காந்திஜி அவர்களின் 150ம் ஆண்டு பிறந்தநாள் காந்திஜி அவர்களின் 150ம் ஆண்டு பிறந்தநாள் 

இமயமாகும் இளமை : எடுத்த செயலில் பின்வாங்கக் கூடாது

காந்திஜி அவர்களின் 150ம் ஆண்டு பிறந்தநாள், அக்டோபர் 2, வருகிற செவ்வாயன்று சிறப்பிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள், காந்திஜியின் உருவம் பதித்த இலச்சினையை வெளியிட்டுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான்

மகாத்மா காந்தி அவர்களும், ஜவஹர்லால் நேரு அவர்களும் நவகாளிப் பயணம் மேற்கொண்டபோது, வழியில் குறுக்கிட்ட சிறு கால்வாயைத் தாண்ட வேண்டியிருந்தது. நேருஜி அவர்கள், சற்று தூரம் பின்னால் சென்று, பிறகு ஓடிவந்து கால்வாயைத் தாண்டினார். ஆனால் காந்திஜி அவர்களோ, கால்வாயின் நடுவில் கிடந்த கல்லின் மீது கால்வைத்து, கவனமாகக் கால்வாயைக் கடந்தார். உடனே நேருஜி, காந்திஜியை நோக்கி, இந்தச் சிறிய கால்வாயைக்கூட உங்களால் தாண்ட முடியவில்லையே என்று கேலியாகக் கேட்டார். நான் நினைத்தால் தாண்டியிருப்பேன் என்று காந்திஜி பதிலளிக்க, அப்படியானால் ஏன் அவ்வாறு நிநைக்கவில்லை என விளையாட்டாகக் கேட்டார் நேருஜி. அதற்கு காந்திஜி அவர்கள், இந்த மூன்றடி அகலமான கால்வாயைத் தாண்ட நீங்கள் ஆறு அடி பின்வாங்கிச் சென்றீர்கள். நான் பின்வாங்கவில்லை. போர்க்களத்தில் பின்வாங்கலாமா என்று சொன்னபடி புன்முறுவல் பூத்தார்.

எடுத்த செயலில் பின்வாங்கக் கூடாது என்பதை உணர்த்திய காந்திஜி அவர்களின் 150ம் ஆண்டு பிறந்தநாள், அக்டோபர் 2, வருகிற செவ்வாயன்று சிறப்பிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள், காந்திஜியின் உருவம் பதித்த இலச்சினையை வெளியிட்டு, இணைய தளம் ஒன்றை தொடங்கி வைத்துள்ளார். அனைத்து இரயில்கள், மத்திய அரசு அலுவலகங்கள், மாநில பேருந்துகள், அரசு இணையதளங்கள், ஏர் இந்தியா விமானங்கள், அரசு நாட்காட்டி, டைரி, விளம்பரங்கள் போன்றவற்றில் இந்த இலச்சினை பயன்படுத்தப்படும் என்று குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2018, 14:57