விளையாட்டு வீரர்களுடன் திருத்தந்தை விளையாட்டு வீரர்களுடன் திருத்தந்தை  

"அனைவருக்கும் விளையாட்டு" அனைத்துலக உச்சி மாநாடு

செப்டம்பர் 29. 30 ஆகிய தேதிகளில் வத்திக்கானில் நடைபெறும் அனைவருக்கும் விளையாட்டு என்னும் மாநாடு, ஒருங்கிணைக்கப்பட்ட, அணுகக்கூடிய, பொருத்தமான விளையாட்டு என்னும் கருத்துக்களின்கீழ் நடைபெற இருக்கின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மொழி, இலக்கியம், பாரம்பரியம், கலாச்சாரம் போன்று விளையாட்டும் விலைமதிப்பற்ற சொத்து எனவும், அது பாதிக்கப்படாதவாறு பாதுகாக்கப்படவேண்டும் எனவும், அனைவருக்கும் விளையாட்டு என்னும் கருத்தில் நடைபெற இருக்கும் அனைத்துலக உச்சிமாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பேரருள்திரு Melchor Sanchez de Toca 

செப்டம்பர் 29, இவ்வியாழன், 30 வெள்ளி ஆகிய இரு நாள்களில் வத்திக்கானின் உலக ஆயர்கள் மாமன்றத்தின் புதிய அறையில் நடைபெற இருக்கும் அனைவருக்கும் விளையாட்டு என்னும் அனைத்துலக உச்சி மாநாடு குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்த, கல்வி மற்றும் கலாச்சார பேராயத்தின் இயக்குனரான பேரருள்திரு Melchor Sanchez de Toca அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

வெற்றியின் மகிழ்ச்சி, தோல்வியின் அனுபவம், பணிவு, விவேகம், குழுவாக இணைந்து செயல்படுவதால் கிடைக்கும் நட்புறவு போன்றவைகள் விளையாட்டினால் கிடைப்பதால், விளையாட்டுக்கள் அனைவருக்கும் கிடைக்க வழிசெய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் பேரருள்திரு. Melchor

மேலும், இச்செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் செயலர் அருள்பணி Alexandre Awi Mello, அவர்கள், ஒருங்கிணைக்கப்பட்ட விளையாட்டுக்கள் அனைவரையும் ஒரு சமூகமாக இணைத்து நட்புறவை வளர்ப்பதால், இவை வழியாக சிறந்த உலகை நம்மால் உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இம்மாநாடு நடைபெறும் முறை

1."ஒருங்கிணைக்கப்பட்ட, அணுகக்கூடிய, பொருத்தமான விளையாட்டுக்கள் ஒவ்வொருவருக்கும்" என்ற கருத்தில் நடைபெற இருக்கும் மாநாடு குறித்து விளையாட்டு நிறுவனங்களைச் சார்ந்த மிக முக்கியமான நபர்கள் பேச இருக்கிறார்கள் எனவும்,

2. குழுக்களாகப் பிரிந்து கருத்துக்களைப் பகிர்வதன் வழியாக பல்வேறு கேள்விகளுக்கு பதிலும், பன்னாட்டு நிறுவனங்கள், காரித்தாஸ், யுனெஸ்கோ, சிறப்பு ஒலிம்பிக் போன்ற அமைப்புக்களால் பல முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படவும், விளையாட்டு வீரர்களின் கருத்துக்களும் இடம்பெற இருக்கின்றன எனவும்,

3. இத்தாலியம், ஆங்கிலம், இஸ்பானியம் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் பத்து பணிக் குழுக்கள் பிரிக்கப்பட்டு விவாதிக்கப்பட இருக்கின்றன எனவும்,

4. இக்கருத்தரங்கில் பங்குகொள்வோருக்கு, செப்டம்பர் 30, இவ்வெள்ளி காலையில் திருநற்கருணை ஆராதனையோடுகூடிய திருப்பலியும், மாலையில் வத்திக்கான அருங்காட்சியகத்தில் கலாச்சாரத்திற்கு நன்மைதரும் விளையாட்டு குறித்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், தெரிவித்துள்ளார் பேரருள்திரு Melchor

வருகிற வெள்ளியன்று வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னிலையில் இம்மாநாட்டின் இறுதி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டு வெளியிடப்பட  இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2022, 14:08