ஆயர் Juan Ignacio Arrieta ஆயர் Juan Ignacio Arrieta  

திருஅவை சட்டத் தொகுப்பு நூல் VIல் மாற்றங்கள்

திருஅவையில் குற்றங்களுக்கு சரியான முறையில் தண்டனை வழங்குவது ஆயர்களின் கடமையாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் “Pascite Gregem Dei” அதாவது, கடவுளின் மந்தையை மேய்ப்பாயாக என்ற திருத்தூது கொள்கை விளக்க ஏட்டை, திருஅவை சட்ட உரைகளுக்கு விளக்கமளிக்கும் திருப்பீட அவையின் செயலர் ஆயர் Juan Ignacio Arrieta Ochoa de Chinchetru அவர்கள், ஜூன் 01, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டார்

திருஅவை சட்டத் தொகுப்பின் 6ம் பகுதியில் குற்றவியல் சட்டத்தில் கொணரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த ஆயர் Arrieta அவர்கள், திருஅவையில் நிலவும் குற்றங்களைத் தடுக்கவும், அவற்றுக்குத் தண்டனை வழங்கவும் போதுமான வழிமுறைகளை ஆயர்களுக்கு வழங்குகின்றது என்று கூறியுள்ளார்.

1983ம் ஆண்டில் திருஅவை சட்டத்தொகுப்பு அறிவிக்கப்பட்ட சில காலத்திற்குள்ளாகவே, குற்றவியல் சட்டம் குறித்த வரையறைகள் வெளியாயின என்றும், சூழ்நிலைகளின் தன்மைக்கேற்ப, குற்றவாளிகளை எவ்வாறு தண்டிப்பது என்பது குறித்து தீர்மானிப்பதற்கு ஆயர்கள் மற்றும், தலைவர்களின் பொறுப்பிற்கு விடப்பட்டது என்ற கருத்து நிலவியது என்றும், ஆயர் Arrieta அவர்கள் தெரிவித்தார்.

திருஅவை சட்டத்தொகுப்பில் குற்றவியல் தண்டனை குறித்து, தற்போது கொணரப்பட்டுள்ள மாற்றங்கள் மூன்றைக் குறிப்பிட்டுள்ள ஆயர் Arrieta அவர்கள், சமுதாயங்களுக்குள் நிலவும் சில முறையற்ற சூழல்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, அண்மைக்காலங்களில் எழுந்துள்ள சிறார் பாலியலில் பயன்படுத்தப்படுவது தொடர்பான இழிநிலைகள், திருஅவை சட்டத்தின், குற்றவியல் தண்டனை பகுதியில் சீர்திருத்தம் கொணரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று விளக்கினார்.

பெண்களை அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்த முயற்சித்தல், ஒப்புரவு அருளடையாளங்களைப் பதிவுசெய்தல், திருநற்கருணையை அவமதித்தல் போன்ற விவகாரங்கள் தொடர்பாக, அண்மை ஆண்டுகளில் கொணரப்பட்ட சிறப்புச் சட்டங்களும், தற்போதைய மாற்றத்தில் இடம்பெற்றுள்ளன என்றும், ஆயர் Arrieta அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2021, 15:25