சமூக வாழ்வின் முதல் பள்ளிக்கூடம் குடும்பம் - பேராயர் காச்சா
மெரினா ராஜ் – வத்திக்கான்
பெற்றோர் கல்விக்கு முதன்மையளிக்க மாநிலங்கள் உறுதியளிக்க வேண்டும் என்றும், சமூக வாழ்வின் முதல் பள்ளிக்கூடம் மற்றும் சமூகத்தின் அடிப்படைக் கலமான குடும்பத்திற்குப் போதிய ஆதரவையும் உதவியையும் அளிக்க வேண்டும் என்றும், வலியுறுத்தியுள்ளார் பேராயர் கபிரியேலே காச்சா.
அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத் துவக்கத்தில், “மனித மாண்பை சீரழிக்கும் வறுமையின் தீய வட்டத்தை உடைக்க அடிப்படைக்கல்வி“ என்ற தலைப்பில் நியூயார்க்கில் நடைபெற்றக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் கபிரியேலே காச்சா.
வறுமையை ஒழிக்க வேண்டும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று பன்னாட்டு சமூகத்திற்கு அழைப்புவிடுத்த பேராயர் காச்சா அவர்கள், கல்வித் துறையில், பெற்றோரின் பங்கு ஈடுசெய்ய முடியாதது மற்றும் தவிர்க்க முடியாதது என்றும், "அதை மற்றவர்களால் முழுமையாக அளிக்கவோ அல்லது அபகரிக்கவோ முடியாது என்றும் கூறியுள்ளார்.
"நிலையான வளர்ச்சிக்கான அடிப்படை காரணி கல்வி என்று வலியுறுத்தியுள்ள பேராயர் காச்சா அவர்கள், ஒவ்வொரு மனிதனும் முழுமையாக பங்கேற்கத் தேவையான சமூகத்திறன்களைப் பெற கல்வி அனுமதிக்கிறது என்றும் கல்வியில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார்.
பெற்றோர் ஆரம்பக் கல்வியாளர்கள்
முதன்மைக் கல்வியாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் மனித வாழ்க்கையின் உடல், மனம், ஆன்மிகம், சமூகம் என அனைத்து பரிமாணங்களிலும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், போதுமான மற்றும் விரிவான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதற்கும், உரிமையும் பொறுப்பும் உள்ளது என்று வலியுறுத்தியுள்ள பேராயர் காச்சா அவர்கள், மாநிலங்கள் மற்றும் அதிலுள்ள அதிகாரிகளுக்கு இந்த உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கவும், அதன் நடைமுறைக்குத் தேவையான உறுதியான நிலைமைகளை உறுதிப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனித மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் வறுமை
கல்வி இல்லாதபோது, மனித, மற்றும் சமூக வளர்ச்சிக்குத் தேவையான கருவிகள் இல்லை, அதே போல் வறுமையின் தீய வட்டத்தை உடைக்க தேவையான சூழ்நிலைகளும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள பேராயர் காச்சா அவர்கள், "வறுமை மனித மாண்பிற்கு அவமானம் மற்றும் களங்கத்தை விளைவிக்கும் என்றும், "நிதி வளங்களின் பற்றாக்குறை" மட்டுமல்லாது கல்வி, வீட்டுவசதி, மின்சாரம், குடிநீர் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட முதன்மைத் தேவைகளின் பற்றாக்குறையையும் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
"2030 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் வறுமையை ஒழிப்பதற்குத் தேவையான முன்னேற்றம் ஏற்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ள பேராயர் காச்சா அவர்கள், மனிதரை மையமாகக் கொண்ட மற்றும் பொது நலனை நோக்கிய ஒரு வளர்ச்சி மாதிரியை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்