அக்டோபர் 25, இறைமக்களுக்கான கடிதம் வெளியிடப்படும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
தற்போது வத்திக்கன் நகரில் இடம்பெற்றுவரும் உலக ஆயர் மாமன்றத்திலிருந்து இறைமக்களுக்கான கடிதம், அக்டோபர் 25, வரும் புதன்கிழமையன்று வெளியிடப்படும் என்றும், ஆயர் மாமன்ற நிகழ்வுகள் குறித்த ஒரு தொகுப்பு சனிக்கிழமையன்று வெளியிடப்படும் எனவும் பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறினார் திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் தலைவர் முனைவர் பவுலோ ரூபினி.
இறைமக்களுக்கான கடிதத்தின் முன்படிவம் ஆயர் மாமன்றக் கூட்டத்தில் திங்களன்று வாசிக்கப்பட்டபோது அது கைதட்டலுடன் வரவேற்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கொருவர் ஒன்றிணைப்பில் விசுவாசம், எதிர்நோக்கு மற்றும் பிறரன்பு குறித்து உரையாற்றிய வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn அவர்கள், முந்தைய ஆயர் மாமன்றங்களில் தன் அனுபவங்கள் குறித்தும், கிறிஸ்தவத்தின் மையம் ஐரோப்பா என்ற நிலைப்பாடு இழக்கப்பட்டுவருவது குறித்தும் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்து நடைபோடுதலின் தொடர்ச்சி குறித்து உரையாற்றிய மெக்சிகோ கர்தினால் Aguiar Retes அவர்கள், புதிய தலைமுறைகளுக்கும் குடும்பங்களுக்கும் இடையே நிலவும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தார்.
அதேவேளை, Marseille பேராயர், கர்தினால் Jean-Marc Aveline அவர்களோ, செவிமடுத்தல், மௌனம் காத்தல், இறைவேண்டல் மற்றும் சுதந்திரம் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
கன்னியர் சபை ஒன்றின் தலைமை சகோதரியும், உரோம் கிரகோரியன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான அருள்சகோதரி Samuela Maria Rigon அவர்கள், அனைவருக்கும் உகந்ததாக இவ்வுலகை மாற்ற நம்மால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து உரையாற்றினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்