'கப்'பைவிட 'காபி'யே முக்கியம் 'கப்'பைவிட 'காபி'யே முக்கியம் 

இமயமாகும் இளமை - கடவுள் வழங்கும் 'காபி'

"கோப்பைகளில் அதிக கவனம் செலுத்தி, 'காபி'யைச் சுவைக்கத் தவறுகிறோம். கடவுள் தருவது 'காபி'; கோப்பை அல்ல" - பேராசியரின் அறிவரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒரு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சிலர், தங்கள் பேராசிரியரைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில், அவ்விளையோர், தாங்கள் வாழ்வில் அடைந்துவரும் மன அழுத்தங்களைப்பற்றி புலம்ப ஆரம்பித்தனர்.

பேராசிரியர் வீட்டுக்குள் சென்று, அவர்களுக்கு 'காபி' தயாரித்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துவந்தார். கூடவே, ஒரு தட்டில் சில கோப்பைகளையும் கொணர்ந்தார். அவர் கொண்டுவந்த கோப்பைகளில், ஒரு சில, பார்ப்பதற்கு அழகாக, விலையுயர்ந்ததாகத் தெரிந்தன. வேறு சில கோப்பைகள், மிக எளிமையானதாக இருந்தன. இளையோர், ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டதும், பேராசிரியர், கோப்பைகளில் 'காபி'யை ஊற்றியவண்ணம் பேச ஆரம்பித்தார்:

"உங்கள் கரங்களில் இருக்கும் கோப்பைகளைப் பாருங்கள். அழகாக, விலையுயர்ந்ததாகத் தெரிந்த கோப்பைகளை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். சாதாரண கோப்பைகளை யாரும் தொடவில்லை. மிகவும் நல்லவற்றையே பெறவேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்கிறீர்கள். இதில் தவறு ஏதுமில்லை. ஆனால், அங்குதான் உங்கள் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன என்பதை நீங்கள் உணரவேண்டும்.

நீங்கள் வைத்திருக்கும் கோப்பை, அதில் ஊற்றப்படும் 'காபி'யின் சுவையை எவ்விதத்திலும் மாற்றப்போவதில்லை. சில வேளைகளில், விலையுயர்ந்த கோப்பைகள், உள்ளே இருப்பனவற்றை மறைக்கவும் செய்கின்றன.

நீங்கள் அனைவரும் பருக விரும்பியது, 'காபி'யை, கோப்பையை அல்ல. இருப்பினும், உங்களை அறியாமல், உங்கள் கவனம் கோப்பையின் மீது திரும்பியது. விலையுயர்ந்த கோப்பைகளைத் தேடிச் சென்றீர்கள். உங்கள் நண்பர்கள் எடுத்த கோப்பையையும் ஓரக்கண்களால் பார்த்தீர்கள்.

இங்கு நடந்ததை, வாழ்வுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். வாழ்வு என்பது 'காபி'. உங்கள் வேலை, நீங்கள் வாங்கும் சம்பளம், சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து, ஆகியவை, கோப்பைகள். வாழ்வு என்ற 'காபி'யைத் தாங்கி நிற்கும் கோப்பைகள். கோப்பைகளில் அதிக கவனம் செலுத்தி, 'காபி'யைச் சுவைக்கத் தவறுகிறோம். கடவுள் தருவது 'காபி'; கோப்பை அல்ல" என்று பேராசியர் கூறி முடித்தபோது, இளையோர் ஆழ்ந்த அமைதியில் மூழ்கினர்.

வாழ்வில் மிகச் சிறந்தவற்றைப் பெறுவதால், ஒருவர் மகிழ்ச்சி அடைவதில்லை. பெற்றதை, மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவோரே, மகிழ்வுடன் வாழ்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2018, 14:54