லெபனானில் அரசுக்கு எதிராகப் போராட்டம் லெபனானில் அரசுக்கு எதிராகப் போராட்டம் 

ஜூலை 01, 2021, லெபனானுக்காக இறைவேண்டல்

லெபனான் நாட்டில் அரசு அமைக்கப்பட்டபின், 2022ம் ஆண்டில் அந்நாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளக்கூடும் - பேராயர் காலகர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாட்டில், அமைதி மற்றும், நிலையானதன்மை ஆகியவை நிலவவேண்டும்  என்பதற்காக, இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் லெபனான் கிறிஸ்தவத் தலைவர்களுடன் இணைந்து நடத்தவுள்ள, ஒருநாள் இறைவேண்டல், மற்றும், கலந்துரையாடல் குறித்து, ஜூன் 25, இவ்வெள்ளியன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

இச்செய்தியாளர் கூட்டத்தில் முதலில் பேசிய, கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல், மற்றும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகிய இருவர் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, தற்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இறைவேண்டல் நிகழ்வை தலைமையேற்று நடத்தவுள்ளார் என்று கூறினார்.

ஜூலை மாதம் முதல் தேதி நடைபெறவிருக்கும் இறைவேண்டல் நிகழ்வு, திருத்தந்தை, லெபனான் கிறிஸ்தவத் தலைவர்கள், திருஅவை குழுமங்கள் ஆகியோருக்கு இடையே இடம்பெறும், தொடர்ந்து "ஒன்றுசேர்ந்து நடத்தல்" என்பதாக இருக்கும் என்று, கர்தினால் சாந்த்ரி அவர்கள் கூறினார்.  

இதில் பங்குகொள்ளும் அனைவரும், இவ்வாண்டு ஜூன் 30ம் தேதியிலிருந்து, ஜூலை 2ம் தேதி வரை வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் கூடுவார்கள் என்றும், அவர்கள் இந்நாள்களில் வெளியுலகத் தொடர்புகள் ஏதுமின்றி இருப்பார்கள் என்றும் உரைத்த கர்தினால் சாந்த்ரி அவர்கள், பங்குத்தளங்களிலும், துறவு இல்லங்களிலும், செபத்தில் தங்களோடு ஒன்றித்திருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

பன்னாட்டு வெளியுறவு திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள் விளக்குகையில், லெபனான் நாட்டில் அரசு அமைக்கப்பட்டபின், 2022ம் ஆண்டின் முதல்பகுதியில் அந்நாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளக்கூடும் என்று அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2021, 15:42