அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தத்திற்கு திருப்பீடத்தின் ஆதரவு
மேரி தெரேசா: வத்திக்கான்
அணுப் பரிசோதனை தடை புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தன் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை, அணுப் பரிசோதனைகளால் ஏற்பட்ட அணுக்கதிர்வீச்சுக்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுமாறு உலக நாடுகளை விண்ணப்பித்துள்ளது திருப்பீடம்.
நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற “அணுப் பரிசோதனை தடை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நண்பர்கள்” (CTBT) அமைப்பின் பத்தாவது உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அணுப் பரிசோதனைகளால் மாசடைந்துள்ள இடங்களைச் சரிசெய்வதற்கு, நடவடிக்கை எடுப்பதற்கு உலக நாடுகளை ஊக்கப்படுத்தியுள்ளார்.
அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் இக்காலக்கட்டத்தில், அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான தன் நிலைப்பாட்டில் உறுதியாய் இருக்கும் திருப்பீடம், ஐ.நா.வின் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்திற்கு தன் ஆதரவையும் வெளிப்படுத்துகின்றது எனவும் கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.
அணுப் பரிசோதனைகளால் உலகெங்கும் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது என்றும், இப்பரிசோதனைகளால் வெளியான அணுக்கதிர்வீச்சுக்கள், பெண்கள், சிறுமிகள், மற்றும், கருவில் வளரும் குழந்தைகள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்றும் கூறியுள்ளார், கர்தினால் பரோலின்.
இந்த தடை ஒப்பந்தம் நாடுகளின் கையெழுத்துக்கு விடப்பட்டு 26 ஆண்டுகள் ஆகியுள்ளன என்றும், இவ்வொப்பந்தம், அணு ஆயுதக்களைவுக்கு இன்றியமையாததாக உள்ளது என்றும் உரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், அணுப் பரிசோதனை முற்றிலும் நிறுத்தப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அணுப் பரிசோதனை தடை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நண்பர்கள்”(CTBT) அமைப்பு, ஜப்பான், ஆஸ்திரேலியா, கானடா, ஜெர்மனி, ஃபின்லாந்து, நெதர்லாந்து ஆகிய ஆறு நாடுகளால் 2002ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
செப்டம்பர் 21, இப்புதனன்று நடைபெற்ற இவ்வுயர்மட்டக் கூட்டத்தில் இந்த ஆறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, அணுப் பரிசோதனை தடை புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதற்கு இசைவுதெரிவித்தனர்.
2002ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட இவ்வொப்பந்தம், அணுப் பரிசோதனைகளின் அனைத்து முறைகளையும் தடைசெய்கிறது. இது நடைமுறைக்கு வருவதற்கு 44 நாடுகள் கையெழுத்திட்டு அமல்படுத்தியிருக்கவேண்டும்.
ஆயினும் சீனா, பாகிஸ்தான், இந்தியா, ஈரான், இஸ்ரேல், வட கொரியா, அமெரிக்க ஐக்கிய நாடு எகிப்து ஆகிய எட்டு நாடுகள், அதில் கையெழுத்திடுவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்