காலநிலை மாற்றம், அனைத்து மக்களின் அழுகுரலுக்கு காரணம்

பூமியின் அழுகுரலை ஏழைமக்களின் அழுகுரலோடு இணைத்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுவரும் இயற்கைப் பாதுகாப்பு முயற்சிகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்துள்ள உலக வெப்பமயமாதல் என்பது, பூமி மற்றும் ஏழைகளின் அழுகுரலுக்கு காரணமாக இருந்தது, தற்போது, அனைத்து மக்களின் அழுகுரலுக்கு காரணமாக விரிவடைந்துள்ளது என்ற கவலையை வெளியிட்டார், வத்திக்கானின் அறிவியல் ஆலோசகர் வீரபத்ரன் இராமநாதன் (Veerabhadran Ramanathan).

2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் திருப்பீட அறிவியல் கழகத்தின் அங்கத்தினராக நியமிக்கப்பட்டு, 2015ம் ஆண்டு பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற COP21 உலக உச்சி மாநாட்டிற்கு திருப்பீடக் குழுவின் அறிவியல் ஆலோசகராகச் செயல்பட்ட வீரபத்ரன் அவர்கள், இவ்வாண்டின் COP26 உலக உச்சி மாநாட்டிற்கு முன்னர் இவ்வாறு கூறினார்.

தமிழகத்தில் பிறந்து தற்போது, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் தியெகோ கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் வீரபத்ரன் அவர்கள், அக்டோபர் மாதம் 31ம் தேதி முதல், நவம்பர் 12ம் தேதி வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெறவுள்ள, காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கிற்கு முன்னோடியாக வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய பேட்டியில், இதுவரை எடுக்கப்பட்டு வந்துள்ள தீர்மானங்கள் நடைமுறைக்குக் கொணரப்படவில்லையெனில், காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்கள் 50 விழுக்காடு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என எச்சரித்தார்.

இயற்கை அன்னையை நாம் காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை அப்பூமியே நமக்கு பலமுறை எடுத்துரைத்துள்ளபோதிலும், வெப்பமயமாதல் குறித்து கவலைப்படாமல் இருந்தது, தற்போது எத்தகைய விளைவுகளைக் கொணர்ந்துள்ளது என்பதை நாம் நேரடியாகவே கடந்த 10, 15 ஆண்டுகளில் கண்டுவருகிறோம் என்ற அறிவியலாளர் வீரபத்ரன் அவர்கள், ஒவ்வோர் ஆயிரம் ஆண்டுகளுக்கும், 500 ஆண்டுகளுக்கும் என இடம்பெற்றுவந்த காலநிலை மாற்றப் பாதிப்புகள் தற்போது பத்து ஆண்டுக்கு இருமுறை என நடந்துவருவதைக் காண்கிறோம் என மேலும் கவலையை வெளியிட்டார்.

வறண்ட நிலங்கள் மேலும் வறண்டுவருவதும், மழை பொழியும் இடங்கள் அதிக மழையால் வெள்ளப்பெருக்காகி வருவதும் நாம் இன்று கண்டுவரும் உண்மை நிலைகள் என எடுத்துரைத்தார், வீரபத்ரன்.

பூமியின் அழுகுரலை ஏழைமக்களின் அழுகுரலோடு இணைத்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுவரும் இயற்கைப் பாதுகாப்பு முயற்சிகளை, தான் பெரிய அளவில் பாராட்டுவதாகவும் தெரிவித்தார், அறிவியலாளர் வீரபத்ரன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2021, 14:49