தாய்லாந்தில் காப்பாற்றப்பட்ட சிறார் புத்த துறவிகளிடம் ஆசிர் பெறுகின்றனர் தாய்லாந்தில் காப்பாற்றப்பட்ட சிறார் புத்த துறவிகளிடம் ஆசிர் பெறுகின்றனர் 

இமயமாகும் இளமை : சிறுவர்களைக் காப்பாற்றிய தியானம்

தாய்லாந்தில் குகையில் சிக்கிய சிறார் அனைவரும் ஜூலை 8,9,10 ஆகிய மூன்று நாள்களில் மீட்கப்பட்டது, பெரும் புதுமை என்று பேசப்படுகிறது

லூயிஸ் ஜெரோம் – வத்திக்கான் செய்திகள்

10 முதல் 16 வயது நிறைந்த 12 சிறுவர்களும், அவர்களது வழிகாட்டியான Ekaphol Chantawong அவர்களும், தாய்லாந்து நாட்டின் Tham Luang குகையில் 16 நாட்களாக அடைபட்டிருந்த நிகழ்வு, உலகெங்கும் பரவிய ஒரு செய்தி. அச்சிறுவர்கள் அனைவரும் நல்ல உடல், மன நலத்துடன் அக்குகையைவிட்டு வெளியேறியதை, அதைவிட பெரிய புதுமையாகக் கருதவேண்டும்.

ஜூன் 23ம் தேதி இந்த குகைக்குள் சிக்கிக்கொண்ட இச்சிறுவர்களும், வழிகாட்டியும், 9 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். அந்த 9 நாட்களும், அந்தக் குகையில், இருளில், குளிரில், உணவு ஏதுமின்றி, அச்சிறுவர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பது, பெரும் புதுமையே. இயல்பாகவே, சிறுவர்கள் என்றால் துடிப்பு நிறைந்தவர்கள் என்பதை அறிவோம். அதிலும், குகைக்குள் சென்ற சிறுவர்கள், ஒரு கால்பந்தாட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள். துடிப்பும், துறுதுறுப்பும் நிறைந்த அச்சிறுவர்கள், ஒன்பது நாட்கள், அதாவது, 216 மணி நேரங்கள், 12,960 நிமிடங்கள், வெளி உலகுடன் எவ்விதத் தொடர்பும் இன்றி, இருளில், குளிரில், பசியுடன் வாழ்ந்தனர் என்பது, எண்ணிப்பார்க்க இயலாத ஒரு சூழல். இதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்களது வழிகாட்டி Chantawong அவர்கள் சொல்லித்தந்த தியான பயிற்சிகளே! உடலை அதிகமாக செயல்படுத்தாமல், அச்சிறுவர்கள் தியான முயற்சிகளில் ஈடுபட்டால், அவர்களால் உடல் சக்தியைக் காப்பாற்றமுடியும் என்றும், குளிரும், இருளும், பசியும் அதிகமாகப் பாதிக்காது என்றும் Chantawong அவர்கள் சொல்லித்தந்தது, அச்சிறுவர்களைக் காப்பாற்றியது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2018, 15:22