ஏமன் நாட்டின் மோதல்களால் புலம்பெயர்ந்து கூடாரங்களில் வாழும் மக்கள் ஏமன் நாட்டின் மோதல்களால் புலம்பெயர்ந்து கூடாரங்களில் வாழும் மக்கள் 

புலம்பெயர்ந்தோர் குறித்து திருப்பீடம் கவலை

பெருந்தொற்றின் காரணமாக, பல நாடுகள் தங்கள் எல்லைகளை முற்றிலும் மூடிவிட்ட நிலையில், பல்லாயிரம் புலம்பெயர்ந்தோர், நாடற்ற, வீடற்ற ஒரு பரிதாப நிலையில் வாழவேண்டியுள்ளது - திருப்பீடத்தின் கவலை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாடுவிட்டு நாடு புலம்பெயரும், மற்றும், குடிபெயரும் மக்கள், வெறும் எண்ணிக்கைகள் அல்ல, மாறாக, அவர்கள் ஒவ்வொருவரும் நம் சகோதரர், அல்லது, சகோதரி என்று, ஐ.நா.வின் பன்னாட்டு கூட்டம் ஒன்றில், திருப்பீடம் தன் எண்ணங்களை வெளியிட்டது.

ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் உயர்மட்டக் குழுவான UNHCR என்ற அமைப்பு, ஜெனீவாவில் நடத்திய 81வது கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்றோர், இவ்வாரம் திங்களன்று நிகழ்ந்த அமர்வில், தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களால் உலகெங்கும் பரவியிருந்த புலம்பெயந்தோர் பிரச்சனை, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இன்னும் அதிகமாக வளர்ந்திருப்பதையும், இந்த நெருக்கடி வேளையிலும் தங்கள் நாட்டைவிட்டு புலம்பெயரும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவோர் கூடுதல் ஆபத்தில் இருப்பதையும் திருப்பீடம் சுட்டிக்காட்டியது.

பெருந்தொற்றின் காரணமாக, பல நாடுகள் தங்கள் எல்லைகளை முற்றிலும் மூடிவிட்ட நிலையில், பல்லாயிரம் புலம்பெயர்ந்தோர், நாடற்ற, வீடற்ற ஒரு பரிதாப நிலையில் வாழவேண்டியுள்ளது என்று திருப்பீடம் தன் கவலையை வெளியிட்டது.

புலம்பெயர்தல் என்ற பிரச்சனையை உருவாக்கும் காரணங்களை அறிந்து, அவற்றை நீக்குவதற்கு, பன்னாட்டு அரசுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும், கோவிட் பெருந்தொற்று காலத்தில், புலம்பெயர்ந்தோரும் நலவாழ்வு உரிமைகளைப் பெற்றவர்கள் என்பதை அனைவரும் உணரவேண்டும் என்பதையும், தன் விண்ணப்பங்களாக, திருப்பீடம், UNHCR கூட்டத்தில் பதிவுசெய்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2021, 13:51