உதவும் கரங்கள் உதவும் கரங்கள் 

வாரம் ஓர் அலசல் - ஓய்வில்லாச் சேவைகள்

இயலாதவர்களுக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் அளிப்பதுதான், இறைவனுக்கு கொடுக்கும் மிகப் பெரிய காணிக்கை.

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இயலாதவர்களுக்கு உதவி

கங்கை நதியில் ஒரு செம்பில் புனித நீரை எடுத்து, அதைத் தங்கள் ஊர் கோவிலில் இறைவனுக்கு அபிசேகம் செய்ய விரும்பிய குரு, சீடன் கதை நமக்குத் தெரியும். ஒருநாள், அந்தக் குருவும், அவரது சீடரும், புனித நீரை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பியவேளை, இரவாகி விட்டதால் வழியிலிருந்த ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். காலையில் எழுந்து ஊருக்குச் சென்று, கங்கை நீரை இறைவனுக்கு அபிசேகம் செய்ய வேண்டுமென்பது அவர்களின் திட்டம். அங்கு அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது முணகல் சத்தம் கேட்டது. அது என்னவென்று பார்த்து வருவதற்காக சீடர் எழுந்து சென்றார். அங்கே ஒரு கழுதை உடல்நலம் சரியில்லாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. நாக்கு வறண்டு தண்ணீருக்காகத் தவித்துக்கொண்டிருந்த அந்தக் கழுதையால் எழுந்து நடக்கக்கூட முடியவில்லை. அதைப் பார்த்து பதைப்பதைத்துப்போன அந்தச் சீடர், குடுகுடுவென ஓடிச்சென்று,  இறைவனுக்குப் பூஜை செய்வதற்காக எடுத்து வந்திருந்த அந்த நீரை கழுதைக்கு கொடுத்துவிட்டார். காலையில் எழுந்த குரு, செம்பில் கங்கை நீர் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இறைவனுக்காகக் கொண்டுவந்திருந்த நீரை, கேவலம், இப்படி கழுதைக்கு கொடுத்துவிட்டானே எனச் சாடினார். செய்வதறியாமல் திகைத்து நின்றார் சீடர்.  வேறு வழியில்லாமல் சொந்த ஊருக்கே இருவரும் திரும்பி வந்துவிட்டார்கள். குருவுக்கு மனம் அமைதிப்படவே இல்லை. இறைவனுக்காகக் கொண்டுவந்திருந்த புனித நீரை, கேவலம், கழுதைக்கு கொடுத்துவிட்டானே என வருந்தினார் குரு. மறுநாள் இறைவன் குருவுக்கு கனவில் தோன்றினார். இறைவா, உமக்காகக் கொண்டுவந்திருந்த அந்தப் புனித நீரை உன்னிடம் கொண்டுவந்து சேர்க்க முடியாத பாவியாகி விட்டேன், என்னை மன்னித்துவிடு என்று கண்ணீரோடு மன்றாடினார். அப்போது இறைவன், குருவிடம், அந்த நீர் ஏற்கனவே என்னிடம் வந்துவிட்டது. இயலாத ஒரு கழுதையைப் பார்த்து, அந்த நீரைக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் எப்பொழுது உன் சீடன் மனதில் உதித்ததோ, அப்போதே அந்த நீர் என் திருவடிகளை வந்து சேர்ந்துவிட்டது என்றார்.

இறைவனுக்கு வழங்க விரும்புகின்ற பொன்னும் பொருளும் இறைவனை நேரடியாகச் சென்று சேரவேண்டுமென்றால், அவற்றை இயலாதவர்களுக்கும் தேவையில் இருப்பவர்களுக்கும் கொடுப்பதே சிறந்தது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். இந்த உலகத்தை இறைவன் அத்தனை பேருக்காகவும் படைத்திருக்கிறார். இந்த உலகில் இருக்கின்ற செல்வமும், பொருளும், இயற்கையும், அத்தனையும், அனைவருக்கும் உரியவை. செலவு செய்யப்படாத பணமும், செலுத்தப்படாத அன்பும், இருந்தாலும் இல்லாததற்குத்தான் சமம். புனித பெரிய பேசில் அவர்கள் சொன்னார் - மரம் கனியால் அறியப்படுவது போல, ஒருவர் அவருடைய செயல்களால் அறியப்படுவார். மரியாதை காட்டுபவர் நட்பை பெறுவார். அன்பைப் பயிரிடுபவர் அன்பை அறுவடை செய்வர். எதுவும் வீணாவதில்லை என்று. தமிழில், பசிலியார் என நாம் அழைக்கும் இப்புனிதர், பஞ்ச காலத்தில், தனது சொத்துக்கள் அனைத்தையும், உணவு, உடை இல்லாமல் வாடிய மக்களுக்காகச் செலவிட்டவர்.

உலகில் செல்வந்தர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரிக்க, மறுபக்கம், இயலாதவர்கள், தேவையில் இருப்பவர்கள் போன்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டின் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 119 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இல்லாதவர்கள், இயலாதவர்களின் எண்ணிக்கையை, வறட்சியும், வறுமையும், போர்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதேநேரம் ஓய்வில்லா மனிதாபிமானச் சேவைகளும் வளர்ந்து வருகின்றன. ஜப்பானில் வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றிய இளைஞர் போன்று, பல உள்ளங்கள் இயலாதவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

பாலக்குறிச்சி கந்தசாமி அவர்களின் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், பாலக்குறிச்சி கிராமத்தில் வாழ்கின்ற, 32 வயது நிரம்பிய கந்தசாமி என்பவர், நாமெல்லாம் நண்பர்களோடு எங்கெங்கோ போய்ச் சுற்றிப் பார்க்கிறோம். ஆனால், நம் கிராமத்தில் எப்பொழுதும் மூலையில் உட்கார்ந்திருக்கிற முதியவர்களை எங்கேயாவது வெளியூருக்குக் கூட்டிக்கொண்டு போவோமே என்று ஒருநாள் சிந்தித்தார். தன் விருப்பத்தைச் செயல்படுத்த, கையில் போதுமான பணம் அவரிடம் இல்லை. ஆயினும், நண்பர்கள் உதவியோடு, தன் கிராமத்தில் உள்ள முதியவர்களை, சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறார் கந்தசாமி. அதை 2012ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து செய்து வருகிறார்.  இந்தச் சேவை பற்றி கந்தசாமி அவர்கள் இவ்வாறு சொல்லியிருக்கிறார். சுற்றுலாவுக்கு ஏதோ பத்துப் பேர் வருவார்கள் என நினைத்தேன். ஆனால், முதலில் அறுபது பேர் வந்தார்கள். எல்லார் வீடுகளிலும் அனுமதி வாங்கிக்கொண்டு, முதன்முறையாகத் திருச்செந்தூருக்குக் கூட்டிக்கொண்டு போனோம். `நான் பொறந்ததுல இருந்து இப்பதான் மொதமுறையா கடலைப் பார்க்குறேன் தம்பி’என 70 வயது நிறைந்த பாட்டி அழுததை என்னால மறக்கவே முடியாது. பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் மட்டும் கலந்துகொண்ட சுற்றுலாவில், அடுத்தடுத்து அக்கம்பக்கத்து ஊர்களில் உள்ளவர்களும் பங்கேற்க ஆரம்பித்திருக்கிறார்கள். கன்னியாகுமரிக்குச் சுற்றுலா சென்றபோது, குடும்பத் தகராறால் பல ஆண்டுக்காலம் பேசாமல் இருந்த அண்ணனும் தங்கையும் அங்கே பேசிக் கண்ணீர் சிந்திய காட்சி நெகிழ வைத்தது. இப்படி பல தருணங்களைச் சுற்றுலா சாத்தியப்படுத்தியுள்ளது. நான் பத்தாவது படிக்கும்போது, என் அம்மா திடீரென உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்கள். நான் சம்பாதித்து எங்கம்மாவை நிறைய இடங்களுக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என சிறிய வயதில் சொல்லிக்கொண்டே இருப்பேன். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. இப்போது என் அம்மா இதையெல்லாம் பார்த்து, என்னை வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்கள்..

கந்தசாமி அவர்கள், தன் நண்பர்களோடு அழைத்துக்கொண்டு போகும் முதியவர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல, குடும்பமாக வாழ்பவர்கள்தாம். ஆனால், மனரீதியாகத் தனிமைப்படுத்தப்படுகிறவர்கள். என்றாவது ஒருநாள் வெளியுலகத்தைப் பார்ப்போமா! என ஏங்கித் தவிக்கிறவர்கள். அவர்களோடுதான் பயணிக்கிறார் கந்தசாமி. மதுரை, கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் எனப் பல ஊர்களுக்கு அழைத்துச்சென்று வந்திருக்கிறார். இந்த ஆண்டு, வரும் ஆகஸ்டில், நாகூர் தர்கா, வேளாங்கன்னி, கும்பகோணம் கோயில்கள் என, அழைத்துச்செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார் என விகடன் இதழில் செய்தி இருந்தது. பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள கந்தசாமி அவர்கள், தற்போது. சிறிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டே சுற்றுலாக்களை ஒருங்கிணைக்கிறார். இதற்காக மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையைச் சேமித்து வைக்கிறார். அவரின் நண்பர்கள் சிலரின் உதவியால், வருடம் ஓரிருமுறை இந்தச் சுற்றுலா சாத்தியமாகிறது.

கோவை தம்பதியரின் கல்விச் சேவை

யாம் பெற்ற கல்வியை, ஏதேனும் ஒரு வழியில், ஏழை குழந்தைகளுக்கு பயன்பெறச் செய்வதைக் காட்டிலும், வேறென்ன புண்ணியம் இருந்துவிடப் போகிறது (பாரதியார்) என்பதற்கேற்ப, கோவையில், தபால்துறையின் பல கிளைகளில், நாற்பது ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, எழுபது வயது நிரம்பிய சுதாகர் மற்றும் 62 வயது நிரம்பிய இலட்சுமி தம்பதியர், ஆனைக்கட்டி அருகே உள்ள வடக்கலுார் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கல்விச் சேவை புரிந்து வருகின்றனர். இத்தம்பதியர், வடக்கலுார் கிராமத்திலுள்ள அவர்களின் தோட்டத்துக்கு அடிக்கடி சென்றுவந்தபோது, அப்பகுதியில் வாழும் மலைவாழ் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவி செய்யலாம் என நினைத்துள்ளனர். இதனைச் செயல்படுத்தும் விதமாக, அச்சிறார்க்காக, இவர்களது தோட்டத்துக்குள் வகுப்பறை கட்டி, சனி, ஞாயிறுகளில் பாடம் நடத்தி வருகின்றனர். அச்சிறாருக்குத் தேவையான பாடப்புத்தங்கள், இதர உதவித்தொகை போக, இவர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஆங்கிலத்தில் பேசுவதற்கும், கணக்கு பாடங்களையும், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக கற்றுக்கொடுத்து வருகின்றனர். மேலும், கல்வி என்பது அனைவருக்குமான உரிமை. இதை மலைவாழ் மக்களும் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகவே, அச்சிறாரின் கல்விச்செலவையும் ஏற்றுள்ளோம். ஒழுக்கம், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்று நடுதல் பற்றிய நல்ல பழக்க வழக்கங்களையும், இயற்கை சார்ந்த வாழ்வியலையும் சொல்லித்தருகிறோம் என்கின்றனர், கோவை சுதாகர் இலட்சுமி தம்பதியர்.

“உதவி தேவைப்படும் இடத்தில் இரு” என்ற கொள்கையோடு செயல்படும் உள்ளங்களுக்கு, உலகெங்கும் பஞ்சமே கிடையாது. வாழ்க்கை என்பது, என்றென்றும் தெளிந்த நீரோடை போன்றது. இந்த வாழ்வில், உயர்ந்த சிந்தனையை செயலாக மாற்றி, இயலாதவர்களின் வாழ்வைக் குளிர வைப்போம். ஓய்வின்றி சேவையாற்றுபவர்களை வாழ்த்துவோம்.

ஓய்வில்லாச் சேவைகள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2018, 15:46