இந்தோனேசிய புத்த மதத்தினர் இந்தோனேசிய புத்த மதத்தினர் 

புத்த மதத்தினரின் வேசாக் விழாவுக்கு திருப்பீடம் வாழ்த்து

சமுதாய அறநெறி வாழ்வில் பின்னடைவு தெரிந்தாலும், அவற்றுக்கு மத்தியில், மதங்கள் நம்பிக்கையின் விளக்குகளாகத் தெரிகின்றன – திருப்பீட பல்சமய அவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

"புத்த மதத்தினரும், கிறிஸ்தவர்களும்: நம்பிக்கையை மீண்டும் கொணர்வதில் ஒன்றிணைதல்" என்ற தலைப்பில், திருப்பீட பல்சமய அவை, புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து புத்த மதத்தினருக்கும் நல்வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.

மே 6, வருகிற வெள்ளிக்கிழமையன்று உலகெங்கும் வாழ்கின்ற ஏராளமான புத்த மதத்தினர், கௌதம புத்தரின் பிறப்பு, அவர் ஞானஒளிபெற்றது, அவரது இறப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வேசாக் (Vesakh) விழாவுக்கென்று, மே 01, இஞ்ஞாயிறன்று திருப்பீட பல்சமய அவை, புத்த மதத்தினருக்கு நல்வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளது.

மனிதகுலம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறது

மூன்றாவது ஆண்டாக, தொடர்ந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவல், சூழலியல் மாற்றத்தால் அடிக்கடி இடம்பெறும் இயற்கைப் பேரிடர்கள், அப்பாவி மக்களின் உயிர்களைக் காவுகொள்ளும் போர்கள் என, மனித சமுதாயம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், வன்முறைக்கு நியாயம் சொல்ல, மதத்தைப் பயன்படுத்தும் கவலையான சூழலும் இன்றும் நிலவுகிறது என அச்செய்தி கூறுகிறது.

மனித சமுதாயம், அறிவியலிலும் சிந்தனையிலும் முன்னேறி வருகிறது என பெருமைப்பட்டுக்கொள்கிறது, ஆனால், அமைதியைக் கொணர்வதில் பின்னோக்கிச் செல்கிறது என்று கவலையோடு உரைத்துள்ள திருத்தந்தையின் சொற்களையும் திருப்பீட பல்சமய அவை, தன் செய்தியில் நினைவுகூர்ந்துள்ளது.   

கடுந்துயரங்களுக்கு மத்தியில் ஒருமைப்பாட்டுணர்வு அதிகம் உருவாகியுள்ளது எனவும், சமுதாய அறநெறி வாழ்வில் பின்னடைவு தெரிந்தாலும், அவற்றுக்கு மத்தியில், மதங்கள் நம்பிக்கையின் விளக்குகளாகத் தெரிகின்றன எனவும் அச்செய்தி கூறுகிறது.

செல்வத்தைத் தேடுதல் மற்றும், ஆன்மீக விழுமியங்களைக் கைவிடுதல் ஆகியவற்றால், சமுதாய அறநெறி வாழ்வு குறைந்துவரும் இவ்வேளையில், ஒப்புரவு மற்றும், இன்னல்களிலிருந்து வெளிவருவதற்கு ஏற்படும் மக்களின் ஆர்வத்திற்கு உதவுவதில் புத்த மதத்தினரும், கிறிஸ்தவர்களும் கடமையுணர்வுடன் செயல்படுமாறு அச்செய்தி அழைப்புவிடுக்கிறது.

பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வு என நற்செய்தி ஒருபோதும் பரிந்துரைத்தது கிடையாது என்றும், சிறந்ததோர் வருங்காலத்தைக் கட்டியெழுப்ப புத்த மதத்தினரும், கிறிஸ்தவர்களும் ஒன்றித்து செயல்படுமாறும் அச்செய்தி அழைப்புவிடுக்கிறது

திருப்பீட பல்சமய அவையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்களும், அதன் செயலர் பேரருள்திரு Indunil Janakaratne Kodithuwakku Kankanamalage அவர்களும் கையெழுத்திட்டு இச்செய்தியை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, திருப்பீட பல்சமய அவை, தீபாவளி, இரமதான், வேசாக் போன்ற விழாக்களுக்கு, அந்தந்த மதத்தினருக்கு நல்வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2022, 15:37