உரோமில் வாழும் ஏழைமக்களுக்கு இலவச பல் சிகிச்சை
மெரினா ராஜ் – வத்திக்கான்
வத்திக்கான் தொண்டுப்பணிகளுக்கான திருப்பீடத்துறையானது, உரோம் மருந்தகம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உரோமில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச பல்சிகிச்சை வழங்குவதற்காக ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
அண்மையில் செய்யப்பட்ட இவ்வொப்பந்தத்தின்படி உரோமில் உள்ள யுனிகமிலஸ் பல்கலைக்கழகம், அன்னை மரியா மருந்தகம் ஆகியவற்றுடன் இணைந்து இச்சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த பல்சிகிச்சை முகாமானது செப்டம்பர் மாதத்தில் துவங்க உள்ள நிலையில் சாந்தா மார்த்தா மருந்தகத்தில் ஏழைகளுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உணவு, மருந்து போன்றவற்றின் கூடுதல் சேவையாக செயல்பட உள்ளது என்றும் அறிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முயற்சியினால் தொடங்கப்பட்டு இரக்கத்தின் அன்னை என்ற பெயரில் செயல்பட்டு வரும் தொண்டுப்பணிகளுக்கான இவ்வமைப்பு வத்திக்கானின் தொண்டுப்பணிகளுக்கான திருப்பீடத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
அறுபது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற தன்னார்வத் தொண்டர்கள் கொண்டு செயல்படும் இவ்வமைப்பினால், ஒவ்வொரு ஆண்டும் 6,000 பேருக்கு மேல் இலவச மருத்துவ சேவையைப் பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 19 அன்று கொண்டாடப்படும் உலக ஏழைகள் தினத்தின் கருப்பொருளான "ஏழைகள் எவரிடமிருந்தும் உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே" என்ற திருத்தந்தையின் செய்திக்கு இணங்க, ஏழைகள் மீது அக்கறை காட்டவும் நமது உடன் சகோதர சகோதரிகளின் உறுதியான தேவைகளை பூர்த்தி செய்யவும் இத்தொண்டுப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்