோபம் தலை தூக்கக் கூடாது விளையாட்டில் கூட கோபம் தலை தூக்கக் கூடாது 

இமயமாகும் இளமை : கோபத்தை தவிர்க்க மனதில் உறுதி

கோபத்திற்கு மனதில் இடம் அளிக்காதவரை, அதனால் ஒன்றுமே செய்ய இயலாது. கோபத்தை தவிர்ப்பதற்கு மனதில் உறுதியை வளர்த்துக்கொண்டால், வாழ்வு ஒளிமயமாகும்.

மேரி தெரேசா - வத்திக்கான்

ஒருவர் முன்கோபக்காரர். சிறிய சிறிய காரியங்களுக்கெல்லாம் கோபப்பட்டார். இதனால் பொறுமையிழந்த அவரது நண்பர்கள் ஒவ்வொருவராய் அவரைப் பிரிந்து சென்றனர். மற்றவரும், இவரைப் பார்த்ததும் விலகிச் சென்றனர். இந்த நிலையில் தனிமை அவரை வாட்டியது. அமைதியைத் தேடி ஓர் ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கு சில காலம் தங்கிவிட்டு ஊர் திரும்பினார். மனிதர், மிகவும் அமைதியாகக் காணப்பட்டார். யாராலும் இவரை கோபப்படுத்த முடியவில்லை. அவரிடம் ஏற்பட்டுள்ள இந்தப் பெரிய மாற்றத்தைக் கண்டு அக்கம்பக்கத்தார் வியந்தனர். ஒருநாள் ஒரு வயதானவர் அவரை அணுகி, தம்பி, உன்னிடம் இவ்வளவு பெரிய மாற்றத்தை நான் மட்டுமல்ல, இந்த ஊரில் எல்லாருமே பார்க்கிறோம், இது எப்படி சாத்தியமானது என்று கேட்டார். அதற்கு அவர் இவ்வாறு பதில் சொன்னார். நான் ஒவ்வொரு நாளும் காலையில் படுக்கையைவிட்டு எழும்போது, கடவுள் எனக்கு இந்த நல்ல நாளைக் கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறேன். இன்று எனக்கு முன்பாக இரண்டு விருப்பங்கள் உள்ளன. ஒன்று நான் கோபப்படலாம். மற்றொன்று நான் கோபப்படக் கூடாது. அதில் நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுப்பேன். அதையே நாள் முழுவதும் நான் சொல்லிக்கொண்டிருப்பேன். இன்று ஒருநாள் நான் கோபம் கொள்ளக்கூடாதென்பதில் உறுதி கொள்வேன். அதையே கடைப்பிடிப்பேன். என்ன பிரச்சனை நேர்ந்தாலும், இந்த ஒருநாளாவது கோபப்படக் கூடாது. நாளை ஒருவேளை கோபம் வரலாம். ஆனால் நிச்சயம் இன்று அது நடக்கக் கூடாது என்று பதில் சொன்னார் அந்த மனிதர்.(J.P.வாஸ்வானி)

இளையோரே, நான்தான் எனது கோபத்திற்கு பொறுப்பாளி என்பதை உணர்ந்து, அதற்கு உங்கள் மனதில் இடம் அளிக்காதவரை, அதனால் உங்களை ஒன்றுமே செய்ய முடியாது. கடுஞ்சொல் சினத்தை எழுப்பும். கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2018, 16:14